Srirangapankajam

July 19, 2008

PESUM ARANGAN-76

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 3:25 pm

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தம் நண்பரும், உதவியாளருமாகிய ஸ்ரீஉத்தவருக்கு கடைசியாக அளித்த சில விளக்கங்கள் ‘உத்தவ கீதை’ என்று அருளப்படுகின்றது. அதில் சில பதங்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் அருமையான விளக்கத்தினையளித்துள்ளார். இவையனைத்தும் ஸ்ரீராமானுஜருக்கும், ஸ்ரீபெரியநம்பிகளுக்கும் மற்றும் ஸ்ரீகூரத்தாழ்வானுக்கும் மிகவே பொருந்தும். அவற்றில் சில:

‘சமா’ என்பது ஞானத்தினால் என்னை (ஸ்ரீகிருஷ்ணரை) சார்ந்திருப்பது.

‘தமா’ என்பது இந்திரியங்களைக் கட்டுபடுத்துவது.

‘திதிக்ஷா’ என்பது உணவு, ஆசை, பொறாமை, உடலின்பம் போன்றவற்றைக் கட்டுபடுத்துதல்

“செல்வம்“ என்பது இறைவனின் அருளைப் பெறுதல்.

‘தர்மம்” என்பது உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் துன்பம் கொடுக்காமலிருத்தல்.

‘தவம்” என்பது எல்லா சுகங்களையும் விட்டுவிடுவது.

‘தியாகம்’ என்பது உலகப்பற்றைத் துறந்து சன்னியாசம் ஏற்றுக்கொள்ளல்.

‘இன்பம்” என்பது இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பார்த்தல்

‘அறிஞர்” என்பவர் பற்றிலிருந்து விடுபட்டு முக்தியடையும் வழியறிந்தவர்.

‘தலைவன்’ என்பவன் இந்திரியங்களால் துன்பப்படாதவன்.

உடையவர் கூரத்தாழ்வானிடத்துக் கூறுகின்றார். கருணை மிகுந்த பேரருளாளனிடத்து ‘கண் தந்தருளவேணும் என்று ஒரு ஸ்தோத்திரம் பண்ணும்’ என்று. ஆழ்வான் ‘அடியேனுக்கு இக்கண்கள் வேண்டா” என்று மறுக்கின்றார். எம்பெருமானார் இதனை ஒப்புக்கொள்ளாது பல நாட்கள் வற்புறுத்துகின்றார். ஆழ்வான் எம்பெருமானாரின் பிடிவாதத்திற்குப் பணிகின்றார். வரதராஜஸ்தவம் என்னும் ஸ்தோத்திரத்தினை அருளுகின்றார்.

ஸவஸ்தி ஹஸ்திகிரி மஸ்தஸேகரஸ் ஸந்தநோது மயி ஸந்ததம் ஹரி: !
நிஸ்ஸமாப்யதிகமப்யதத்தயம் தேவமௌபநிஷதீ ஸரஸ்வதீ !!

உபநிஷத் வாக்கானது எந்த தேவனை ஒக்காரும் மிக்காரும் இல்லாதவனாக ஓதுகின்றதோ, அத்திகிரியின் சிகரத்திற்கு ஆபரணமான அந்த ப்ரணதார்த்திஹர வரதன் அடியேனுக்கு எப்போதும் நன்மையை மிகுதியாக அருளுவானாக!.

நீலமேகநிபமஞ்ஜநபுஞ்ஜ ஸ்யாம குந்தலமநந்தஸயம் த்வாம் !
அப்ஜபாணிபதமம்புஜ நேத்ரம் நேத்ரஸாத்குரு கரீஸ ஸதாமே!!

அத்திகிரியப்பனே! கருமுகில் போன்றவனாய், மைவண்ண நறுங்குஞ்சிக்குழலையுடையவனாய், திருவனந்தாழ்வான் மீது சயனிப்பவனாய், தாமரைப் போன்ற திருக்கைகளையும், திருவடிகளையும் உடையவனாய், தாமரைப்போன்ற திருக்கண்களையுடையவனான உன்னை எப்போதும் என் கண்ணுக்கு இலக்காக்குவாயாக!.

என்று ஸ்தோத்திரம் செய்து பிரார்த்திக்கின்றாh;. அன்றிரவே ஆழ்வானுக்கு பேரருளாளனும் ஸ்வப்நத்தில் ஸேவை சாதித்து ‘தந்தோம்” என்றருளுகின்றாh;. மறுநாள் ஆழ்வான் உடையவரிடத்து நடந்தததனைத்தையும் கூறுகின்றார். உடையவர் ஆழ்வானின் கைப்பற்றி ‘அங்கேறப் போவோம் வாரும்” என்று ஆழ்வானைக் கையைப் பிடித்துக்கொண்டு காஞ்சிபுரம் செல்கின்றார்.
(இங்கிருக்கும் தஞ்சாவூருக்கு பஸ்சில் பயணிப்பதற்கே நாம் எவ்வளவு அலுப்புக் கொள்கிறோம். இருவருமே ஏறத்தாழ இராமனுஜருக்கு 114 வயது கூரத்தாழ்வானுக்கு 122 வயதிருக்கும், கனவில் பேரருளாளன் வந்தார் என்றவுடனே காஞ்சிபுரம் கிளம்புகின்றார்களே! இதெல்லாம் இப்போதுள்ள சூழ்நிலையில் உங்களால் நினைத்துப் பார்க்க முடிகின்றதா!?) பேரருளாளன் முன்பு வரதராஜஸ்தவத்தினை வரதனின் மீது அன்புப்பெருக்கெடுத்து சமர்ப்பிக்கின்றார் ஆழ்வான்.
எம்பெருமானார் ஆழ்வானை விட்டு கோவிலின் வேறொருபுறம் சென்றிருக்கும் போது பேரருளாளன் ஆழ்வானின் முன்பு பிரதயட்சமாகின்றார். ‘ஆழ்வான்! நீர் வேண்டுவதென்!’ என்றருளுகின்றார் என்னவோ எதுவுமே அறியாதவர் போன்று!. கூரத்தாழ்வான் தன் சரீர உபாதை மறந்தார். எம்பெருமானார் எது குறித்து ஆழ்வானை வற்புறுத்தினாரோ அதையும் மறந்தார். தம்மையும் பெரியநம்பிகளையும் உடையவரையும் காட்டிக்கொடுத்த அந்த நாலூரனைப் பற்றி நினைத்தார். அவன் செய்த வினைகளுக்கு அவன் படப்போகும் கெடுதல்களை நினைத்தார். வைணவனும் சரி வைணவமும் சரி ஒருக்காலும் துன்பம் அனுபவிக்கக்கூடாது என்ற வாத்ஸல்யம் பெருக்கெடுத்தோட ‘ நான் பெற்ற பேறு அந்த நாலூரானும் பெற வேணும்!” என்று விண்ணப்பம் செய்தார். அருளாளன் ‘அப்படியே பெறக்கடவன்” என்றருளி மறைந்தார். கூரத்தாழ்வான் செய்தது கருணையின் உச்சக்கட்டமாகும். நன்னயம் என்ற பதத்தின் மிக உன்னதமான அர்த்தம். இதனைக்கேட்டு உடையவர் பதறி ஓடி வருகின்றாராம்.
‘நான் வருவதற்கு முன்னே இப்படி செய்தாயே” என்று இருவரிடத்திலும் வருத்தப்படுகிறார். பேரருளாளன் ‘நம்மையும் உம்மையும் காணுமிடத்து தம் அகக்கண்ணாலே காணக்கடவர்” என்று அருளுகின்றார். ஆழ்வானும் அவ்விதமே வரதனை ஸேவித்து வரதனின் திவ்யாபரணங்களைப் பற்றிக் கூறக்கேட்ட உடையவர் மிகவே அகமகிழ்கின்றார்.

‘நான் பெற்ற பெருஞ்செல்வம் நாலூரான் பெறும் வரம் வேண்டும்
ஊன் பெற்றுக் கிடைத்த பலம் அடியேனுக்குறுதி நின்னைத்
தான் பெற்றேன் இனிப் பேறு வேறுண்டோ தனிமுதலே
தேன் பெற்ற துழாய் மாலை வேண்டி விரும்பி அணிபவனே திருமாலே!

என்று அழகாய் வர்ணிக்கின்றார் ஸ்ரீராமானுஜ வைத்தில் ஸ்ரீவடிவழகிய நம்பி தாஸர்.

எம்பெருமானார் காஞ்சியிலே ஆழ்வாராதிகளை இந்த சமயத்தின் போது பிரதிஷ்டை செய்தருளி மதுராந்தகம் சென்று ஸேவித்து திருவரங்கம் திரும்புகின்றார் கூரத்தாழ்வானுடன். பின்னர் திருவரங்கத்தில் கூரத்தாழ்வார் ‘ஸ்ரீஸ்தவம்’ என்னும் க்ரந்தத்தினையும் அரங்கேற்றம் செய்கின்றார். கூரத்தாழ்வான் அருளிய, ஸ்ரீவைகுண்டஸ்தவம், அதிமானுஷஸ்தவம், சுந்தரபாஹூஸ்தவம், வரதராஜஸ்தவம், ஸ்ரீஸ்தவம் ஆகிய ஐந்து க்ரந்தங்களும் ‘பஞ்சஸ்தவம்’ என்று புகழ்பெற்று அவை ஐந்தும் வேதமாதாவின் திருமாங்கல்யம் என்று போற்றப்படுகின்றது. இவற்றைத் தவிர அவர் ‘அபிகமனஸாரம்’, ‘புருஷசூக்த பாஷ்யம்’, ‘ஸாரீரக ஸாரம்” ஆகிய க்ரந்தங்களையும் வைணவ உலகிற்கு அளித்தார்.

ஒரு மனிதன் எப்போது நன்கு பக்குவப்படுவான்? எவ்வளவுக்கெவ்வளவு கஷ்டப்படுவானோ அவ்வளவுக்கவ்வளவு பக்குவமும் படுவான். பக்குவமடைந்தவனை பலவீனப்படுத்துவதென்பது இயலாததாகும். கூரத்தாழ்வான் அருளிச்செய்த பஞ்சஸ்தவங்களுமே அவர் கஷ்டப்பட்ட போது அருளிச்செய்தவைதாம். அவைகள் வைணவர்களின் பொக்கிஷம். நம் கஷ்டங்களை போக்க அவர் கஷ்டப்பட்டபோது பாடி அவர் நிதர்சனமாக பலனடைந்ததை உலகிற்குக் காட்டி நமக்காக விட்டுப்போன ஓளடதம்!

=============

கோஷ்டிபுரம் ஸ்வாமிகள் என்று ஒரு பெரிய மஹான். நன்கு சம்பிரதாயம் மற்றும் ஆகமம் அறிந்தவர். கோவையில் வாசம் செய்து கொண்டிருந்தார். ஒரு சமயம் ஸ்ரீரங்கத்திற்கு வருகைப் புரிந்தார். தெற்கு கோபுரம் வழியே நான்முகன் கோட்டைவாசல் நுழைந்து பெரிய கருடன் ஸந்நிதியின் பின்புறம் தள்ளாது நடந்து வந்து கொண்டிருந்தார். ஏறத்தாழ வயது 78 அல்லது 79 வயதிருக்கும் ! வந்தவர் திடிரென கீழே தடுக்கி விழுந்து விட்டார். கால் நரம்புகள் ஒடிந்து விட்டது. வலி அவரால் தாங்க முடியவில்லை. ஆயினும் அரங்கனைத் தரிசியாமல் திரும்பிப்போக மனமில்லை. நான் அப்போது மூலஸ்தானத்திலிருந்தேன். கேள்விப்பட்டு பதறியடித்து ஓடி வந்தேன்! அந்த வலியிலும் அவர் அரங்கனைத் தரிசிக்கத் துடிக்கின்றார்.

ஒரு நாற்காலியொன்றை ஏற்பாடு செய்து அதில் அவரை எழுந்தருளப்பண்ணி அவரை அப்படியே தூக்கிக் கொண்டு நம்பெருமாள் முன்பு கூட்டத்தினைத் தேக்கி ஸேவைப் பண்ணி வைத்தேன். இவர் தேம்பி அழுகின்றார் தாம் அமர்ந்து கொண்டு பெருமாளை ஸேவிக்கின்றொமே என்றெண்ணி!. நான் அவர் சற்றே ஆறுதலடையட்டும் என்று, “ஸ்வாமி! தேவரீருக்கு ஏற்பட்ட பெருத்த கண்டம் ஒன்று அரங்கன் திருமுற்றத்தில் நீர் இருந்தபடியால் இந்த விபத்தோடு போயிற்று. அரங்கன் மீண்டும் நன்கு நடக்க வைத்து தேவரீர் மறுபடியும் தெம்பாக நடந்து வந்து இக்குறை நீங்கும் படியாக ஸேவிப்பீர். அடியேனும் அரங்கனிடத்து பிரார்த்திக்கின்றேன் “ என்றேன்.

அவர் தாம் அபசாரப்பட்டு விட்டோமோ என்று கண்ணீர் சிந்தியபடியே கோவைத் திரும்பினார். அந்த வயதிலும் ஆச்சர்யபடும்படியாக கால் நரம்புகள் ஒன்று கூடின. ஒரு வருடத்திற்குள் அரங்கன் திருவுள்ளப்படியே ஸ்ரீரங்கம் வந்தடைந்தார். கோவிலுக்குள் நடந்து வரும் போது நான் அவர் போனமுறை ஸேவித்தப் போது கூறிய வார்த்தைகளை நினைவு கூர்ந்தபடியே வந்தார். தம் கண்கள் குளிர ஆனந்த கண்ணீரோடு, நெஞ்சு நிறைவோடு அதுதான் கடைசி என்றறிந்தாரோ என்னவோ நம்பெருமாளைப் பிரிய மனமின்றி மூலஸ்தானத்தின் அருகிலேயே நின்று வெகுநேரம் தரிசனம் செய்தார். திரும்பக் கோவைச் சென்றவர் சிறிது நாட்களுக்குள் பரமபதித்தார்.

-Posted on 18th July’2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: