Srirangapankajam

July 13, 2008

PESUM ARANGAN-72

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:34 am

திருநாராயணபுரத்தில் யதிராஜர் மடமும் நிறுவப்பட்டு இராமனுஜர் அங்கிருந்தபடி திருநாராயணபுரத்தினை நிர்வகித்து வருகின்றார்.

ஆதௌ க்ருதயுகே ப்ராப்தே ப்ரஹ்மணா பூஜ்யதே ஸதா
நாராயணேதி சைலஸ்ய நாமதே யமுதாஹ்ருதம்
த்ரேதாயாம் ஸநகாத்யைஸ்ச பூஜ்யதே ச பர:புமாந்
வேதாத்ரிரிதி விக்யாத: ஸேவ்யதே யோகிபிஸ் ஸதா
த்வாபரே யுகே ப்ராப்தே ராமக்ருஷ்ணாதிநார்ச்சித
யாதவாத்ரிரிதி க்யாத: ஸர்வலோகேஷூ கீர்த்தித:
கலௌ யுகே து ஸம்ப்ராப்தே யதிராஜேந பூஜநாத் !
யதிசைல இதி ப்ரோக்தம் நாமதே, யாந்தரம் கிரே: !!

க்ருதயுகத்தில் ப்ரும்மாவினால் பூஜிக்கப் பட்டதால் ‘நாராயணாத்ரி’ என்றும், த்ரேதாயுகத்தில்
ஸனத்குமாரரால் ஸத்யலோகத்திலிருந்து ஆநந்தமய திவ்ய விமானத்தோடே எழுந்தருளவித்து, திருநாராயணனை இங்கே பிரதிஷ்டமைத்தயையினால் தத்தாத்ரேயர் நாலு வேதங்களைச் சார்ந்த வேதபுருஷர்களைக் கொண்டு வேதபுஷ்கரிணி கரையிலே சதா வேதங்களை முழங்கிக் கொண்டு ஆனந்தித்திருந்தமையினாலே ‘வேதாத்ரி’ என்றும், த்வாபரயுகத்தில் ஸ்ரீகிருஷ்ணரால் ஆராதிக்கப் பட்டமையினாலே ‘ யாதவாத்ரி’ என்றும், கலியுகம் வந்தவுடன் யதிராஜரால் ஜீர்ணோத்தாரணம் பண்ணி
அபிமாநிக்கப்படுகையால் இம்மலைக்கு யதிசைலம் என்று புகழ்பெற்றது.

‘இத்திருநாராயணபுரத்திலே நித்யவாஸம் பண்ணுமவர்களுக்கு, பெரியோர்க்கும் நமக்கும் உண்டான பரமபதமும் ஆச்சார்ய கைங்கர்யமும் உண்டாம்’ என்று உடையவர் அருளிச் செய்தருளினார்.

கீர்த்திமிகுந்த திருநாராயணபுரத்திலே உடையவர் பல சிறப்பான கைங்கர்யங்கள் செய்த வண்ணம் 12 ஆண்டுகள் கழிந்தது. ஒருநாள் ஒரு ஸ்ரீவைணவர் ஸ்ரீரங்கத்திலிருந்து அங்கு வந்து உடையவர் திருவடிகளில் ஸேவிக்கின்றார். ஸ்ரீரங்கத்திலிருந்து வருகிறார் என்றறிந்ததும் ‘பெரியபெருமாளும் பெருந்திருச்செல்வமும் செய்கிறபடி என்?’ என்று கேட்டருளுகின்றார். அந்த வைணவர் நடந்தது அனைத்தையும் விளக்கமாகக் கூறி பெரியநம்பிகள் பரமபதித்தைச் சொல்கிறார். சுடுவார்த்தைகள் கேட்ட செவிகள் போல, ‘ஐயோ! கண்ணபிரான்! அறையோ!’ என்று அலறி தழுதழுத்து திருமிடறு துடித்து கண்ணநீர் கைகளாலிறைத்து க்லேஸிக்கும்படி வருந்த அங்கு குழுமியுள்ளோர் அவரைத் தேற்றுகின்றனர். ‘ஆழ்வானையாவது திருமேனியுடன் இருக்கப்பெற்றோமே’ என்று ஒரளவு மனதினைத் தேற்றி பெரியநம்பிகளுக்கு திருச்சூர்ண பரிபாலனமும் அவருக்கு திருவத்யயநம் நடத்தினார். ‘ஆழ்வானுக்குத் திருக்கண் போச்சுதே’ என்று மிகவே துக்கிக்கின்றார். தன் அந்தரங்க சீடரில் ஒருவரான மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டானை அழைத்து ‘ஆழ்வானையும் அங்குள்ள விசேஷங்களையும் ஆராய்ந்து அறிந்து வாரும்’ என்று அவரை ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பினார்.

++++++++++++++++++++++++++++++++++++++

ஸ்ரீகாரணனடிமை இளையாழ்வார் நம்பெருமாளைப் போன்று வரதனுக்கும் இரத்தினாங்கி வைகுண்ட ஏகாதசியன்று அலங்கரிக்க ஆசைப்பட்டு சென்னை ஸ்ரீசுக்ரா ஜூவல்லரியில் அதற்கான மதிப்பீடு செய்தார். 5.25 லட்சம் மதிப்பிட்டனர். தொகை அதிகமாகயுள்ளதே சற்றேப் பொறுத்துதான் இதனைச் செய்ய முடியும் போலுள்ளது என்று இந்த கைங்கர்யத்தினை ஒத்திப்போட நினைக்கையில் ஒரு ஸேவார்த்தி மூன்று லட்சம் ரூபாய் நன்கொடையாகயளித்து தாங்கள் திருவுள்ளம் போல் எந்த கைங்கர்யத்திற்காகவாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அளிக்கின்றார். பரவசமடைந்த அவர் இரத்தினாங்கிக்காக முன்பணம் கொடுக்கின்றார். இரத்தின அங்கி நிறைவுறப் போகும் சமயம் இன்னொரு பக்தர் மிகச் சரியாக 2.25 லட்சம் ரூபாய் அளிக்கின்றார். அவரும் இதனை எதற்கு பயன்படுத்த போகின்றார் என்று அறியாதவர். ஆனால் பைசா சுத்தமாக இரத்தின அங்கிக்காக கணக்குத் தீர்க்கின்றார். ஏதோ! மனதில் பட்ட தொகையினை ஸ்ரீகாரணருக்காக அளிக்கின்றேன்! என்கிறார்.

ஆக இருவர் உள்ளத்திலும் புகுந்து தன் காரியத்தினை தானே ‘சுயமேவ கார்யயிதி’யாய் நடத்திக் கொள்கின்றார் ஸ்ரீகாரண கரிவரதர்.

-Posted on 12th July’2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: