Srirangapankajam

July 5, 2008

PESUM ARANGAN-65

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 3:50 pm

இந்திரியங்கள், பொருள்களை முக்குணத்தால் உணர்ந்தாலும், ஞானமுள்ளவன் அந்த இந்திரிய சுகங்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளமாட்டான். நடந்தாலும், உட்கார்ந்தாலும், உணவு உண்பது போன்ற எந்த செய்கை செய்தாலும், அந்த செய்கையில் பந்தபடாமல் தனித்திருந்து உலகை கவனித்திருப்பான்.

இந்த உலகில் வாழ்ந்தாலும் காற்று, சூரியன், ஆகாசம் போல் எதிலும் கட்டுபடாமலிருப்பான். அவனது உயிர் (ஆன்மா) உடலிலிருந்தாலும், மனம், இந்திரியங்கள் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபட்டுக் காணப்படுவான். ஞானியானவன், இன்பம், துன்பம், நல்லவை, தீயவை யாவற்றையும் சமமாகப் பார்த்து, யாரையும் குறை கூறாமல் உலகில் வாழ்வான். அர்த்தமற்ற பேச்சுக்களையும், இறைவனின் மகிமைகளைப் பேசாத சொற்களையும் பேச மாட்டான்.
-உத்தவ கீதையிலிருந்து-

தர்க்கத்தில் தோற்ற யக்ஞமூர்த்தி, உடையவரின் பாதுகைகளை தலைமேல் தாங்கும் பேறு பெற்றது தனது வெற்றி என்று உடையவரோடு ஒன்றினார். பிறிதொரு நாளில் தனது மனைவியின் கண்கள்தான் உலகத்திலேயே மிக அழகு என்று போற்றிவந்த ஒரு மல்லனை, அரங்கனை சேவிக்கச் செய்தார். உடையவரின் உள்ளமறிந்த அரங்கன் கரியவாகிப் புடை பரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி. நீண்ட அப்பெரியவாய அழகிய கண்களை, கண்மலர்ந்து அவனுக்கு ஸேவை சாதித்தருள, உடையவருக்கு அடிமையானான் அவன். அவனுக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்வித்து, அவனுக்கு ‘வில்லிதாஸன்’ என்று திருநாமமிட்டு அவனது மனைவி பொன்னாச்சிக்கு ‘ஹேமாம்பாள்’ என்று திருநாமமிட்டு இருவரும் உடையவரின் ஆஸ்ரமவாஸியாயினர். உடையவரை மட்டுமே தெய்வமாக கருதி ஸேவை செய்த ‘ஆந்திர பூர்ணர்’ எனும் வடுகநம்பி அணுக்கத் தொண்டரானார். ஆளவந்தாரின் சீடர்கள் குடும்பத்தின் வாரிசுகள் ஏறத்தாழ அனைவரும் எம்பெருமானாரின் அந்தரங்க சீடரானார்கள்.

ஸ்ரீரங்கம் கோவில் கைங்கர்யத்தில் எந்த தாழ்வும் ஏற்படாவண்ணம் சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தார் எம்பெருமானார். தவறு செய்தவர்களை அன்போடு திருத்தி சிறப்பாக பணியாற்றுமாறு செய்தார். கோவில் பணிகளை, திருப்பதியார், திருப்பணி செய்வார், பாகவத நம்பிமார், உள்ளுரார், விண்ணப்பம் செய்வார், திருக்கரகக் கையார், ஸ்தானத்தார், பட்டாள் கொத்து, ஆரியபட்டாள், தாசநம்பி கொத்து” என பத்து கொத்துக்களாக்கி (பிரிவாக்கி) எந்தவிதத்திலும் எதிலும் குறைவில்லாதபடி, அவரவர்களுக்கு கைங்கர்யங்களைப் பிரித்து கொடுத்து, ஸ்ரீரங்கஸ்ரீயை சிறப்புறச் செய்தார்.

திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்து அவருக்கு உகப்பாக மாலைக் கட்டி கைங்கர்யம் செய்வதற்காக, மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினத்தருகே உள்ள ‘சிறுபுத்தூரில்’ அவதரித்த ‘அனந்தாண்பிள்ளை’ என்ற தம் அந்தரங்க சீடரை மனதார ஆசீர்வதித்து அனுப்பி வைத்து அங்கும் சிறப்புறச் செய்தார். திருவேங்கடமுடையான் அனந்தாண்பிள்ளையோடு பேசும் தெய்வமாயிருந்தார்.

இராமனுஜர் கீழத் திருப்பதி எனும் அலர்மேல் மங்காபுரத்தின் ஊரின் அமைப்பினை (Town Planning) திறம்பட அமைத்தார்.

ஸ்ரீரங்கத்தில் திருக்கோவில் நிர்வாகத்தினை (Temple Administration) ஏற்று திறம்பட நடத்திவந்தார்.

மேல்கோட்டை திருநாராயணபுரத்தில் ஊரையும் சீரமைத்தார். திருக்கோவில் நிர்வாகத்தினையும் ஏற்று திறம்பட நடத்தி வந்தார். (Both Town Plng. & Temple Admn.)

-posted on 5th July’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: