Srirangapankajam

July 16, 2008

PESUM ARANGAN-74

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 4:55 pm

துர்முகி ஆண்டு (கி.பி 1116) ஒரு துர்குணத்தின் உச்சத்தினை புழுகழுத்தனாக்கிக் கொன்றது. மாறொன்றில்லா மாருதி சிறியாண்டானும், அம்மங்கி அம்மாளும் கூரத்தாழ்வான் பற்றியும், கிருமிகண்ட சோழனையும் பற்றிச் சொன்னவுடன் எம்பெருமானார் நடந்தவற்றையெல்லாம் நினைந்து வருந்தி, மன்னனின் மறைவு குறித்து சிலாகித்து இந்த விசேஷத்தினைக் கூறிய அவர்களுக்கு ‘இவர்களுக்கு கனக்க கொடுக்கலாவது, த்வயமல்லது இல்லை’ என்று நிச்சயித்து த்வயத்தையே அவர்களுக்கு பரிசிலாக உபதேசித்து அருளினார்.

கிருமிகண்ட சோழனின் மகன் விக்ரம சோழன் தந்தையின் செயலுக்காக மிக மிக வருந்தி எம்பெருமானரையே திரும்ப ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து கோவில் நிர்வாகத்தினை அவரிடத்தேயே ஓப்படைக்கக் காத்திருக்கும் செய்தியினை நடாதூர் ஆழ்வான் எம்பெருமானாருக்கு தெரிவிக்கின்றார். உள்ளம் குளிர்ந்த உடையவர் அவருக்கும் த்வயத்தினையேக் கடாக்ஷித்து அருளுகின்றார்.

முதலியாண்டானைக் கொண்டு ஹேவிளம்பி (கி.பி.1117) சித்திரை, திரயோதசி, சனிக்கிழமை, அஸ்த நட்சத்திரத்தில் ஒரே முகூர்த்தத்தில் ஸ்ரீகீர்த்தி நாராயணன், ஸ்ரீமந் நாராயணன், வீர நாராயணன், விஜய நாராயணன், கேசவ நாராயணன் ஆகிய பஞ்ச நாராயணரை கோவில்களில் பிரதிஷ்டை செய்கின்றார். முதலியாண்டான் ‘பஞ்சநாராயண பிரதிஷ்டபனாச்சார்யார்” என்ற பெயரினை அடையப் பெற்றார்.

12 ஆண்டுகளாக செல்வப்பிள்ளையைத் தன் செல்லப்பிள்ளையாகக் கருதி பல்வேறு கைங்கர்யங்கள் செய்து திருநாராயணபுரத்தினை கோலாகலமாக்கிய எம்பெருமானார் திருவரங்கம் திரும்ப எண்ணினார். அங்கிருந்தோர் எல்லாரும் இவரது முடிவினைக் கண்டு துடித்தனர். தன்னுடைய விக்ரஹத்தினை ஒன்றினை வார்ப்பித்து தன் ஜீவ சக்தியினை அதனுள் செலுத்தி
ஜீவப் பிரதிஷ்டை செய்து அதற்கு ‘தமர் உகந்த திருமேனி’ என்று திருநாமமிட்டு அவர்கள் அனைவரும் சமாதானமடையும் படி அருளுகின்றார்.

திருநாராயணரிடத்து, ‘இனி அடியேன் கோயிலேறப் போய் வருகிறேன்” என தழுதழுத்து விம்மி வெடித்து விண்ணப்பம் செய்கின்றார். கோவிலே கதறுகின்றது. திருநாராயணரின் திருவடிகளைப் பற்றி கண்ணீர் அதில் தெளிக்க முகந்து விழுவதும், எழுவதும், தொழுவதும் சிறிதுநேரம் செய்வதறியாது சின்னப்பிள்ளைப் போன்று தேம்புகின்றார்.

அங்குள்ளோரிடத்து, ‘செல்லப்பிள்ளை கிணற்றின் கரையில் பிள்ளையாயிருக்கும்! பேணிக்கொண்டு போருங்கள்” (கிணற்றடியில் நீச்சல் தெரியாது விளையாடும் குழந்தையை எப்படி ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வீர்களோ – அப்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்!) என்கிறார். (ஒவ்வொரு அர்ச்சகனுக்கும் இன்றும் இந்த அறிவுரைப் பொருந்தும்!)

அங்குள்ள கைங்கர்யபரர்களைப் பார்த்து, ‘நீங்கள் ஒருவருக்கொருவர் கோள் சொல்லாமலும், பகைமை பாராட்டாமலும், துவேஷமில்லாமலும், அந்யோந்யத்தோட ஒருமித்த கருத்துடையராய், ஸஹிருதயராய், ஊழிய கைங்கர்யங்களை மறவாதே பக்திபுரஸ்ஸரமாகப் பண்ணிப் போருங்கள்” என்று அருளுகின்றார். (எவ்வளவு வருடங்களுக்கு முன் அருளிய வார்த்தை இன்றளவும் பொருத்தமாயுள்ளது பாருங்கள். இன்று கைங்கர்யபரர்கள் படும் பல இன்னல்களுக்கும் இதனை கடைப்பிடிக்காதுதானேக் காரணமாயுள்ளது. அன்று ஒரு நாலூரான்தான் அரசனிடத்து இருந்தான். இன்று ஒரு கோவிலுக்கு நான்கு நாலூரான்கள் உள்ளனரே!)

செல்லப்பிள்ளையின் மேலுள்ள புத்ர வாத்ஸல்யம் அவரைப் பின்னே தள்ளுகின்றது. அரங்கனின் அருள் முகம் முன்னேத் தோன்றி அவரை திருவரங்கம் நோக்கி இழுக்கின்றது. இருதலைக் கொள்ளியாய் தவித்து, தவித்து கண்ணீரோடே எல்லோரிடத்தும் பிரியாவிடைப் பெற்று இந்த பிறவியில், கொடுமையான ஒருகாலத்தில் தன்னை இன்புற்றிருக்கச் செய்த திருநாராயணபுரத்தில், இதுதான் கடைசி தரிசனம் என்று நினைத்தாரோ என்னவோ? திருக்கண்கள் துளிக்க திவ்ய விமானத்தையும், திருச்சோலை எழிலையும், புஷ்கரிணியையும், திருமண் குவைகளையும், புஷ்கரிணியையும் கண்கள் விரித்து நோக்கி, அஞ்சலித்து மங்களாசாஸனம் பண்ணியவாறே மனம் தளர்ந்து நடை சோர்ந்து, தன்னுடைய 101வது வயதில், திருவரங்கம் நோக்கி பயணிக்கின்றார் உடையவர்.

++++++++++++++++++++++++++++

வேம்கடபுரம் ஸ்ரீகாரணனடிமை இளையாழ்வார் கண்ணயருகின்றார். ‘மூச்சு முட்ட விண்ணப்பம் செய்தனையோ’ என்று கனவில் ஸ்ரீகாரணர் கேட்கின்றார்.
இவருக்கு ஏதும் புரியவில்லை! எழுந்தவுடன் தலைவலி தாங்க இயலவில்லை. இது போன்று இரு வாரங்கள் இந்த கனவு நினைவுக்கு வருவதும் கடுமையான தலைவலி தொடர்வதும் தொடர்ந்தது. கோவிலுக்குச் சென்று பார்ப்போம் என்று செல்கின்றார். அங்குள்ள சேவார்த்திகளில் ஒருவர் மீது அருள் வருகின்றது. மறைத்ததை பார்த்தாயாடா? என்று அருள்வந்து கேட்கின்றார். அப்போதுதான் மூலஸ்தானத்தில் பழமையான ஒரு சின்னப் பெருமாள் வீற்றிருந்ததும், அது தற்சமயம் அங்கு இல்லாதிருப்பதும் பொறி தட்டினாற் போன்று இவருக்கு உரைக்கின்றது. உள்ளே சென்று கோவிலினுள் ஒரு அங்குலம் விடாமல் கவனமாக ஆராய்கின்றார். ஒரு பழமையான பல்லக்கு அதனுள் ஒரு பழைய துணிகள் மூட்டை. அதனடியில் உண்மையிலேயே மூச்சு விட முடியாமல் அந்த கர்மாச்சி போன்றுள்ள சிறு பழமையான விக்ரஹம்! கனவும் பலித்தது!. இவரைத் துரத்திய தலைவலியும் தொலைந்தது.

-Posted on 14th July’2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: