Srirangapankajam

July 7, 2008

PESUM ARANGAN-66

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 2:43 pm

யோகம் செய்தல், நன்மை செய்தல், வேத அத்யனனம், ஜெபித்தல், யாகம் வளர்த்தல், தர்மம் செய்தல், தீர்த்த யாத்திரை போதல் போன்றவற்றை விட என்னை (பகவானை) அடைய எளிய வழி சத்சங்கங்கள்தாம். அது நல்லோரின் சேர்க்கையேயாகும். அதுவே பந்தங்களிலிருந்து விடுதலையளிக்கும்.

ஆகையால் உத்தவரே! காஸ்திரங்களின் கட்டளைகளையும், தடுக்கப்பட்டவற்றையும் கைவிட்டு, இன்பம், தியாகம், அறிந்தவை, தெரிந்தவை, இனி அறியப் போகின்றவை யாவற்றையும் கைவிட்டு, முழுமனத்துடன் என்னிடம் அடைக்கலம் புகுவாய். உலகிலுள்ள எல்லாவற்றிலும் கலந்து நிற்பவன் நான்! அஞ்சாமலிருப்பாய்!

-உத்தவ கீதையிலிருந்து-

இந்து மதம் என்பதனை யாராலுமே அழிக்கமுடியாது. சமணமும் ஜைன மதமும் தழைத்தோங்கியிருந்த காலகட்டத்தில்தான் ஆதிசங்கரர் அவதரித்தார். இந்து மதம் அழியாது ஒளிரச் செய்தார். வைணவத்திற்கும், சைவத்திற்கும் பல சுலோகங்களைப் படைத்தார். ஸ்ரீரங்கநாதஷ்டகம் என்று ரெங்கநாதர் பேரில் கூட இயற்றியுள்ளார். பஜ கோவிந்தம் இவர் பாடியதுதான்.

சைவம் மட்டும் தழைத்து வளர்ந்த ஒரு காலகட்டத்தில் நாதமுனிகள், ஆளவந்தார் தொடங்கி இராமானுஜர் அவதரித்தப் போது வைணவம் தழைத்தோங்கியது. இராமானுஜர் ஏற்படுத்தியது ஒரு வைணவ புரட்சியென்றால் கூட மிகையாகாது. இராமானுஜர் திருமலை பயணம் சென்றபோது பருத்திக்கொல்லையென்ற ஊரிலிருந்த எண்ணாயிரம் சமணர்களோடு வாதில் வென்று அவர்கள் அனைவரையும் வைணவராக்கினார். அது முதல் அந்த ஊர் ‘அஷ்டசகஸ்ரம்’ என்று அழைக்கப்படலாயிற்று.

இராமானுஜ சத்சங்கம் மகத்தானது. இராமானுஜர் ஆஸ்ரயித்த மஹான்களும், இராமானுஜரை ஆஸ்ரயித்த சீடர்களும் பெரிய ஞானிகள். அமுதனாரிடத்துதான் ஸ்ரீரங்கஸ்ரீயின் திறவுகோல் இருந்தது. அவர் சற்று சிரத்தைக் குறைந்ததைக் கண்ட இராமானுஜர் கூரத்தாழ்வாரை அமுதனாரின் தாயார் சிரார்த்ததிற்கு போக்தாவாகச் அனுப்பினார். பகுமானமாக ஸ்ரீரங்கஸ்ரீயின் திறவுகோலைப் பெற்று இராமானுஜரிடத்து சமர்ப்பித்தார் கூரத்தாழ்வார். தன்னைத் திருத்திப் பணிகொண்ட கூரத்தாழ்வாரால் எம்பெருமானாரின் சீடராகும் பேறு பெற்ற அமுதனார் ‘பிரபந்ந காயத்ரி’ என்று வைணவர்களால் போற்றப்படும், ஓப்பில்லாத ‘இராமானுஜ நூற்றந்ததி’யினை இயற்றினார்.

திருப்பதியினை அவ்வமயம் ஆண்டு வந்த விட்டலதேவன் என்ற அரசன் இவரது சீடரானான். திருமலையில் திருமலைநம்பிகளால் திருத்தி பணிக்கொள்ளப்பட்ட தன் பூர்வாஸ்ரம சிற்றன்னையின் குமாரரான கோவிந்தனைக் கண்டு ஆனந்தப்பட்டார். நம்பிகள், கோவிந்தனிடத்து, அவரைத் திருத்திப்பணி கொண்டதே இராமானுஜருக்காகத்தான்,
என்று கூறி கோவிந்தனை இராமானுஜரிடத்து ஓப்புவித்தார். இவர் இராமானுஜரால் ‘எம்பார்’ எனத் திருநாமமிடப்பெற்று அவரும் அவரது மனைவியும் ஸந்யாஸம் பெற்று கீர்த்தியோடு விளங்கினர்.

கூரத்தாழ்வாரும் அவரது மனைவி ஆண்டாளும் அரங்கனின் உணர்வோடு ஏதும் உண்ண மறந்து உபவாஸத்திலிருக்கையில், இவர்களது நிலையறிந்து அரங்கன் இரவில் தமக்கு படைத்திட்ட அரவணைப் பிரஸாத்தினை சக்கர்ராயர் (உத்தமநம்பி வம்சத்தின் ஒரு பிரிவினர்) மூலமாக கூரத்தாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் கொடுத்தனுப்புகின்றார். இரண்டு திரள்கள் உண்ட அவர்களுக்கு
(கி.பி.1087) பிரபவ வருடம் வைகாசி திங்கள் பெளர்ணமியன்று அனுஷ நட்சத்திரத்தில் இரட்டைக்குழந்தைகள் பிறந்தனர். த்வயம் மணக்கப் பிறந்த அக்குழந்தைகளுக்கு ‘பராஸர பட்டர்’ என்றும் ‘வேதவியாஸ பட்டர்’ என்றும் திருநாமங்கள் இட்டு அதன்மூலம் ஆளவந்தாரின் மூன்று குறைகளில் ஒரு குறையை நீக்கினார் எம்பெருமானார். பராஸரபட்டர் ‘பட்டர்’ என்றும் வேதவியாசபட்டர் ‘சீராமப்பிள்ளை’ என்றும் அழைக்கப்பட்டார்கள். அப்போது இராமனுஜருக்கு வயது 70. கூரத்தாழ்வாருக்கு
வயது 78.

ஆளவந்தாரின் மற்றொருக் குறையான, பிரம்மசூத்ரத்திற்கு பாஷ்யம் எழுதுவதற்காக போதாயன விருத்தி எனும் க்ரந்தம் இராமனுஜருக்குத் தேவைப்பட்டது. இது காஷ்மீரத்தினை அப்போது ஆண்டு வந்த அரசனிடம் மட்டுமேயிருப்பதை அறிந்தார் உடையவர். உடன் கூரத்தாழ்வானோடும் சில முக்ய சீடர்களுடனும் தனது 70வது வயதில் காஷ்மீரம் கிளம்புகின்றார்.
(வெகு வருடங்களுக்குப்பின் கூரத்தாழ்வாருக்குக் குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் அவரும் கிளம்புகிறார்!). மூன்று மாத கால பயணத்தின் முடிவில் காஷ்மீரம் அடைகின்றார்.

================================

பரந்து விரிந்து ஏறத்தாழ கேரளத்தில் உள்ள கோவில் போன்று அமைதியாக காட்சியளிக்கின்றது அந்த கோவில்! கோவில் கட்டி ஏறத்தாழ 350 வருடங்களிருக்கும். ஒரு ஒட்டடைக் கூட காணப்படவில்லை. சுத்தம்! படுசுத்தம்! எங்கும் எதிலும் சுத்தம்! சிறு பெண்கள் முதல் முதிர் பெண்மணிகள் வரை நெற்றியில் ஆண்டாளைப் போன்று திருமண் திருச்சூர்ணத்தோடு குழுக்கள் குழுக்களாக பிரிந்து எந்த வம்பும் பேசாமல் அவரவர் வேலையினைச் செய்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலும் திருமண்காப்போடு மேல் சட்டையின்றி தாஸானு தாஸர்களாய் ஸேவை சாதிக்கின்றனர்.
யாரும் அனாவசியமான அதிக பிரசங்கம் கிடையாது. பெண்கள் கோஷ்டி மூன்று பிரிவாக உள்ளது. சிறுமியர்கள் குழாம் ‘நப்பின்னைக் கோஷ்டி’ என்றழைக்கப்படுகின்றது. பெருமாள் புறப்பாட்டின் போது கோலாட்டம், கும்மி போன்று குதூகலத்துடன் கிளம்புகிறது. முன்னால் இச்சிறுமியர் நப்பின்னைக் கோஷ்டி. பின்னால் வயதில் மூத்த பெண்மணிகள் இவர்கள் ‘கோதை கோஷ்டி’. . பெருமாளுக்குகந்த புஷ்பங்களை சேகரித்து மாலைக்கட்டுதல் போன்ற புஷ்பகைங்கர்யம் இவர்களுக்கு! இவர்களுக்கும் பின்னால் நன்கு வயதான பெண்கள் ‘பிராட்டியார் கோஷ்டி’. அவரவர்கள் கையில் நாலாயிர திவ்ய பிரபந்தம். ஒவ்வொன்றுக்கும் அருளப்பாடு ஆகின்றது. அருளப்பாட்டிற்குத் தக்கவாறு அனைத்தும் தயாராகின்றது – அனைவரும் தயாராகின்றனர். ஆண்களில் ‘திருக்கச்சி நம்பிகள் கோஷ்டி’ பெருமாளுக்கு சத்ர, சாமரங்கள் வீசி திருஆலவட்டம் சமர்ப்பித்தவாறு வருகின்றனர். ஸ்ரீபாதந்தாங்கிகளின் ஓரே சீரான நடையழகுடன் வரதராஜர் கம்பீரமாக எழுந்தருளுகின்றார். வயது முதிர்ந்த ஆண்கள் ‘ரெங்கமன்னார் கோஷ்டி.’. இவர்களனைவரும் திவ்யபிரபந்தம் முழங்க வெகு கம்பீரமாகத் தொடங்குகிறது புறப்பாடு. உற்சவரை சேவித்தால் அன்று வார்த்த விக்ரஹம் போல் அவ்வளவு பளபளப்பு! தேஜோமயம்!. இந்த காலகட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் இதெல்லாம் சாத்தியம்தானா? எப்படி இப்படியொரு நோ்த்தி ஏற்பட்டது? எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறை இந்த கோவிலில் மட்டும் எப்படி முடிந்தது?
பிரதிபலன் என்று எந்தவொரு பயனும் எதிர்பாராமல் எப்படி இவர்கள் ஒன்றுபட்டார்கள்? கண்டது கனவா? இராமானுஜரின் தர்ஸனம் கொஞ்சம் கொஞ்சமாக நிதர்ஸனமாகின்றதோ….. ……?

இந்த ஊரின் பெயர் வேம்கடபுரம். நம் சங்கடங்கள் யாவும் தீர்க்கும் புரம். கோவை சின்னியம்பாளையத்தின் அருகேயுள்ளது. பெருமாளின் திருநாமம் ஸ்ரீகாரண கரிவரதராஜர். இவர்தான் சூத்ரதாரி! இவர்தான் இவையனைத்தையும் தன் ஆத்ம பக்தன் ஒருவர் மூலம் சாத்தியமாக்கிக் கொண்டு வருகின்றவர் ! வரதன் என்றாலே தன் மெய்யடியாரிடதது பேசுவானோ?

-posted on 6th July’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: