Srirangapankajam

July 8, 2008

PESUM ARANGAN-67

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:30 pm

எம்பெருமானாரின் கீர்த்தியினை முன்னமேயே அறிந்திருந்த காஷ்மீரத்து அரசன் எம்பெருமானாரின் கோஷ்டிக்கு மிக சிறப்பான வரவேற்பளித்தான். 25000 பகுதிகளைக் கொண்ட போதாயன விருத்தி கிரந்தத்தினை அவருக்கே அளித்தான். உள்ளம் குளிர அவனை ஆசீர்வதித்து திருவரங்கம் திரும்புகின்றார் உடையவர். பொறாமையுற்ற காஷ்மீரத்து பண்டிதர்கள் சூழ்ச்சியுடன் உடையவர் முழுவதும் படிக்கும் முன்னரே அதனைக் கவர்ந்து சென்று விட்டனர். கிடைத்தற்கரிய பொருளைக் கைநழுவ விட்ட உடையவர் மிகவே வருந்தினார். அப்போது கூரத்தாழ்வார் ‘நேரம் கிடைத்த போதெல்லாம் அக்கிரந்தத்தினை முழுவதுமாக நான் படித்து விட்டேன். என் மனதில் க்ரந்தம் முழுதும் நன்கு மனப்பாடமாகி விட்டது. அதனை இங்கேயேச் சொல்லவா? அல்லது இரண்டு ஆற்றிற்கு நடுவே (ஸ்ரீரங்கம்) சொல்லவா? என்றார். வியப்புற்ற உடையவர் வினயத்தோடு நின்ற கூரத்தாழ்வானை அணைத்து ஆனந்த கண்ணீர் உகுத்தார். திருவரங்கம் வந்த பிறகு கூரத்தாழ்வான் மூலம் போதாயனவிருத்தியினை முழுவதுமாக கேட்டறிந்தார். பிரம்மசூத்ரத்திற்கு பாஷ்யம்(விளக்கவுரை) சொல்ல ஆரம்பித்தார். எம்பெருமானார் கூறக் கூற அதனை பட்டோலைப் படுத்திக் கொண்டே வந்தார் கூரத்தாழ்வார். அவ்வப்போது தமக்கு எழும் ஐயப்பாடுகளை கூரத்தாழ்வார் மூலமாக தெளிவு செய்து கொண்டார் எம்பெருமானார். கூரத்தாழ்வார் அவ்வப்போது தனக்கு எழும் சந்தேகத்தினை தனது மனைவி ஆண்டாளிடம் உரையாடித் தெளிவுப் பெற்றார். இந்த பாஷ்யம் செய்ததினால் ஆளவந்தாரின் இரண்டு குறைகளை நீக்கினார் அவரின் இந்த உத்தம சீடர். மேலும் ‘கீதா பாஷ்யம், வேதாந்த சாரம், வேதாந்த தீபம், வேதார்த்த ஸங்க்ரஹம் போன்ற வேறு பல விசிஷ்டாத்வைதக் கொள்கைகள் பற்றி க்ரந்தங்களையும் படைத்து வைணவ உலகினை பிரகாசிக்கச் செய்தார். இவற்றையெல்லாம் அருளிச்செய்த போது அவருக்கு வயது 72.

தமது 72 வயது முதல் 78ம் வயது வரை (கி.பி.1089 முதல் கி.பி. 1096 வரை) திருவரங்கம் கோவில் நிர்வாகத்தினை முதலியாண்டானிடம் ஓப்படைத்து விட்டு அவருக்கு உதவியாக திருவரங்கப் பெருமாளரையரையும் நியமித்து விட்டு திவ்யதேச யாத்திரை செய்து, ஆங்காங்கு பலகோவில்களில் தக்க மாற்றங்கள் பலவற்றைச் செய்தும், பல இதர சமயத்தினைரை வைணவ மதத்தின் ஈடுபாடுக் கொள்ளச் செய்தும் சிறப்புற்று விளங்கினார். கி.பி.1093ஆம் ஆண்டு அவரது 76 வயதில் மீண்டும் காஷ்மீரம் சென்றடைகின்றார். மறுபடியும் அங்குள்ள வித்வான்கள் அனைவரும் இவரைக் கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்களைனைவரது எதிர்ப்பினையும் அவர்களை வாதிற்கு அழைத்து வெல்கின்றார். அங்கேயே தான் எழுதிய பாஷ்யத்தினையும் அரங்கேற்றுகின்றார். அப்போது உடையவருக்கு வாக்தேவியான ஸ்ரீசரஸ்வதி ப்ரத்யக்ஷமாகின்றாள். இவர் எழுதிய பாஷ்யத்தினை தனது தலைமேல் வைத்து கொண்டாடி அங்கீகாரம் செய்து அதற்கு ‘ஸ்ரீபாஷ்யம்’ என்று திருநாமம் சாற்றி உடையவரை ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்றே அழைத்து மிகவே அகமகிழ்ந்தாள். அவரிடத்து ஸ்ரீ ஹயக்ரீவமூர்த்தி ஒன்றினையும் எழுந்தருளப்பண்ணிக் கொடுத்தாள் கலைமகள். அங்கிருந்து பூரி ஜகந்நாதர் ஆலயம் சென்று தரிசித்தார். இரவு பூரியில் துயின்றவர் மறுநாள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகூர்மத்தில் கண்விழிக்கின்றார். இறைவனின் திருவிளையாடல் என்றுணர்கின்றார். ஸ்ரீகூர்மம் அவ்வமயம் ஒரு சைவஸ்தலமாக உரு மாறியிருந்ததைக் கண்டு பல பிரமாணங்களை அங்குள்ளோரிடத்து எடுத்துக்காட்டி ஒரு சிறந்த வைணவத்தலமாக மாற்றுகின்றார். விஜய ஸ்தம்பம் ஒன்றினையும் ஸ்தாபித்து, ஸ்ரீகாகுளம் வாரங்கல் சிம்மாச்சலம் ஆகிய ஊரிலுள்ள பெருமாள்களையெல்லாம் ஸேவித்து அஹோபிலம் சென்றடைந்து அங்கிருந்து திருமலை சென்றடைகின்றார். அங்குள்ள சைவர்கள் திருவேங்கடவன் முருகன்தான் என்று பெரிய சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அனைவரையும் கூட்டி ஒருபுறம் திருமாலின் ஆயுதங்கள் மறுபுறம் சிவனின் ஆயுதங்கள் ஆகியவற்றை மூலஸ்தானத்தில் வைத்து பெருமாளுக்கு எது உகப்போ அதனைத் தரித்து தாம் யார்? என்பதை நிலைநிறுத்துவார் என்று அறிவித்து கர்ப்பகிரஹத்தினை திருதாளிட்டு மறுநாள் திறந்து ஸேவித்தபோது திருவேங்கடமுடையான் சங்கையும், ஆழியும் தரித்து ஸேவை சாதித்தருளிக் கொண்டிருந்தார். ஆனந்தப்பட்ட ஸ்ரீபாஷ்யகாரர் பெருமாளின் மார்பில் திருமகளை எழுந்தருளப் பண்ணினார். தோமாலை ஸேவை இவர் ஏற்படுத்தியதுதான். இங்கு இன்றளவும் காலைத் திருவாராதனத்தின்போது நடக்கும் ஜீயர் கோஷ்டியும் இவர் ஏற்படுத்தியதுதான். திருமலையிலிருந்து திருவல்லிக்கேணியடைந்து பார்த்தஸாரதி கோவிலில் மங்களாஸாஸனம் செய்தருளி வரும் வழியிலுள்ள திவ்யதேசங்களையெல்லாம் சேவித்தவாறே தனது 78வது வயதில் திருவரங்கம் திரும்புகின்றார் ஸ்ரீபாஷ்யகாரர். ஆறு ஆண்டுகள் கழிந்து திருவரங்கம் திரும்பிய உடையவரை ஸ்ரீரங்கமே எதிர்கொண்டழைத்துக் கொண்டாடியது. ஆழ்வார்களின் திவ்யபிரபந்தத்தில் மிகவே லயித்து கண்ணீர் மல்க அந்த அனுபவத்தோடே அரங்கனின் கைங்கர்யத்தினை தனது உயிர் மூச்சாகக் கொண்டு மிக்க புகழோடு விளங்கினார் உடையவர்.

உத்தமநம்பியின் கனவிலே அரங்கன் தோன்றுகின்றான். அவரது குமாரத்தியை கூரத்தாழ்வாரின் குமாரர் பட்டருக்கு திருமணம் செய்துவைக்குமாறு அருளுகின்றான். அவ்வண்ணமே தனது இரு குமாரத்திகளில் மூத்தவளான அக்கச்சியை பராஸரபட்டருக்கும் இரண்டாவது குமாரத்தி மன்னியை சீராமப்பிள்ளைக்கும் மணமுடித்து வைக்கின்றார்.

ஸ்ரீரங்கஸ்ரீ வைபோகமாய் வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. எம்பெருமானாரின் கீர்த்தி எட்டு திக்கும் செழித்தோங்குகிறது!.

+++++++++++++++++++++++++++++

வேம்கடபுரத்தில் உள்ள ஸ்ரீகாரண கரிவரதராஜ பெருமாளின் அந்த ஆத்மபந்துவின் திருநாமம் திரு. மஹாலிங்கம். கவுண்டர் பிரிவினைச் சார்ந்த இவர்களது முன்னோர்களால் கட்டப்பட்டதுதான் இந்த ஆலயம். கோவிலில் பூசை செய்வோர் அனைவரும் யாதவ குலத்தினர். பெருமாள் சுயம்பு. ஸ்ரீகாரைமரம் தலவிருட்சம். இது சுயம்புவானப் பெருமாளுக்கு ஆதிசேஷன் குடைபிடித்தாற் போன்று தாழ்ந்து விரிந்து தன்னுடைய சுவாமிக்கு குடையாயுள்ளது.

ஸ்ரீரங்கத்திற்கும் இந்த கோவிலுக்கும் ஏதோ ஒரு பலத்தத் தொடர்பு இருந்திருக்க வேண்டும்!

திரு மஹாலிங்கம் அவர்கள் அழகப்பா பல்கலை கழகத்தின் ப்ரோகிராம் ஆபீஸராக தற்சமயம் பணியாற்றிக் கொண்டுள்ளார்.
திரு வேளுக்குடிக் கிருஷ்ணன் அவர்களின் உபந்யாஸித்தானால் ஈர்க்கப்பட்டு வைணவத்தில் முழு ஈடுபாடு கொண்டு ஸ்ரீரங்கம் ஸ்ரீகோயிலண்ணன் அவர்களிடத்து பஞ்சசம்ஸ்காரம் செய்யப் பெற்றவர். பஞ்ச சமஸ்காரம் செய்யப்படும் முன்பே இவரை ஆழ்வார் திருநகரியினைச் சார்ந்த ஸ்ரீசதாபிஷேக ஸ்வாமி என்றழைக்கப்படும் பரம கைங்கர்யபரால் ‘இளையாழ்வார்’ என்றழைக்கப்பட்டவர். பஞ்ச சம்ஸ்காரம் ஆனபின்பு கோயிலண்ணனால் இடப்பட்ட நாமதேயமும் இளையாழ்வார்தான்! இதனால்தானோ என்னவோ இராமனுஜ தர்ஸனத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராய், ஸ்ரீரங்கத்திலிருந்து மைசூர் மேல்கோட்டை வரை உடையவர் சென்ற பாதையில் தாமும் கால்நடையாக தமது நண்பர்களுடன் சென்று ஆராய்ந்துள்ளார். இந்த பயணத்தின் போது இவரும் இவரது நண்பர்களும் ஆங்காங்குள்ள பெருமாள் கோவில்களில் மட்டும் கிடைத்ததையுண்டு, ஒரேயொரு மாற்று வேஷ்டி மற்றும் துண்டு மட்டும் கையில் கொண்டு மூன்றே நாட்களில் ஸ்ரீரங்கத்திலிருந்து மேல்கோட்டையினை அடைந்தனர் என்றால், இவர்களது அசுர பக்தியினை என்னவென்பது? இப்போது இராமனுஜர் சென்றவிடமெல்லாம் தாமும் தம் நண்பர்களுடன் நடந்தே சென்று தரிஸித்து வர ப்ரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றார்! ஸ்ரீகாரண கரிவரதனிடத்து தனது தாய் தந்தையரைப் போன்ற பிரியம். வாளாதுயிருப்பனா வரதன்? இவரிடத்தே அவ்வப்போது விளையாடுகின்றான்!. குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்தானே!. குடி கொண்ட இவன் இங்கு வரம் தரும் வரதனாயுள்ளான்!.

-posted on 7th July’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: