Srirangapankajam

July 13, 2008

PESUM ARANGAN-73

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:20 pm

உடையவர் திருநாராயணபுரத்திலிருந்த போது

ஸ்ரீரங்கத்தில் எம்பெருமானாரின் சீடர்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. கூரத்தாழ்வாரும், ஆண்டாளும் தனது குமாரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தோடு திருமாலிருஞ்சோலைக்குச் சென்றனர். செல்லும் வழியிலேயே ‘ஸ்ரீவைகுண்டஸ்தவம்’ மற்றும் ‘அதிமாநுஷஸ்தவம்’ போன்ற அருமையான க்ரந்தங்களை அருளிச்செய்தார். கண்பார்வையிழப்பினும் அங்கு அழகருக்கு புஷ்ப கைங்கர்யத்தினை செய்து வந்து கொண்டிருந்தார் ஏறத்தாழ தனது 90வது வயது முதல்!.

-திருக்கண்ணபுரத்தின் திருமதிற்சுவர்கள் இடிக்கப்பட்டன.

-திருச்சித்ரகூடம் அழிக்கப்பட்டது. மூலவரை பெயர்த்தெடுத்து கடலில் மூழ்கடித்தனர். அங்கிருந்த உற்சவ விக்ரஹத்தினை சில பாகவத உத்தமர்கள் படாதபாடுபட்டு காப்பாற்றி கீழ் திருப்பதியில் எழுந்தருளப்பண்ணி பூஜித்து வந்தனா;.

-திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலையாண்டான், திருவரங்கப் பெருமாளரையர், பெரியநம்பிகள், திருக்கச்சி நம்பிகள் போன்ற மஹனீயர்கள் பரமபதித்து விட்டனர்.

(இந்த வேதனையெல்லாம் எம்பெருமானார் பார்க்க வேண்டாம் என்றுதான் திருநாராயணன் அவரை தன்னிடத்தே ஆட்கொண்டு அருளினானோ?)

கண் பார்வையிழந்த கூரத்தாழ்வான் வைணவர்களின் கண்கள் போன்ற ஸ்ரீரங்கம் கோவிலில் எம்பெருமானாரின் சீடர்களுக்கு வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டதையடுத்து மிகவே வருந்தி. இதற்கெல்லாம் காரணமானவரை, கொடுங்கோல் சோழ மன்னனை, விரட்டியடிக்க வேண்டியும், எம்பெருமானாரின் நிழலிலே ஸ்ரீரங்கம் கைங்கர்யங்கள் குறைவற நடக்க வேண்டியும் ‘;சுந்தரபாஹூஸ்தவம்’ என்னும் அற்புதமான க்ரந்தத்தினை இயற்றி திருமாலிருஞ்சோலையானை, அழகனை மனமார பிரார்த்திக்கின்றார்.

மாறொன்றில்லா மாருதி சிறியாண்டான் (‘மாருதி என்று பெயரிருந்ததால்தான் உடையவர் இவரை தேர்தெடுத்திருப்பாரோ?’) விரைந்து திருமாலிருஞ்சோலை வந்தடைகின்றார். கூரத்தாழ்வானிடத்து சந்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கின்றார். இராமதூதனைக் கண்ட சீதையைப் போல சந்துஷ்டராகின்றார் கூரத்தாழ்வான். உடையவர் பிரபாவங்களையெல்லாம் விரிவாக எடுத்துரைக்கின்றார் மாருதி சிறியாண்டான்.

பெரியநம்பி நம்மிடையே இல்லாதது குறித்தும், தேவரீர் திருக்கண் பறிபோனதுப் பற்றியும் எம்பெருமானார் மிகவே துக்கிக்கின்றார் எனவும் உடையவரின் துக்கத்தினைத் தெரியப்படுத்துகின்றார்.

‘இந்த உலகுக்கே உயிர் போன்ற உடையவரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து, கேவலம் தன்னுடைய இரு கண்கள் அழிவினால் தப்பித்ததுக் குறித்து தாம் சந்தோஷமாகவேயிருப்பதாகச் சொல்லும்’ என்று அவரிடத்துக் கூறுகின்றார் ஆழ்வான். கூறும் போது பெரியநம்பி அடைந்த பாக்கியம் தாம் அடையவில்லையே என்ற ஏக்கமும் அடைகின்றார். என்னவொரு பக்குவம் பாருங்கள்! ஆஹா! இவரன்றோ விதேக கைவல்ய பூரணர்! (தேகப்பற்றொழிந்த பக்குவத்தினை அடைந்தவர்.) ஜீவன் முக்தர்!

நாராயணீயத்தில் பட்டத்ரி சொல்கின்றார்,

ப்ரக்ருதி கதகுணௌகைர் நாஜ்யதே பூருஷோயம்
யதி து ஸஜதி தஸ்யாம் தத்குணாஸ்தம் பஜோன்
மதனு பஜன தத்வாலோசனை: ஸாப்யபேயாத்
கபிலதனுரிதி த்வம் தேவஹூத்யை ந்யகாதீ
:
                                           நாராயணீயம் – தசகம் 15 – சுலோகம்:3

தேஹத்தின் தர்மம் இளைத்தல், பருத்தல், கிழத்தனம்,

மரணம் என்பன போன்றதாகும்.

பிராணனின் தர்மம் பசி, தாகமாகும்.

மனதின் தர்மம் மோகம், சோகம் போன்றன.

அக்ஞானத்தினால் ஜீவன், தேஹம் முதலியவற்றை நான் என்று பற்றுதலை அடைந்தானேயாகின் அந்த தேஹம் முதலியவற்றின் தர்மங்கள் அவனையடைந்து மீண்டும் மீண்டும் பிறப்பையும் இறப்பையும் கொடுக்கின்றது. அம்மாதிரியான கெடுதல் விலக்குவதற்காகவே பகவானைப் பூஜிக்க வேண்டும். வேதாந்த தத்வங்களை மஹான்களிடத்தில் ச்ரவணம் செய்து, மனனம் நிதித்யாஸனம் முதலியவைகள் செய்ய வேண்டுமென்று உபதேசித்தார்.

 

உயர்ந்த ரத்தினம் சாக்கடையில் கிடந்தபோதிலும், எப்படி அந்த ரத்தினத்தினுள்ளே சாக்கடையின் தோஷங்கள் இறங்க முடியாதோ, சூரியனின் ஒளிக்கிரணங்கள் சாக்கடை முதலிய கெட்டஜலங்களில் பிரதிபலித்த போதும், அந்த சூர்யனை அவற்றின் தோஷங்கள் எவ்வாறு அடைவதில்லையோ அதுபோன்று பகவத் பஜனம், வேதாந்த சிரவணம் செய்வதன் மூலம் ஜீவன் முக்தி விதேக கைவல்யம் ஏற்படுமென்பது உபதேசித்தாகின்றது.

சிறியாண்டான் கூரத்தாழ்வானிடமிருந்து விடைபெறும் சமயம், அருளாளப்பெருமாளரையின் சீடரான அம்மங்கி அம்மாள் என்பவர் கொடுங்கோல் சோழ மன்னன், வைணவர்களை இம்சித்து கர்ஜித்த வாய் பேசமுடியாமல், கழுத்து முழுதும் புழு புழுத்து புண்ணாகி, புரையோடி மாண்டு போனான் என்ற நல்ல செய்தியை கூறினார். கூரத்தாழ்வானின் சுந்தர பாஹூ ஸ்தவத்தினை அழகர் செவிமடுத்து செயல் புரிந்தார் போலும்!.

சிறியாண்டன் இந்த செய்தியினையும் உறுதிபடுத்திக் கொண்டு, அம்மங்கி அம்மாளோடு திருநாராயணபுரத்தினை நோக்கி விரைகின்றார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வேம்கடபுரம் ஸ்ரீகாரண கரிவரதர் புறப்படுகின்றார்.
இளையாழ்வார் மனதினுள் ஒரு ஏக்கம்!. பெருமாள் எக்காளம் முதலான இசைக்கருவிகள் முழங்க பெரியகோவிலில் புறப்படுவதைப் போல புறப்பட்டால் எப்படியிருக்கும் என்று! கூடவே இதெல்லாம் வாங்கி வைத்தால் பயன்படுத்துவதற்கு மனுஷாள் வேணுமே! அவர்களை அதற்குத் தயார் செய்ய வேணுமே! என்கிற தயக்கமும் கூட. இவ்வாறு நினைத்த வண்ணமே கோவிலினின் திருமுற்றுத்துள் வந்து நிற்கின்றார். அவ்வமயம் ஒரு பெரியவர் பெருமாளுக்கு இசைக்கருவிகள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஒரு தொகையினை இவரிடத்து அளிக்கின்றார். இவர் சற்றே தயக்கமுடனே பார்த்துக் கொண்டு வாங்குவோமே என்றிட பெரியவர் உறுதியாய் நிற்கின்றார் இவற்றையெல்லாம் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று!. இன்று எக்காளம், துத்தாரி போன்ற இசைக்கருவிகள் வாங்கப்பெற்று, வரதனும் கோலாகலமாக புறப்பாடு கண்டருளுகின்றார்.

இளையாழ்வாருக்கு பல திவ்யதேசங்களில் சேவித்து அதில் பல பழக்க வழக்கங்களை வரதனுக்கும் செய்ய வேண்டும் என்கின்ற ஒரு கைங்கர்ய சத் ஆசை!. அப்படி நேர்ந்ததுதானே ரத்னாங்கி! இவரது நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவதில் வரதனுக்கும் ஆசை!.
இப்படி பரஸ்பரம் இருவருமே ஒருவருக்கொருவர் ஆசைக் கொண்டு அங்குள்ளோரை வசமாக்கி, அந்த சத்சங்கத்தினைப் பார்க்கின்ற எனக்கும் ஆசை! நிறையவே எழுத ஆசை!

 

 
                                                     -Posted on 13th July’2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: