Srirangapankajam

June 30, 2008

PESUM ARANGAN-62

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 1:48 pm

ஆளவந்தார் தம் சீடர்களான பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலையாண்டான், திருவரங்கப் பெருமாளரையர் ஆகியோர் அனைவரிடத்தும் சில ரஹஸ்யார்த்தங்களை தனித்தனியே உபதேசித்துள்ளார். ஒரு ராஜாவானவர் எப்படி மந்திரிகளிடத்து தனிதனியே சில நிதிகளையளித்து தன் வம்சத்தார்கள் பட்டத்திற்கு வரும் போது ஓப்படைக்கச் சொல்லுவாரோ அது போன்று ஆளவந்தார், இராமனுஜர் அவதாரத்தினையறிந்து தம் சீடர்களிடத்து இந்த மந்திரார்த்த பொக்கிஷத்தினை உபதேசித்தார். ஆளவந்தாரின் சீடர்களான இவர்கள், ஆளவந்தாரை ஆஸ்ரயித்து இவ்வுபதேசங்களைப் பெறாத குறை நீங்க, உடையவருக்கு ஆச்சார்யனாகி மஹா ப்ரீதியுடனேயே தாம் கற்ற வித்தைகள் அனைத்தையும் உபதேசித்து பெருமைப் பெற்றனர். மற்றொருபுறம் உத்தமமான கைங்கர்யபரர்களை சிஷ்யர்களாக பெற்றார் உடையவர்.

ஒரு அற்புத மாணிக்க பதக்கத்தின் இரு புறமும் நல்முத்துக்கள் கோர்க்கப்பட்டு சிறந்த ஹாரமாக விளங்குவது போன்று இராமனுஜர் என்ற மாணிக்கத்தின் ஒரு புறத்தின் ஹாரமாகவும் மஹாஞானிகளான ஆச்சார்ய புருஷர்களும், மறுபுறத்தின் ஹாரமாக மிகச் சிறந்த சிஷ்யர்களும் வாய்க்கப் பெற்றனர்.

திருக்கோட்டியூர் நம்பி திருவாய்மொழிக்கு அர்த்தத்தினை திருமலையாண்டானிடத்தில் உபதேசம் பெற இராமனுஜரை பணிக்கின்றார். அதன்படி திருமலையாண்டனிடத்தில் திருவாய்மொழி உபதேசம் நடக்கின்றது. சிலவிடங்களில் திருவாய்மொழியின் சில பதங்களுக்கு இருவருக்குமிடையே அர்த்தத்தில் பேதம் உண்;டாகிறது. இதனைத் திருக்கோட்டியூர் நம்பி அறிந்து திருமலையாண்டானிடத்தில் ‘இராமனுஜர் சிலவிடங்கள் மாற்றி கூறிய அர்த்தவிசேஷங்களை அடியேன் ஆளவந்தார் உபதேசிக்கக் கேட்டிருக்கின்றேன். இராமனுஜருக்கு ஆளவந்தார் திருவுள்ளத்தில் என்ன அர்த்தம் உண்டானதோ அதைத்தவிர வேறு ஏதும் இராது ஆகவே தாங்கள் வியாக்யானத்தினைத் தொடர்ந்து நடத்தும்’ என்கிறார். அதன்படியே அவ்வப்போது சிலவிடங்களில் இராமனுஜர் மாறுப்பட்டாலும் திருவாய்மொழி வியாக்கியானம் உடையவருக்கு பூர்த்தியாயிற்று. ஒரு கட்டத்தில் திருமலையாண்டான். ‘நீர் ஆளவந்தாரைக் கண்ணினால் பார்க்கக் கூட இல்லாதிருக்கையில் இதெல்லாம் எப்படி சாத்தியம்’ என்று வினவுகின்றார். அதற்கு இராமனுஜர், ”நான் ஆளவந்தாருக்கு ஏகலைவன் அன்றோ?’ என்று சாமர்த்தியமாக பதில் கூறுகின்றார். ‘இதுவும் ஒரு திருவவதாரம். ஆளவந்தார் பக்கல் கேளாத அர்த்தமெல்லாம் இங்கே கேட்டோம்’ என்று இவரை தண்டனிட்டு அருளினார் திருமலையாண்டான்.

திருவரங்கத்தில் அத்யயன உற்சவத்தின் போது அரையர்களுக்கு கைங்கர்யம் அதிகம். அதனால் அந்த ஒரு கட்டத்தின் போது அதிகம் களைப்புறுவர். திருவரங்கத்தில் அப்போது திருவத்யயன உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தில் நடையாய் நடந்து அவரது நம்பிக்கையைப் பெற்ற உடையவர், திருவரங்கப் பெருமாளரையரிடத்தில் சரமோயுபாயத்தினை அறிய விரும்பி, இத்தகையத் தருணத்தினை நழுவ விடாமல் அரையரினை ஆஸ்ரயிக்கின்றார். அன்றுமுதல் அரையர் ஸ்வாமிக்கு உகப்பாகத் தொண்டை வறண்டு விடாமல் இருப்பதற்காக பக்குவமாக பால் காய்ச்சி அதில் விசேஷ த்ரவியங்களையெல்லாம் சேர்த்து அவ்வப்போது அரையர் ஸ்வாமிக்குத் தருகின்றார். மஞ்சளுடன் சீகைக்காய் இதர மூலிகைகளெல்லாம் சேர்த்து கலந்து, அபிநயம் பிடித்து ஆடிய களைப்புத் தீர அரையர் ஸ்வாமியின் திருமேனிக்கு எண்ணைக்காப்பிட்டு நீராட்டுகின்றார். ஒரு நாள் அரையர் ஸ்வாமி திருமுக மண்டலம் சற்றே பொலிவிழந்து காணப்படுகின்றது. இதனைக் கண்ணுற்ற இராமனுஜர் மஞ்சள் கலந்த மூலிகைக் கலவையை தூர எறிந்து பாங்காக வேறுவிதமாகக் கலவையைத் தயாரிக்கின்றார். திருவரங்கப் பெருமாளரையர் அதனைக் கண்ணுற்று உகப்புடனே, ”என்னுடைய ஸர்வசொத்தையும் கொள்ளைக் கொள்ளவோ நீர் இப்படிச் செய்தது” என்று செல்லமாகக் கோபிக்கின்றார். ”வாரீர் எம்பெருமானாரே! உமக்கு சரமபுருஷார்த்தஞ் சொல்லுகிறோம். கேளீர்” என்றே உகந்து உபதேசிக்கின்றார்.

என்ன? இதெல்லாம் ஒரு யதிகள் அதுவும் ஸ்ரீரங்கஸ்ரீக்குத் தலைமைப் பொறுப்பேற்றவர் செய்யலாகுமா? இது தகுமா?

தகும்!

எப்படி?

‘தீமனங்கெடுத்தும் மருவித்தொழும் மனமே தந்தும், அறியாதனவறிவித்த ஆசார்யனே உபாயோபேயம்”
(தீயமனம் வராது தடுத்து அதனை பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனை தொழும்படிச் செய்து அறியாத மந்த்ராத்தங்களை அறிய செய்யும், நாம் பரம்பொருள் தாள் அடைந்திடச் செய்யும், உபாயமாவது ஆச்சார்யன் திருவடிகளே!)

குருரேவ பரம ப்ரஹ்ம குருரேவ பரம் தனம்
குருரேவ பர:காமோ குருரேவ பராயணம்
குருரேவ பராவித்யா குருரேவ பரா கதி:
யஸ்மாத் தது தேஷ்டாஸௌ தஸ்மாத் குருதரோ குரு:

குருவே மேலான ப்ரஹ்மம். குருவே மேலான தனம். குருவே மேலான காமம். குருவே மேலான ப்ராப்யம். குருவே மேலான கல்வி. குருவே மேலான ப்ராவகம். அப்பரம்பொருளையே உபதேசிப்பதால் குரு அதைக் காட்டிலும் உயர்ந்தவர்.

ஆச்சார்யஸ்வ ஹரி சாக்ஷாத் சர ரூபி ந ஸம்ஸய:
ஆச்சார்யனே நேரே நடமாடும் பரமபுருஷன். இதில் ஐயமில்லை.

ஆளவந்தாரை ஆச்சார்யனாக வரித்த ஏகலைவனான இராமனுஜர், அவருடைய சிஷ்யர்களை ஆச்சார்யனாக அடைந்து கைங்கர்யம் செய்ததில் எந்த தவறுமில்லை. இதுவும் ஒரு திருவாராதனமே! நடமாடும் தெய்வத்திற்குச் செய்யும் சிறப்பான ஆராதனம்!

– இராமனுஜர் யதியாக மாறிய பின்னுமே ‘தான் ஜீயர் – தன்னிடத்தே எல்லாரும் உபதேசம் கேட்க வேணுமேத் தவிர தான் யாரிடத்தும் போய் எந்த கைங்கர்யமும் செய்யலாகாது, கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை’ என்ற மமதையில்லை.

– வாய்க்கு வந்தபடி எந்தவிடத்திலும் பேசவில்லை.

– சீடர்களைத் தேடவில்லை.

– ஆடம்பரம், படாடோபம் ஏதுமின்றி எளிமையாக இருந்தார்.

– அவர் தேடியது மற்றும் அவர் அனைவருக்கும் கொடுத்தது அனைத்துமே பகவத் விஷயம் மட்டுமே. எதை வெளிப்படுத்த வேண்டுமோ அதனை அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் அறிவித்தார். எதனை ரஹஸ்யமாகக் காப்பாற்ற வேண்டுமோ அதனை பேணி வளர்த்தார்.

ஆளவந்தாரின் சீடர்களை அடிபணிந்து அனவிரதமும் கைங்கர்யம் செய்து அவர்களது அன்பைப் பெற்று தன்னை மேம்படுத்திக் கொண்டார். ‘சிஷ்யனாகிலும் ஆச்சார்யனாகிலும் விலக்ஷண சம்பந்தமே வேண்டுவது’ என்றபடியே இவருக்கு முன்புள்ள ஆச்சார்யர்கள் இவருக்கு ஆச்சார்யர்களாய் வீறு பெற்றார்கள் பின்புள்ளவர்கள் சிஷ்யர்களாய் பேறு பெற்றனர்.

-posted on 30th June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: