Srirangapankajam

July 18, 2008

PESUM ARANGAN-75

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:38 pm

21 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீரங்கம் வந்தடைந்த எம்பெருமானார் காவிரியில் நீராடுகின்றார். ஸ்ரீரங்கமே திரண்டு எதிர்கொண்டு அழைக்கின்றது ஆனந்தமயமாக, ஆனந்தக் கண்ணீரோடு!. அவர்களையெல்லாம் கிருபையோடு ஆசீர்வதித்து அழகிய மணவாளன் திருமண்டபம் சென்று தண்டன் சமர்ப்பித்து, பெரியபெருமாளையும் நம்பெருமாளையும் திருவடி தொழுது, மனமுருகி,  கண்கள் துளிக்கக் கண்ணாலேப் பருகி, வாயார வாழ்த்தி நிற்கின்றார்.   நம்பெருமாள் தம் திருப்பவளச் செவ்வாய் திறந்து, அபூர்வமாக(பெரும்பாலும் கனவில்தானே பேசியிருக்கின்றார்!?), நேரடியாக உடையவரை நோக்கி, ‘நெடுநாள் தேசாந்திரத்திற் சென்று போரமெலிந்தீரே?’ என்று வினவுகின்றார். ‘அகமகிழும் தொண்டர்கள் வாழ அன்போடு தென்திசை நோக்கி தேவரீர் பள்ளி கொண்டருளுகையாலே வன்பெரு வானகத்தில் செல்லும்படியே உபயவிபூதியிலுள்ளார்க்கும் என்ன க்லேசமுண்டு?” என்கிறார்.

ஏன் எனக்கு இவ்வளவு துன்பம் தந்தாய் அரங்கா! என்று அரற்றவில்லை.   ஆதிநாயகனாகிய அரங்கா நீ இருக்கும்போது துன்பமேது எனக்கு! என்றே போற்றுகின்றார்.   பெருமாளும் உகந்து தீர்த்தம், திருமாலை, திருப்பரிவட்டம், தளிகை பிரஸாதங்களும் உடையவருக்கு அர்ச்சகமுகனே சாதிக்கின்றார்.  உடையவர் அதனை ஏற்று க்ருதார்த்தராய் திருக்கண்கள் பனிக்க அஞ்சலிஹஸ்தராய் வைத்த கண்கள் வாங்காது அரங்கனை தம் மனதினுள் வாங்கி ஸேவிக்கின்றார். அரங்கன் அகமகிழ்ந்து, ‘மடமே போம்” என்று விடைக் கொடுக்கின்றார்.

கோவில் முழுதும் அங்காங்கே சுற்றி ஸேவித்த வண்ணம் ஆழ்வான் திருமாளிகையடைகின்றார்.   ஆழ்வான் நெடுஞ்சாண்கிடையாக உடையவரின் பாதத்திலே விழுந்து ஸேவிக்கின்றார்.   உடையவர் வாரி அணைக்கின்றார். இருவரும் ஏதும் பேசமுடியாது விம்மி பொருமுகின்றனர்.   பிரிந்தவர் கூடி பேசவும் தோன்றாது தவிக்கின்றனர்.      துக்கம் மேலிட நாத்தழுதழுக்கின்றது. ”த்ருஷ்டிபூதரான உமக்கு இப்படி கண்போவதே!” என்று திக்குகின்றார். அதற்கு கூரத்தாழ்வான், ‘யாராவது ஒரு வைணவரின் நெற்றியிலுள்ள திருமண்காப்பினைப் பார்தது கோணலாகயுள்ளதே என்று நினைத்திருப்பேனோ என்னவோ’ என்று பதிலுரைக்கின்றார். உடையவர், ‘அது உமக்கு உண்டோ? அடியேன் துஷ்கர்மமன்றோ உமக்கு இப்படி நேர்ந்ததற்கு காரணமாயிருந்தது!’ என்று திருவுள்ளம் புண்பட்டு வருந்துகின்றார். ஒருவாறு தேறி மடத்திற்குத் திரும்புகின்றார்.

மடத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும், ‘பெரியநம்பி திருநாட்டுக்கு எழுந்தருளினார்! ஆழ்வானுக்கும் கண்பார்வை போயிற்று, தேவரீரையாகிலும் ஸேவிக்கப் பெற்றோமே!” என்று ஆறுதலைகிடைகின்றனர்.    திருச்சித்ரகூடம் அழிந்து அங்குள்ள உற்சவர் திருப்பதியில் எழுந்தருளியது குறித்தும் விண்ணப்பிக்கின்றனர்.    உடையவர் விரைகின்றார் திருப்பதிக்கு.

அங்கு மூலவராக கோவிந்தராஜப் பெருமாளையும், திருச்சித்ரகூடம் விக்ரஹத்தினை உற்சவராகவும் (கி.பி. 1130 – உடையவருக்கு வயது 113) ஸ்தாபிதம் செய்கின்றார்.  ‘தென்தில்லைச் சித்திரகூடத் தென்செல்வனை, மின்னிமழை தவழும் வேங்கடத் தென்வித்தகனை” என்ற திருமங்கை மன்னனின் பாசுரவரிகள் மெய்ம்மொழியாக இப்படி பலிப்பதே என்று பரவசப் படுகின்றார்.    திருமலைச் சென்று திருவேங்கடமுடையானைத் தரிசித்து, பேரருளாளனையும் வரும் வழியில் கண்குளிர ஸேவித்து திருவரங்கம் திரும்புகின்றார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வேம்கடபுரம் ஸ்ரீகாரண கரிவரதருக்கு அரையர் ஸேவையும் காண விருப்பம் போலும்!
இத்தொடர் குறித்து இளையாழ்வாருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வமயம் அவர் ‘எனக்கு ஸ்ரீகாரணருக்குக் கூட அரையர் ஸேவை செய்யவேண்டுமென்று ஆசையாயுள்ளது. அதற்காக ஜலதாம்பேட்டிற்குச் சென்று அங்குள்ள திருநாராயணரையும் ஸேவித்து,  அந்த பாடசாலையில் எம்மக்கள் யாரையாவது தயார் செய்ய முடியுமா?’ என்று விசாரிக்கப் போகிறேன் என்கின்றார்.

சிறிது நேரம் கழித்து ஏகலைவன் போன்று அரையர் ஸேவை ஓரளவு கற்றறிந்த என் இனிய நண்பன் திரு மதுசூதனனிடமிருந்து ஒரு அழைப்பு. எனக்கு ஒரு நாள் கோவைச் சென்று ஸ்ரீகாரணரைத் தரிசித்து அரையர் ஸேவையும் செய்ய வேண்டுமென்று ஆசை சுவாமி”. இந்த எண்ணம் இரண்டு நாட்களாக வலுவாகத் தாக்குகின்றது

என்கிறார்.

ஸ்ரீகாரணரின் திருவுள்ளம் அறிந்தேன். இருவரது செல்போன் நம்பர்களையும் இருவருக்கும் பரஸ்பரம் தந்து பேசச் சொன்னேன்.    விரைவில் அரையர் ஸேவையும் ஸ்ரீவரதன் கண்டருளுவார்!.
 

 
                                                        -Posted on 16th July’2008-
 

 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: