Srirangapankajam

July 3, 2008

PESUM ARANGAN-63

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 2:28 pm

உடையவர் ஆளவந்தாரின் சிஷ்யர்களைனைவரையும் ஆஸ்ரயித்து அவர்களிடத்து உபதேசங்கள் பல பெற்று மிக்க ஞானமும் கீர்த்தியும் உடையவராய் திகழ்ந்தார்.
நம்பெருமாளும், தாயாரும் இணைந்திருக்கையிலே கத்யத்ரயம் என்னும் ஒப்பற்ற சரணாகதி க்ரந்தத்தை அவர்கள்தம் திருவடிகளிலே சமர்ப்பித்துக் கொண்டாடினார்.
நித்ய திருவாராதனப்படி க்ரந்தத்தையும் அருளிச்செய்தார்.
‘பரப்ரஹ்மம் ஸ்ரீமந் நாராயணனே’ என்று அறுதியிட்டு, ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினையும் செவ்வனே நடத்திக் கொண்டிருந்தார். இவரது நேர்மையான நடவடிக்கைகள் கண்டு வெறுத்த தீயோர்கள் கும்பலும் இருக்கவேச் செய்தது. இவர்களில் ஸ்ரீரங்கம் கோவில் கைங்கர்யபரர்களும் சிலர் உண்டு.

சந்யாஸி என்ற முறையில் தினமும் உடையவர் தினமும் பிக்ஷை எடுக்க வரும் போது ஒருவரது வீட்டில் இவருக்கு நஞ்சு கலந்த உணவு பிக்ஷையாக இடப்பட்டது. உடையவரிடத்து பரிவும் அன்பும் கொண்ட அந்த வீட்டின் இல்லத்தரசி வழக்கத்திற்கு மாறாக பிக்ஷையிட்டபின் சடாரென அவரை வீழ்ந்து வணங்கி கண்களில் நீர் பொங்க உள்ளே சென்று விட்டாள். சந்யாஸிகள் பிக்ஷைப் பெறும் போது யாரேனும் ஸேவித்து விட்டால் அன்று அவர்கள் உபவாஸம் இருக்க வேண்டும். இதென்? என்று யோசித்த உடையவர் விவரமறிந்தார். அது முதலே உபவாஸமிருக்கத் தொடங்கினார். உடையவரது உடல்நலம் குறையத் தொடங்கியது. திருக்கோட்டியூர் நம்பிகள் இதனைக் கேள்விப்படுகின்றார்.

தனது தள்ளாத வயதிலும் தாம் இப்போது உடையவரைக் காண வேகவேகமாக ஸ்ரீரங்கம் நோக்கி வருகின்றார். ஒரு உச்சி வெய்யில் பொழுதினில் காவிரிக்கரையினில் இருவரும் சந்திக்கின்றனர். உடையவர் நம்பிகளின் காலடியில் தள்ளாடியபடியே வீழ்கின்றார். நம்பிகள் அவரை எழுந்திரு என்றேச் சொல்லாது நிற்கின்றார். சிறிது நேரம் காத்திருந்து பார்த்த பெரிய திருமலை நம்பிகளின் மருமகனும், இராமனுஜரின் சீடருமான, கிடாம்பியாச்சான் ‘இதென்ன சிஷ்ய ஆச்சார்ய க்ரமம்? கருமுகை மாலையினை வெய்யிலிலே வாடவிடுவார்களா?’ என்று கோபித்தார்.
.
எம்பெருமானாரின் திருமேனியை தம் மேல் சாத்திக் கொண்டார். நம்பிகளுக்கு நம்பிக்கைப் பிறக்கின்றது.
”உம்மைத் தான் தேடுகிறோம். திருமேனிக்கு பரிந்தது நீர்தான். இன்று முதல் தளிகைப் பண்ணி நீர் ஒருவர் மட்டுமே இராமனுஜருக்கு பிக்ஷை சாதிக்க வேண்டியது” என்று ஆக்ஞையிடுகின்றார். கிடாம்பியாச்சானும் அப்படியே பண்ணி ஸாதித்துக் கொண்டு எழுந்தருளியிருந்தார்.

-posted on 3rd July’ 2008-

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: