Srirangapankajam

July 4, 2008

PESUM ARANGAN-64

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:32 pm

திருமாலின் அவதாரங்கள் மற்றும் அவதார புருஷர்கள் எல்லாரும் சுகப்படுவதற்காக இப்புவியில் தோன்றவில்லை.
அவர்கள் கடந்து வந்த பாதை அனைத்துமே கஷ்டங்கள்தான். இதில் அவதார புருஷர்கள், ”கஷ்டங்கள் வந்த போது நாம் எப்படியிருக்க வேண்டும்’ என்று எடுத்துக்காட்டாக விளங்கினார்கள். இன்பமோ துன்பமோ எது வந்திடினும் அவர்கள் அதற்காக கொண்டாடவோ அல்லது கலங்கவோ இல்லை. துன்பம் செய்தாருக்குத் திரும்ப துன்பம் விளைவிக்கவில்லை. மாறாக த்வயம் மந்திரத்தினை அனுசந்தித்தவாறே இருந்தனர். ஆத்மாவினை பிரித்து இந்திரியங்களின் தன்மையினின்று அதற்கு ஆட்படாது, விலகி நின்று, தன்னை உற்று நோக்கும் கைவல்யத்தினை அவர்கள் அடைந்திருந்தினர். பொசுக்கும் சுடுமணலில் நம்பிகள் காலில் விழுந்தவர் எழுந்திராமல் நிற்பதென்றால் இந்திரிய சக்திகளுக்கு அப்பாற்பட்டவர்களுக்கோ அல்லது அதனை அடக்கி ஆள்பவர்களுக்கு மட்டுமேதான் சாத்தியம். அதே போல் தனக்கு விஷமிட்டவர்களுக்காக வருந்தி தான் உபவாஸம் இருந்துள்ளார். உபவாஸம் முழுவதும் த்வயத்தினை அனுசந்திந்திருப்பார். உபவாஸத்தினால் உடல் நலம் கெட்டபோதிலும், தளர்வுற்ற சரீரமாயினும், தன் ஆச்சார்யனான நம்பிகள் வருகிறார் என்றவுடன் எதிர் கொண்டழைக்கின்றார். தண்டனிட்டு வீழ்ந்து கிடக்கின்றார்.
ஆசார்யபக்தி என்பதற்கு இலக்கணம் வகுத்தவர் ஸ்வாமி கூரத்தாழ்வான் என்றால் மிகையல்ல.

எம்பெருமானாருக்காகவும் வைணவத்திற்காகவும், தான் பெரிதும் நேசித்த எம்பெருமானாரைக் காண இயலாதே என்று கூட சிந்திக்காமல், தனது திருக்கண்களை பிடுங்கி எறிந்த ஆசார்யபக்தி…இதனைப் பக்தி என்பதா? எம்பெருமானார் மீது கொண்ட பாசம் என்பதா?

என்னவொரு ஆச்சார்ய பக்தி! என்னவொரு தனக்கொரு இன்னா செய்தாருக்காக நன்னயம் செய்யும் பாங்கு! இந்த இராமனுஜ தர்சனம் இன்று யாரிடமாவது உள்ளதா?

என் நண்பர் ஒருவருடன் ஸ்ரீராமானுஜர் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் கூறிய ஒரு வார்த்தை என்னை செம்மட்டியால் அடித்தது போன்றிருந்தது. ‘ஒருவர் கொள்கையை அடியோடு புதைக்க வேண்டுமானால், அவருக்கு ஒரு சிலையெழுப்பி கோவில் கட்டி, வருடந்தோறும் அவருக்கு விழா எடுத்துக் கொண்டாடினால் போதும். அதை மட்டும்தான் நாம் இப்போது செய்து கொண்டிருக்கின்றோம். அதுவும் இப்போது ஸ்ரீபெரும்புதூர் உடையவர் சந்நிதியில் தரிசனத்திற்கு வரும் பெரும்பாலோர் ராகு கேது பரிகாரத்திற்காக வரும் கூட்டம்தான். (ஏதோ அந்த ஒரு கிரக பயத்திற்காகவாவது வருகின்றதே!) இராமனுஜர் பின்பற்றிய நடைமுறையை நாம் யாரவது பின்பற்றுகின்றோமா?, நடைமுறையில் எங்காவது காண்கின்றீர்களா?” என்றார். நான் ஏதும் கூற முடியவில்லை!. கோவையில் ஓரிடத்தில் சற்றே ஆறுதலடைந்தேன். இதுப்பற்றி பின்னர் கூறுகின்றேன்.

யக்ஞமூர்த்தி என்றவொரு மஹாவித்வான், தர்க்க சாஸ்திரத்தில் மஹா நிபுணன், மாயாவாதி. உடையவரின் கீர்த்தி பற்றி கேள்விப்பட்டவன் அவருடன் தர்க்கிக்கவேண்டும் என்று ஆவலுற்றான். ஸ்ரீரங்கம் வந்தடைந்தான். உடையவரைப் பார்த்து ‘என்னுடன் தர்க்கிக்கவேணும்’ என்கிறான். இவரும், ‘அப்படியே செய்கிறோம். நீ தோற்றால் என்ன செய்கிறாய்?’ என்று வினவ, அவன், ‘நான் தோற்றால் உம்முடைய பாதரக்ஷையை சுமப்பேன். உம்முடைய பேரையும் எனக்கிட்டு உம்முடைய சித்தாந்தத்திலே புகுரக்கடவேன்’ என்கிறான். உடையவர், தான் தோற்றால், மேற்கொண்டு எந்த க்ரந்தங்களையும் (நூல்களையும்) படைக்க மாட்டேன்” என்கிறார். இருவரும் சம்மதிக்கின்றனர். ஒரு புறம் மாயாவாதியின் சீடர்கள் இன்னொருபுறம் எம்பெருமானாரின் ஆயிரக்கணக்கான சீடர்கள். வாதப்போர் ஸ்ரீரங்கநாயகி தாயார் ஸந்நிதியின் எதிரேயுள்ள கருத்துரை மண்டபத்தில் நடக்கின்றது. பதினாறு நாட்கள் வரை வெற்றி தோல்வியின்றி நடக்கின்றது. பதினோழாம் நாள் யக்ஞமூர்த்தியின் வாதம் வலுப்பெறுகின்றது. குதூகலம் அடைகின்றான் அவன். வாடிய முகத்துடனே தம் மடத்திற்குத் திரும்புகிறார் இராமனுஜர். தம் திருவாராதனப் பெருமாளான பேரருளானைத் தரிசிக்கின்றார். கண்களில் நீர் ததும்புகின்றது. ‘பெருமாளே! ஆழ்வார்கள் தொடங்கி ஆளவந்தார் அளவாக இத்தனைக் காலம் ஓராண் வழியாய் ப்ரத்யக்ஷமாக வெற்றியடைந்து வந்த இந்த தர்சனம் அடியேனால் தோற்கக் கடவதோ? இந்நாள் வரையில் தேவரீர் ஸ்வரூப ரூப குண விபூதிகள் ஸத்யமென்று ப்ரமாணத்தை நடத்திக்கொண்டு போந்தீர். இப்போது ஒரு ம்ருஷாவாதியைக் கொண்டு வந்து என்னுடைய காலத்திலே எல்லா ப்ரமாணங்களையும் அழித்துப்போகட்டு லீலை கொண்டாட திருவுள்ளமாகில் அப்படியே செய்தருளும்” என்று மிகவே உள்ளம் வருந்தி விண்ணப்பஞ்செய்து அன்று உணவு ஏதும் உட்கொள்ளாமல் உபவாஸமிருந்து தூங்குகின்றார். பேரருளாளன் அவரது கனவில் பேசத் தொடங்கினான். ‘இளையாழ்வார்! நீர் முசிப்பானேன்? உமக்கு ஸமர்த்தனாய் இன்னொரு சிஷ்யனை உண்டாக்கி தந்தேன் காணும்! உம்முடைய பரமாச்சார்யரான ஆளவந்தார் அருளிச்செய்த மாயாவாத கண்டநத்தைச் சொல்லி அவனை ஜெயியும்” என்று தேற்றுகின்றான் பேரருளாளன்.

கண் விழிக்கின்றார் உடையவர். ‘இதொரு ஸ்வப்நமிருந்தபடியென்’ என்று மிகவும் திருவுள்ளம் உகக்கின்றார். உகந்த திருவுள்ளத்தினால் அவரது முகம் அன்றலர்ந்த தாமரைப்போன்று மலர்கின்றது. மலர்ந்த அம்முகத்தில் தேஜஸ் ஒளிர்ந்து பிரகாசம் மிகுகின்றது. தன் நித்யகர்மாக்கள் அனைத்தையும் முடித்துக் கொண்டு, திருவாராதனப்பெருமாள் பேரருளாளனை மனதில் வரித்துக் கொண்டு வாதத்திற்குக் கிளம்புகின்றார். யக்ஞமூர்த்தி, உடையவர் ப்ரஸந்நகம்பீரராய் மத்தகஜத்தினைப் போல் வருவதைப் பார்க்கின்றான். மஹாபுத்திசாலியான அவன் நடந்ததை ஒருவாறு யூகித்தறிகின்றான். ‘இது மாநுஷமன்று – அதிமாநுஷ சேஷ்டிதமாயிராநின்றது” இது மனித சக்தியன்று. அதற்கும் அப்பாற்பட்ட அருட்சக்தி என்பதனை உணர்கின்றான். தான் வாதம் புரிந்து வெல்லவே முடியாது என்று தீர்மானிக்கின்றான். உடையவரின் காலில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து தோல்விதனை ஏற்கின்றான். ‘அத்வைதமென்கின்ற மஹாகஜம் த்வைதமாகிற ஆழங்காற் சேற்றிலே அமிழ்ந்தது” இத்யாதி யுக்திகளையும் அருளுகின்றார். யக்ஞமூர்த்தி தன்னுடைய ஏக தண்டத்தினை முறிக்கின்றார். உடையவரின் பாதம் சரணடைகின்றார். உடையவர் அவரை தம்மோடு அணைக்கின்றார். அவருக்கு ‘அருளாளப்பெருமாள் எம்பெருமானார்’ என்று திருநாமம் சாற்றி சந்யாஸம் அருளுகின்றார். அரங்கனை தரிசனம் பண்ணிவைக்கின்றார். தம் மடத்திற்கு அழைத்து தம் ஆராதனை மூர்த்தி பேரருளாளனை ஸேவைப்பண்ணி வைக்கின்றார். ‘இவர் காணும் உம்மை நம் பக்கம் சேர்த்து அருளியவர்” என்றருளி உகக்கின்றார். அவருக்கு ஆழ்வார்கள் அருளிச்செய்த திவ்யபிரபந்தங்கள் திருப்பல்லாண்டு தொடங்கி நாலாயிரமும் ஓதுவித்து, தத்வசிக்ஷைகளையும் உபதேசித்தார்.

-posted on 4th July’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: