Srirangapankajam

July 9, 2008

PESUM ARANGAN-68

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:23 pm

வைணவம் திக்கெட்டும் பரவியது. அடியார்கள் பெருகி வாழ அரங்கநகர் வளர்ந்தது.     இராமானுஜரின் பெருமை எங்கும் பரவியது.

ஒருவரது புகழ் ஓங்குமானால் அவ்வளவுக்கவ்வளவு அவர்பால் சிலருக்கு பொறாமையும் கொழுந்து விட்டு எரியும். இன்புற்றிருந்த ஸ்ரீரங்கஸ்ரீயில் தலைமைப் பொறுப்பினையேற்ற உடையவருக்கும் பெருந்துன்பம் ஒன்று காத்திருந்தது.

சோழமண்டலத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தினை தலைநகராகக் கொண்டு வைணவத்வேஷம் கொண்டு ”இரண்டாம் குலோத்துங்க சோழன்’ (கி.பி 1070-1116) என்னும் மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். அவனது அமைச்சர்களில் ‘நாலூரான்’ எனும் வைணவத்தினைச் சார்ந்த துர்மதி அமைச்சனும் இருந்தான். மன்னன் ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ (சிவனுக்கு மேலான தெய்வமில்லை) என்று அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களையும் வலுக்கட்டாயபடுத்தியோ அல்லது ஏதேனும் ஒரு உபாயத்தினை பின்பற்றியோ நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.     துர்மதி ‘நாலூரான்’ சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டான்.         வைணவத்தின் தலைவராகயிருக்கும் இராமானுஜர் ஒப்புக்கொண்டாலேயொழிய தாங்கள் நினைப்பதை சாதிக்கவியலாது என்று அந்த
துஷ்டனிடம் துர்போதனைச் செய்தான். வெறிகொண்ட மன்னன் திருவரங்கத்திற்கு தன் ஆட்களை அனுப்பி இராமானுஜரை அழைத்துவர ஏற்பாடுகளைச் செய்தான்.

திருவரங்கம் வந்து சேர்ந்த அவர்களிடம் சாமர்த்தியமாக பேசி உடையவரின் பரம சீடரானவரும் இராமானுஜரின் சகோதரி புதல்வருமான நடாதுராழ்வான் உடையவரை அவர்கள் அழைத்துபோவதற்கானக் காரணத்தினையறிந்தார்.     மதிநுட்பம் வாய்ந்த அவர் இதனை உடையவரிடம் கூறாது கூரத்தாழ்வானிடம் ரகசியமாக தெரிவிக்கின்றார்.    இவரின் சமயோசித செயலைக் கண்ட கூரத்தாழ்வான் இவரை அன்போடு அணைத்து ‘நீரன்றோ பிரிய பாகிநேயார்’ (பிரியமான மருமகன்) என்று உகக்கின்றார். இராமானுஜர் சோழ மன்னனின் சபைக்குச் சென்றால் தீங்கு நிச்சயம் என்று ஆழ்வானின் உள்ளுணர்வு உணர்த்துகின்றது.      அப்போதுதான் வடதிருக்காவிரிக்கு நீராட சென்றிருந்தார் இராமானுஜர்.

கூரத்தாழ்வான், அவரது காஷாயத்தினைத் தான் தரிக்கின்றார். மடத்திலுள்ள மற்ற சீடர்களிடத்து ‘இராமானுஜருக்கு ஆபத்து. உடனே அவரை அழைத்துக் கொண்டு வெளிதேசம் சென்று விடுங்கள்” என்று ஆணையிட்டு மன்னனின் ஆட்களிடத்து தாம்தான் இராமானுஜர் என்று நம்ப வைத்து மன்னனின் சபைக்கு (ஏறத்தாழ தனது 88வது வயதினில் – கி.பி 1097) நெஞ்சுரத்தோடு விரைகின்றார் அப்போது அவர் தனியே செல்வது நல்லதல்ல எனக் கருதிய 100 வயதினைக் கடந்த பெரியநம்பியும் தமது மகள் அத்துழாயுடன் அவரோடு செல்கின்றார்.

காவிரியில் நீராடித் திரும்பிய உடையவர் விவரமறிந்து அனலில் இட்ட புழு போன்று துடிக்கின்றார்.     மனம் வெம்பி கண்ணீர் உகுக்கின்றார்.    தாம் செல்ல எத்தனிக்கின்றார்.   அங்குள்ள சீடர்கள் இராமானுஜரை பலவாறு தேற்றுகின்றனர்.   இராமானுஜர் பெரியபெருமாளை ஸேவிக்கின்றார். ”வெறுப்போடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியனைகள் பேசில்’ என்று தொடங்கி ‘ தலையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாயரங்கமா நகருளானேஎன்று ஆழ்வார்கள் அருளிச்செய்தபடி இப்போது சடக்கென அவன் தலையை அறுக்கக் கூடாது. அவன் பரிகரவானாகையினாலே முகாந்தரேண செய்து வாராநின்றேன்”   என்று விண்ணப்பம் செய்து பிரியாவிடை பெறுகின்றார்.    வெள்ளை ஆடைகளை காவிமேல் அணிந்து எம்பார், முதலியாண்டான், நடாதூராழ்வான், பிள்ளான், வடுகநம்பி, கிடாம்பியாச்சான், வில்லிதாஸன் போன்ற அந்தரங்கமான சீடர்களுடன் மேல் திசை நோக்கி பயணிக்கின்றார்.

தனது ஸபைக்கு வந்தது இராமானுஜர் அல்ல என்பதினை கேடுகெட்ட நாலூரான் சொல்ல,  வெறிகொண்ட அரசன் இராமானுஜரை எங்கிருந்தாலும் பிடித்து வர ஒரு சிறு வேகப்படையை அனுப்புகின்றான்.   இந்தப் படை இராமானுஜரை பின்தொடர்கின்றது.      உடையவர் இரு கை நிறைய மணலை எடுக்கின்றார்.    ‘கொடுமைசெய்யுங் கூற்றமும் என் கோலாடி குறுகப்பெறா, தடவரைத்தோள் சக்கரபாணீ! சார்ங்கவிற் சேவகனே!” என்று ஓதி அவர்கள் வருகின்ற வழியில் அம்மணலைத் தூவச் சொல்கின்றார். பின்தொடர்ந்த படை பின் வாங்கியது. ‘போகிற பார்ப்பார் மந்த்ரவாதம் பண்ணிப்போனார்கள்” என்று அரண்மனை அடைந்தது. உடையவரும் சீடர்களும் அரங்கத்துள் உறையும் இன் துணைவனே வழித்துணையாக, த்வயம் அனுஸந்தித்தவாறே பயணிக்கின்றனர்.

இங்கு அரசனுக்கு வெறி இன்னும் மிகுகின்றது. ‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்றவாறே ஒருவன் ஒரு பெரிய பாவத்தினைப் பண்ணுவதற்கு முன் அவன் கெடுவான். அவன் புத்தி கெடும் அல்லது யாரேனும் கெடுப்பதற்கென்றே வந்து சேருவர். இங்கு நாலூரான் வந்து சேர்ந்தான் கேடுகெட்ட அரசனுக்கு. கூரத்தாழ்வாரிடத்து ‘சிவாத் பரதரம் நாஸ்தி’ என்று எழுதி கையொப்பமிடச் சொல்கின்றார். கூரத்தாழ்வார் அதனை மறுத்து கிண்டலாக வேறு விதமாக எழுதி கையொப்பமிடுகின்றார். பலப் பிரமாணங்களைக் காட்டி விஷ்ணுவே பரத்வம் என்று வாதிடுகின்றார். வெறியனுக்கு முன் வாதம் செய்து என்ன பயன்? இவ்விரு வைணவர்களின் கண்களையும் பிடுங்கி குருடராய் ஆக்குங்கள் என்று கட்டளையிடுகின்றான்.    உன்னைப் போன்ற பகவத் துவேஷியைக் கண்ட கண்கள் எனக்கு இனி வேண்டாம். உன் ஆட்களும் என்னைத் தொடவேண்டாம் என்று தன்னுடைய கைவிரல் நகங்களாலேயே தம்மிரு கண்களையும் பிடுங்கி வீசுகின்றார் மாவீரனாய் கூரத்தாழ்வான்.    பெரியநம்பியின் கண்களும் பறிபோய் குழியாயிற்று.     வயதான நம்பிகள் வலி தாளாது துடிதுடியாய் துடிக்கின்றார்.   ‘எமக்குதவ இங்கு எவரும் இல்லையா?’ என்று அத்துழாய் அலறுகின்றார். அரசனின் பணிப்பெண் ‘நாவல்கொடி அம்மாள்’ என்ற ஓரேயொரு பெண்மணி மட்டும் நடப்பது நடக்கட்டும் என்று தைரியமாக அத்துழாயையும் தரிஸனம் இழந்து வைணவ தரிஸனத்தினைக் காப்பாற்றிய ஆழ்வானையும் பெரியநம்பியையும் கைப்பிடித்து, சபையை விட்டு எல்லோரும் வெளியேறுகின்றனர். ஸ்ரீரங்கம் நோக்கி பயணிக்கின்றனர்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++

வேம்கடபுரத்தினைப் பற்றி கடந்த இரு நாட்களாக எழுதிக் கொண்டு வருகின்றேன்!.
 
என்னை மிகவே பாதித்த இன்று எழுதிய இத்தொடருக்குப் பின் மேற்கொண்டு எதுவும் எழுத இயலாமல் தவிக்கின்றேன்!

நாளைப் பார்ப்போம்!.

                                                                     –posted on 8th July’ 2008-    

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: