Srirangapankajam

July 11, 2008

PESUM ARANGAN-70

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:30 pm

எம்பெருமானாரைப் பிரிந்து, பெரியநம்பியை இழந்து, கூரத்தாழ்வார், சிறகொடிந்தப் பறவையைப் போன்று தட்டுதடுமாறி திருவரங்கத்தே வந்து சேர்ந்தார்.

த்வயத்தினையே உயிர்மூச்சாகக் கொண்டு ஆங்காங்கு சில அற்புதங்களை வெளிப்படுத்தி, எம்பெருமானார் மைசூருக்கு 26 கி.மீ தூரத்திலுள்ள தொண்டனூர் எனும் ஊரையடைந்தார். தொண்டனூர் நம்பி எனும் வைணவரின் கோரிக்கையை ஏற்று, அந்நாட்டையாண்ட விட்டலதேவராயனின் பெண்ணினை தனது ஸ்ரீபாததீர்த்ததினால் சித்தம் தெளிய வைத்தார் உடையவர். விட்டலதேவராயன் எம்பெருமானாரின் சீடரானார். அவருக்கு ‘விஷ்ணுவர்த்தன்’ எனப் பெயரிட்டு ஆசீர்வதித்தார். அங்குள்ள பன்னீராயிரம் சமணர்களும் எம்பெருமானாரை எதிர்த்தனா;. தொண்டனூர் நரஸிம்ஹர் சந்நிதியில் ஒரு திரைக்குப் பின்னால் உடையவர் ஆயிரம் நாக்குடைய ஆதிசேஷனாய் யாரும் அறியாவண்ணம் உருமாறி பன்னீராயிரம் சமணர்களின் கேள்விக்கும் பதிலளித்து வாதில் வென்றார். அனைவரும் வைணவராயினர். ஆயிரக்கணக்கான சீடர்களுக்கும் தமக்கும் நெற்றியில் தரித்துக்கொள்ளும் திருமண் சிறிதளவேயிருந்தது கண்டு வருந்துகிறார். மூன்று நாட்கள் உபவாஸத்திற்கு பின் தொண்டனூர் அருகிலுள்ள யதுகிரியின் (மேல்கோட்டை திருநாராயணபுரம்) பெருமாள் அவரை அங்குவருமாறும் வைணவர்கள் அனைவருக்கும் தேவையான திருமண் அங்கு நிறைய உள்ளதாகவும் எம்பெருமானாரின் கனவில் அருளுகின்றார்.

மனமகிழ்ந்த எம்பெருமானார், விஷ்ணுவர்த்தனுடனும் அவனது படைகளுடனும், தன் சீடர்களுடனும் யதுகிரி செல்கின்றார். அடர்ந்த காட்டுப்பகுதிகளை சீர்படுத்திக் கொண்டே செல்கிறார். அங்கு கல்யாண புஷ்கரிணி என்ற தீர்த்தத்தினையடைகின்றார். அதன் வடமேற்கு மூலையில் வேண்டிய அளவு திருமண்ணைக் கண்டு அவனருளை நினைந்து, உகந்து சேகரித்துக் கொள்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் அந்த திருமண் இன்றளவும் அவனருளால் வற்றாமல் பெருகிக் கொண்டேயுள்ளது. புஷ்கரிணியின் தென்மேற்கு மூலையில் ஒரு புற்று ஒன்று தேஜோமயமாக காட்சியளிக்க அதற்கு ஆயிரக்கணக்கான குடம் பசும்பாலால் பாலாபிஷேகம் செய்கின்றார். புற்றிலிருந்து எல்லாரும் இன்புறும்படியான தேஜோமயமான திருநாராயணன் வெளிப்படுகின்றார். யதுகிரிக்கு ‘திருநாராயணபுரம்’ என்று பெயரிடுகின்றார். ஊரையும் அவரே நிர்மாணித்து செம்மைப்படுத்தி, கோவில் நிர்வாகத்தினையும் ஏற்கின்றார்.

விஷ்ணுவர்த்தன் அங்கு திருநாராயணனுக்கு கவின்மிகு ஆலயம் ஒன்றினை அமைக்கின்றான். தன்னுடன் கூட வந்த திருவரங்கத்தினைச் சார்ந்த 52 வைணவர்களை அங்கு கைங்கர்யத்தில் அமர்த்தினார். இன்றும் அவர்களது பரம்பரையினரே அங்கு கைங்கர்யங்களைச் செய்து வருகின்றனர்.

+++++++++++++++++++++++++++

நிறைய கோவில்களுக்கு நாம் சென்றாலும் நிறைவு என்பது ஒரு சில கோவில்களிலேயே நாம் பெற முடியும். யாரேனும் ஒருவராவது சிரத்தையுடன் ஆராதனை செய்வாராயின் தெய்வம் அங்கு குடியிருக்கும். தொழுபவர் குறை நீக்கும். ஒருவர் கூட இல்லையெனின் அங்கு அவனது அருள் நில்லாது. கோவிலே பொலிவிழந்து விடும். வௌவால்கள் அடைந்து விடும். விஷஜந்துக்கள் குடியேறும். இன்று பல திவ்யதேசங்கள் கூட இவ்வாறு பாழ்பட்டு கிடக்கின்றது. சுமார் ஒன்றரைவருடங்களுக்கு முன் கபிஸ்தலம் எனும் திவ்யதேசத்திற்குச் சென்றிருந்தேன். கோவிலின் நிலை கண்டு வேதனை மிகவே அடைந்தேன்.

வேம்கடபுரத்திலுள்ள ஸ்ரீகாரண கரிவரதனின் கம்பீரமானத் தோற்றம், கருணைப் பொங்கும் கண்கள், நம்மை பரவசமடையச் செய்யும். சிறிது நேரம் மெய்மறக்கச் செய்யும். அந்த அமைதி நம் ஆத்மாவிற்கு பலம் அளிக்கும்.

ஒரு நாள் ஸ்ரீகாரணனடிமை இளையாழ்வார் (திரு மஹாலிங்கம் தம்மை இவ்விதம் அழைப்பதையே விரும்புகின்றார்!) சந்நிதிக்கு வெளியே வருகின்றார். ‘வசிக்கும் திருமார்புடைய பெருமாள்’ என்று அசரீரி மாதிரி ஒரு குரல் ஒலிக்கின்றது. ஏதோ ஒரு அற்புதம் நடக்கிறது என்றறிந்த அவர் கருவறைக்குள் ஓடிச் சென்று ஸ்ரீகாரணனைத் தரிசிக்கின்றார்- குறிப்பாக திருமார்புதனை ஸேவிக்கின்றார். அந்த மார்பில் அணிவித்திருந்த தாயாரின் உருவம் பொறிக்கப் பெற்ற தங்கடாலர் செயினுடன் மறைந்ததைக் கண்டு உறைந்து போனார். சிறிது நேரத்திற்கு முன்னிருந்த அந்த திருவாகிய ஸ்ரீமஹாலட்சுமி அந்தர்யாமியாகி ஸ்ரீகாரணரின் அர்ச்சைத் திருமார்போடு ஐக்யமாகி விட்டாள்.

-posted on 12th July’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: