Srirangapankajam

July 10, 2008

PESUM ARANGAN-69

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:54 pm

கண் பார்வையிழந்த இருவருடனும் அத்துழாயும், மன்னனின் பணிப்பெண் நாவல்கொடியும் , கொள்ளிடம் கரையோரமாக பசுபதியார் கோவில் என்ற இடத்தினை அடைகின்றார்கள். நாவல்கொடி அரசவையில் பணிபுரிந்ததினால் அங்குள்ள சிறந்த வைத்தியர்கள் சிலரை அறிந்திருந்தாள். அவர்களைக் கொண்டு இருவருக்கும் சிகிச்சையளித்தாள்.

பெரியநம்பிகளுக்கு எந்த சிகிச்சையளித்தும் உடல்நிலைத் தேறவில்லை. கண்கள் புரையோடிவிட்டது. உடல்நிலை மோசமானது. மனநிலை இராமானுஜருக்கு ஒரு தீங்கும் வாராது நேர்ந்ததை நினைத்து நிறைவடைந்தது. தனது ஆச்சார்யன் காட்டிய வழியில் எத்தனை இடையூறுகள் வந்திடினும் மனநிலை தளராது வைணவத்தினை காத்த தீரத்தோடு, நெஞ்சுரத்தோடு தன் ஆத்ம பந்து கண்ணிழந்த கூரத்தாழ்வானின் மடியில் தலையினை வைத்து அத்துழாயின் மடியில் கால் நீட்டி, திவ்யதேசத்தில் உயிர் பிரிவதைக் காட்டிலும், பரம பாகவதனின் மடியில் உயிர் பிரிதல் உயர்வென்று எண்ணி, தன் ஆச்சார்யன் ஆளவந்தாரை பணிந்து, எம்பெருமானாரைப் போற்றி, நம்பெருமாளை தம் மனக்கண்ணில் பதிந்து தன் இன்னுயிர் நீத்தார் அப்பெருந்தகை. எத்தகைய தியாகமிது? கூரத்தாழ்வான் தன்னுயிர் இந்த பாக்கியம் பெறவில்லையே என ஏங்குகிறார். அங்குள்ள வைணவர்கள் துணையுடன் பெரியநம்பியின் அந்திமக்ரியைகள் நடக்கின்றன.
அவர் உயிர் நீத்த இடத்தில் திருவரசு ஒன்று இன்று உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டு உத்தமர்களின் உயிர் பிரிந்தது. முதலாமவர் ஸ்ரீமந் நாதமுனிகள். இரண்டாமவர் பெரியநம்பிகள்.

கூரத்தாழ்வானுக்கு டோலை ஒன்று தயார் செய்து அங்குள்ள பரமபாகவதர்கள் துணையுடன் அத்துழாயும் ஆழ்வானும் ஸ்ரீரங்கம் வந்தடைகின்றனர், பெரியநம்பியினை வைணவ தரிசனத்திற்காக இழந்து!
————

கூரத்தாழ்வார் பிறந்தது கி.பி. 1009ம் ஆண்டு. வரும் 2009ம் ஆண்டு அவரது 1000வது ஆண்டு வருகின்றது.

இந்த அவரது 1000வது ஆண்டுக்குள் 1000 பேர்களுக்குக் கண்பார்வை பெற சிகிச்சையளித்து இலவசமாக அவர்களுக்குத் தேவைப்படும் பொருட்களையும் ஈந்து ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலம் தன் லட்சியத்தினை ஏறத்தாழ நிறைவேற்றி முடிக்கும் நிலையிலுள்ளார் வேம்கடபுரம் திரு இளையாழ்வார்.

ஒவ்வொரு திருவோணத்தன்றும் பெருமாள் புறப்பாடு கண்டருளி மீண்டும் ஆஸ்தானம் சென்றடைந்தபின், கூடியுள்ளோரிடத்து ஒரு அரைமணி நேரம் ஆழ்வார்கள் பற்றி வைணவத்தினைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்வார் இவர்.

அன்று அப்படித்தான், நாச்சியார் திருமொழியிலிருந்து

நாறு நறும்பொழில் மா
லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த
அக்கராவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான்
இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!

என்ற பாசுரத்திற்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார். சுமார் இரண்டரை வயதேயான ஒரு குழந்தை தன் அப்பாவிடம், ‘இவர் பொய் சொல்கிறார்!’ என்கிறது. இவர் இதனைக் கவனித்து விட்டார். குழந்தையுடன் பேசுகின்றார். குழந்தை கேட்கின்றது எங்கே நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்காரவடிசிலும்? என்று. வரதனின் நியமனம் புரிகின்றது இவருக்கு!.
வருட திருவோணம் (திரு ஓணம் பண்டிகையன்று) வரதனின் நியமனப்படியே இன்று வரை நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்காரவடிசிலும் கண்டருளப்பண்ணுகின்றார் இன்றளவும்!

-posted on 9th July’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: