Srirangapankajam

June 29, 2008

PESUM ARANGAN-61

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 12:54 pm

திருக்கோட்டியூர் நம்பிகள் எம்பெருமானை பரிபூர்ணமாக ஆசீர்வதிக்கின்றார். அறிவு நிறைந்த ஒரு குருவினிடத்து ஒரு புத்திசாலி சீடன் எப்படியிருக்க வேண்டும்? எப்படி பணிந்து கார்யம் சாதித்தல் வேண்டும் என்பதை உணர்த்தியவர் உடையவர். திருக்கோட்டியூர் நம்பிகளிடத்து நம்பிக்கைத் தளராமல் நடையாய் நடந்த இராமனுஜரை, இப்போது நம்பிகள் விடுவதாயில்லை. தாமறிந்த, தாம் அடைந்த அனைத்து ஞானத்தினையும் உடையவருக்குப் புகட்டுகின்றார். சரம சுலோகம், அதன் ரஹஸ்ய அர்த்தங்களை உடையவருக்கு மட்டுமே இம்முறை உபதேசிக்கின்றார்.
இதர சாஸ்திரங்களையும் தெளிவுற உபதேசிக்கின்றார். ”தெய்வத்தினை துவேஷிக்கும் நாஸ்திகர்கள் செவியில் படாதவாறு பேணிக்கொண்டு போரும்!” என்றருளுகின்றார். உடையவர் ‘கூரத்தாழ்வாருக்கு மட்டிலுமாவது உபதேசம் செய்ய அருளவேணும்’ என பிரார்த்திக்க

ஸம்வத்ஸரம் ததர்த்தம் வா மாஸத்ரயமதாபி வா
பரீக்ஷய விவிதோபாயை: க்ருபயா நி:ஸ்ப்ருஹோ வதேத்
ஒரு வருடமோ, அதிற்பாதியோ, மூன்று மாதமோ பலவிதமான உபாயங்களால், சிஷ்யனைப் பரீட்சை செய்து, கைம்மாறு கருதாமல் கேவலக்ருபையாலே உபதேசிக்க
வேண்டியது.

என்கின்றபடி அத்யாவசியத்தைக் கருத்தில் கொண்டு ஒரு வருடமாவது பணிவிடை செய்தபின் அருளுக என்று நியமித்தார். கீதோபதேசம் கேட்ட அர்ஜுனன் போன்று, மிகவும் தெளிந்த மனதினராய், மிகவும் ப்ரீதியடைந்தவராய் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் எம்பெருமானார். கூரத்தாழ்வானிடத்து அனைத்தும் கூறி பெருமையடைகின்றார் இராமானுஜர். கூரத்தாழ்வார் ”ஒரு வருடம் நான் உயிரோடு இருப்பேனோ மாட்டேனோ! ‘ஸம்வத்ஸர சுஸ்ரூஷா சமம் ஆச்சார்யன் திருமாளிகை வாசலிலே ஒரு மாதம் உபவாஸம் பண்ணுகை” என்று சாஸ்திரம் சொல்கின்றபடியே செய்ய உடையவர் மனமிரங்கி அவருக்கு தாம் கற்ற அனைத்தையும் பிரஸாதித்து அருளினார்.

முதலியாண்டான், கூரத்தாழ்வார் பெற்றபேறு தாமும் அடைய, பணிகின்றார் இராமனுஜரிடத்து.
” ஆழ்வான் ஒருவருக்கு மட்டுமே அனுமதி பெற்றேன். நீர் நம்பியிடத்தே அடிபணிந்து விண்ணப்பம் செய்வாயக” என்றருளிச் செய்ய, முதலியாண்டான் திருக்கோட்டியூர் செல்கின்றார்.

தினந்தோறும் திருக்கோட்டியூர் நம்பியின் பாதம் பணிவார். ஆனால் ஆறு மாதம் வரை நம்பிகள் இவரை கண்டு கொள்ளவேயில்லை. ஓரு நாள் இவராகவே அவரிடத்து அறிமுகம் செய்துகொள்கின்றார். தாம் ‘தாஸரதி’ என்கிறார். ‘ஆகில் என்?’ என வினவுகின்றார் நம்பிகள்.
‘சரம ரஹஸ்ய அர்த்தம் அடியேனுக்கு பிரஸாதித்து அருள வேணும்’ என பிரார்த்திக்கின்றார்.

வித்யா மதோ தநமதஸ் த்ருதியோபிஜநாந் மத:
ஏதே மதாவலிப்தாநாமேத ஏவ ஸதாம் தமா:

மதங்கொண்டவர்களுக்கு வித்யை, தனம், நல்லகுடிப் பிறப்பு என்னும் ஒவ்வொன்றும் மதத்திற்கு காரணமாகின்றது. இவைகளே நல்லோர்களின் நல்ல குணத்திற்கும் காரணமாகின்றன.

‘இம்மூன்று குறும்பும் உம்மை விட்டு அகலுமாயின் எம்பெருமானார் தாமே க்ருபைபண்ணி
உபதேசிப்பார். நீர் அஞ்சாதே போய்வா’ என்கின்றார் நம்பிகள். தாஸரதி ஸ்ரீரங்கம் திரும்புகின்றார். வருந்துகின்றார்.

உடையவர் எழுந்தருளி, ‘ ஆண்டான் நம்பி ஸந்நிதியில் ஸ்வரூப சிக்ஷை பெற்று வந்ததை பாருங்கோள் ” என்றருளி மிகவும் உகப்போடே குறும்பறுத்த முதலியாண்டானுக்கும் சரம சுலோக ரஹஸ்யார்த்தங்களை உபதேசிக்கின்றார். ‘இப்போதன்றோ நமக்கு தண்டும் பவித்ரமும் கைபுகுந்தது” என்று மகிழ்கின்றார் யதிராஜர்.

-posted on 29th June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: