Srirangapankajam

July 12, 2008

PESUM ARANGAN-71

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:09 pm

 

திருநாராயணப்பெருமாளுக்கு ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதைப்படி ப்ரோக்ஷணாதிகளை தம்முடன் கூட வந்த ஸ்ரீரங்கராஜபட்டர் என்பவரால் செய்வித்தருளுகின்றார். திருநாராயணருக்கு நித்யோத்ஸவ பக்ஷஉத்ஸவ மாஸோத்ஸவ வருஷஉத்ஸவங்களெல்லாம் மஹோத்ஸவமாக நடத்துகைக்கு உத்ஸவபேரம் இல்லையே என்று வருத்தமுடன் எண்ணியபடியே உறங்குகின்றார். கனவில் திருநாராயணன் எழுந்தருளுகின்றான். ‘நம் உத்ஸவபேரமான இராமப்ரியர் இப்போது டில்லியேற எழுந்தருளி துலுக்கராஜ க்ருஹத்திலே லீலைகொண்டாடி எழுந்தருளியிருக்கின்றார். அங்கேறப்போய் எழுந்தருளுவித்துக் கொண்டு வாரீர்” என்றருளுகின்றார்.
இராஜா விஷ்ணுவர்த்தனின் உதவியினால் டில்லியினை விரைந்து அடைந்தார் உடையவர். மாற்று சாதியினராயினும் தன் அரண்மனை வந்தடைந்த இராமனுஜரை பணிந்து உபசரிக்கின்றான் அந்த துலுக்கராஜன்!. உடையவர் இராமப்ரியரை அவரிடத்து வேண்ட அவரை அழைத்துக் கொண்டு போய் தாம் கொள்ளையடித்துக் கொண்டு வந்த விக்ரஹங்களனைத்தையும் காண்பிக்கின்றான் ராஜா.
மூலவர் திருநாராயணர் உருவ ஒற்றுமை எந்தவொரு விக்ரஹத்திற்கும் இல்லாததைக் கண்டு, மனமொடிந்து போகின்றார் உடையவர். அன்றிரவு இராமப்ரியரே இவரது ஸ்வப்னத்தில் தோன்றுகின்றார். ‘நீர் முசிப்பானேன்? நாம் அவன் மகளாலே பூஜை கொண்டு அவள் ஸஜ்ஜாக்ருஹத்திலே இரா நின்றோம்: நம்மைக் கொண்டு போம்படியாக அங்கே வாரீர்’ என்று அருளுகின்றார். இதனை ராஜாவிற்குத் தெரிவிக்கின்றார் உடையவர். ஆச்சர்யமடைந்த ராஜா உடையவரோடு தனது மகளின் இருப்பிடத்திற்குச் செல்கின்றான். அங்கு உடையவரைக் கண்ட இராமப்ரியரின் விக்ரஹத் திருமேனியில் வாத்ஸல்யம் கொப்புளிக்கின்றது. தனக்கிட்ட சட்டையோடும், காலில் கட்டிய சிறு சதங்கைகளுடனும், நெற்றியில் கஸ்தூரி திலகத்துடன், கண்களில் மைக்காப்புடன், நெற்றிச்சுட்டி அசைந்துஅசைந்து ஆட, செம்பொற் சதங்கைகள் சல சலவென்று ஒலிக்க எல்லோரும் காணும்வண்ணும் மழலைநடைக் காட்டி நடந்துவந்து உடையவரின் திருமடியிலே வந்தமர்கின்றான். மார்பும் தோளும் பூரிக்க, காணாத தன் குழந்தையைக் கண்டார் போல கண்ணீர் பெருக்க ‘என்னுடைய செல்வப்பிள்ளையோ!” என்று தன் திருமார்போடு அணைத்துக் கொண்டு மெய்சிலிர்த்தார் உடையவர். ராஜா அதிஆச்சர்யமடைந்தவனாய் செய்வதறியாது உடையவரின் காலிலே விழுந்து சரணாகதி பண்ணுகின்றான். அநேக உபசாரங்களோடும் பல ஆபரணங்களுடனும்
ஸம்பத்குமாரரை யதிராஜருக்கு எழுந்தருளுவித்துக் கொடுத்தனுப்புகிறான் அந்த துலுக்கராஜன்!

யாதவாத்ரிக்கு எழுந்தருளுகின்றான் செல்வப்பிள்ளை.
நித்ய, பக்ஷ, மாஸ அயந, ஸம்வத்ஸரோத்ஸவங்களும், மஹோத்ஸவங்களும் கண்டருளி திருநாராயணபுரமே கோலகலத்தில் திளைத்திருந்தது உடையவர் இருக்கப் பெற்றமையினால்!

++++++++++++++++++++++++

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் வேம்கடபுரத்தில் ஸ்ரீகாரண கரிவரதனின் ஸம்ப்ரோக்ஷணத்திற்காக அடியேன் சென்றிருந்தேன். திருக்குடங்கள் உத்தாபனம் செய்யப்பட்டு ப்ரோக்ஷணத்திற்காக கிளம்புகின்றது. குடங்கள் கிளம்பி செல்லும் போது மேலே கூடவே கருடன் வட்டமிட்டு கூடவே வந்தது. அப்போதே ஸந்நிதியின் ஸாந்நித்யத்தினையறிந்தேன். இன்று அது பன்மடங்கு பெருகியுள்ளது.

இந்த கருடன் வட்டமிடுதலுக்கு ஸந்நிதியின் சாந்நித்யம் வெகுமுக்கியம். இரண்டவதாக கர்த்தா, ஆச்சார்யன் இருவரின் சிரத்தையும் இருக்கவேண்டும். மூன்றாவதாக அங்கு கூடியுள்ளோர் அனைவருமே பக்தியும் சிரத்தையுடனும் இருத்தல் வேண்டும். அநாசாரங்கள் மிகுந்தவர்கள், கயவர்கள், கல்நெஞ்சம் கொண்டவர்கள் அருகே குடியிருப்பாராகிலும் கருடன் வாராது.

அங்குள்ளோர், பணிபுரிவோர் அனைவருமே சந்துஷ்டியுடன் இருத்தல் அவசியம். இவைகளெல்லாம் இருப்பினும் வாராதும் போகலாம். ஓரளவு இவையெல்லாம் எனது அனுபவத்தினைக் கொண்டு சொல்கின்றேன்.

இங்கு நெற்குப்பை என்றவொரு கிராமத்தில் கும்பாபிஷேகத்திற்காக சில வருடங்களுக்கு முன் சென்றேன். கடம் புறப்பட்டு விமானத்தில் ஏறப்போகிறேன். கட்டுமஸ்தான கிராமத்தார்கள் சிலர் என்னருகே வந்தனர். ‘சாமி கிருஷ்ணபட்சி(கருடன்) கண்டிப்பாக வரவேண்டும்! வராவிட்டால் அவ்வளவுதான்! நீ கீழேயிறங்க முடியாது!’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு, அதனடியிலேயே காவலுக்கும் நின்று விட்டனர். எனக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது. கிறுகிறுத்து கீழே விழாத குறைதான்!. நாங்கள் சிலபேர்கள்தாம். அவர்களோ ஒரு கும்பலாக திரண்டிருந்தனர். ஊர் விட்டு ஊர் வேறு வந்துள்ளோம். நல்லபடியாக ஊர் போய் சேர வேண்டுமே என்ற பயம்!. முன்னமேயே சொல்லியிருந்தால் வந்திருக்கவே மாட்டோமே! கடைசி நேரத்தில் பழி தீர்த்து விட்டார்களே! என்றெல்லாம் மனதிற்குள் புலம்பியபடி மேலேப் பார்க்கிறேன் ஒரு காக்கா கூட பறக்கவில்லை! வெளியே என் படபடப்பை காட்டிக் கொள்ளாது,
‘இன்று செத்தோம்!’ என்றபடியே மேலே விதானத்திற்குப்
போய் சேர்ந்தேன்!. ‘ ரங்கா! என்னை நீதான் இந்த பெரிய இக்கட்டிலிருந்துக் காப்பாற்ற வேண்டும். தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டு விட்டேன். இன்று நான் உருப்படியாக ஊர் போய் சேருவதும் சேராததும் உன் கையில்தான் உள்ளது என்று உளமார பிரார்த்தித்தபடியே உபசாரங்களைத் தொடங்குகின்றேன். கீழே ஒரே உற்சாகமான சப்தம்!.      எல்லாரும் ஆகாயத்தினைப் பார்த்தபடி கன்னத்தில் போட்டபடி கும்பிடுகின்றனர். ஆச்சர்யமாக மேலே பார்த்தபோது கருடன் ஒன்று ஆபத்பாந்தனாக, அனாதரக்ஷகனாக வட்டமிட்டபடியிருந்தது.    மூர்ச்சையாகாத குறைதான் எனக்கு! எனக்கு இரங்கினாரோ? அல்லது குழுமியிருந்த அந்த கிராமத்தார்களின் முரட்டுபக்திக்கு அருளினாரோ?. ‘ ரங்கா!’ என்றபடி மனமார நன்றி கூறினேன் என் அந்தரங்கனுக்கு!

 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: