Srirangapankajam

June 29, 2008

PESUM ARANGAN-60

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:03 am

இன்று நாம் சுலபமாக ஸர்வ சாதாரணமாக கேட்கும் சில மந்திரங்களுக்காக நம் பெரியோர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘ஓம் நமோ நாராயணாய” என்னும் இந்த அஷ்டாக்ஷர மந்திர உபதேசம் பெற இராமனுஜர் ஸ்ரீரங்கத்திற்கும் இங்கிருந்து ஏறத்தாழ 90 கிலோமீட்டருக்குக் குறைவில்லாதிருக்கும் திருக்கோட்டியூருக்கும் 18 முறை நடையாய் நடந்து (சுமார் 3240 கி.மீ) பல கஷ்டங்களை அனுபவித்து, தான் பெற்ற நிறைவை, இந்த மண்ணுய்ய, மண்ணுலகிலுள்ள மனிசர் உய்ய, நம் எல்லாருடனும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஸ்ரீரங்கஸ்ரீ பொறுப்பேற்ற உடையவர் பெரியநம்பிகளை ஆஸ்ரயித்து த்வய மந்த்ரத்தின் விரிவான அர்த்தங்களை உபதேசிக்கப்பெற்று மகிழ்ந்தார். பெரியநம்பிகள் ‘இதைக்காட்டிலும் இன்னமும் சில விசேஷ மந்த்ரங்களும், அர்த்த விசேஷங்களுமுண்டு. இவற்றினை ஆளவந்தாரின் அந்தரங்க சீடரான திருக்கோட்டியூர் நம்பி உபதேசிக்கப் பெறுவாய்’ என்றருளுகின்றார்.

முதன்முறை சென்று திருக்கோட்டியூர் நம்பிகளை பணிந்தபோது, நம்பிகள் உடையவரை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. ‘எவரிடத்தும் சொல்வதற்கில்லை” என்று உடையவரின் முகம் பாராமலேயே திருப்பியனுப்பி விட்டார். பின்னர் திருக்கோட்டியூர் நம்பிகள் ஒருமுறை ஸ்ரீரங்கம் வருகின்றார். அரங்கனைத் தொழுகின்றார். நம்பெருமாள்
”நம் இராமனுசனுக்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேசியும்” என்று அர்ச்சகர் மூலமாக பேசுகின்றார்.

அதற்கு நம்பிகள்,

”நா ஸம்வத்ஸரவாஸிநே ப்ரப்ரூயாத்”
ஒரு வருடமாவது குருவிற்கு பணிவிடை செய்யாதவனுக்கு உபதேசிக்கலாகாது.” எனவும்,

இதம் தே நாதபஸ்காய நாபக்தாய கதாசந
நா சாஸூஸ்ரூஷவே வாச்யம் ந ச மாம் யோப்யஸூயதி

பரம ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை, தவம் புரியாதவனுக்குச் சொல்லலாகாது.
(தவமே புரிந்தவனாயினும் உன்னிடமும் என்னிடமும்) பக்தியில்லாதவனுக்கு ஒரு போதும் உபதேசிக்கக் கூடாது.
(தவமும் பக்தியுமிருந்தாலும்) குருவிற்கு பணிவிடை செய்யதாவனுக்கு கூறலாகாது.
(வேறு எத்தனை குணமிருந்தாலும்) என்னைக் குறித்து அஸூயை கொள்பவனுக்கு சொல்லவேக் கூடாது.

என்று பல சாஸ்திர மேற்கோள்களை அரங்கனிடத்துச் சுட்டிக் காண்பிக்கின்றார் நம்பிகள்.

அதற்கு அரங்கன்,

‘சரீரத்தையும், பொருளையும், அறிவையும், வஸிக்குமிடைத்தையும், செயல்களையும், குணங்களையும், பிராணனையும், ஆச்சார்யனுக்காகவே என்று எவன் இருக்கின்றானோ அவனே சிஷ்யனெனத் தக்கவன். வேறு விதமாகயிருப்பவன் சீடனல்ல. இந்த லக்ஷணங்களை பூர்த்தியாக உடைய உடையவருக்கு உபதேசிப்பதற்கு எந்த தோஷமுமில்லை”

என்று அருளுகின்றார்.

அரங்கன் வாக்கினால் திருப்தியடைந்த நம்பி, அங்கு இவர் ஏதும் கூறமாட்டாரோ? என்று பரிதவிப்புடன் காத்திருந்த உடையவரை நோக்கி, ”ஊருக்கு வாரும்” என்று கூறி புறப்பட்டார். ஆனந்தமுடன் இராமனுஜரும் திருக்கோட்டியூர் அடைய, ”இன்றைக்குப் போய் வாரும்” எனத் திருப்பி அனுப்பி விட்டார். இம்மாதிரி ஒரு முறை இரு முறை அல்ல. பதினெட்டு முறை அலைய விட்டார்.

இராமனுஜர் கண்களில் நீர் ததும்ப வெம்பிவிட்டார். அச்சமயம் திருக்கோட்டியூர்நம்பியின் சீடர் ஒருவர் அரங்கனைத் தரிசிக்க வருகின்றார். அவரிடத்து,

”பூந்துழாய் முடியார்க்கு தகவல்ல. பொன்னாழிக்கையார்க்குத் தகவல்ல” (திருத்துழாயையும், பூவினையும் தலையில் தரித்திருக்கும், சங்குசக்ரதாரியாகயிருக்கும் உங்கள் பெருமாளுக்கு இது நியாயம்தானா?)’

என்று வருத்தப்படுகின்றார். திருக்கோட்டியூர் சென்ற அந்த சீடர் தன் குருவிடத்து உடையவரின் ஏக்கத்தினைக்கூறி தாமும் வருத்தப்படுகின்றார். நம்பிகளுக்கு உடையவரிடத்தில் உபதேசிக்கலாம் என்ற நம்பிக்கை அப்போதுதான் வருகின்றது. மீண்டும் அவரையே ஸ்ரீரங்கத்திற்கு அனுப்பி ‘தண்டும் பவித்ரமுமாக தாம் ஒருவர் மட்டுமே வருவது” என்று அழைக்கின்றார். உடையவர் தம் சீடர்களான முதலியாண்டன் மற்றும் கூரத்தாழ்வானுடனும் திருக்கோட்டியூர் சென்று நம்பிகளிடத்து தண்டன்சமர்ப்பிக்கின்றார். “உம்மை மட்டும்தானே வரச்சொன்னேன்? யார் இவர்கள்?” என நம்பி வினவ இவர்களைக் காட்டி இவர்கள்தாம் ”எம் தண்டும் பவித்ரமும்” என உரைக்கின்றார். இவர்கள் அனைவரிடத்தும் திருப்தியடைந்த நம்பிகள் ”இவ்வர்த்தத்தை நீங்கள் மற்ற யாருக்கும் உபதேசிக்கக் கூடாது” என பிரதிக்ஞை வாங்கிக்கொண்டு நலந்தரும் சொல்லான பெரிய திருமந்த்ரமான, எட்டு எழுத்தேக் கொண்ட அஷ்டாக்ஷரத்தினை , பதம் பதமாக பிரித்து விசாலமாக, ஸ்ரீவைஷ்ணவர்கள் நாத்தழும்பேற அனுசந்திப்பதான நாராயண மந்திரத்தினை உபதேசிக்கின்றார்.

உபதேசிக்கப் பெற்ற உடையவர் அடுத்தநாள் திருக்கோட்டியூர் ஸந்நிதியில் அநேக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தாம் பெற்ற திருமந்திரத்தினை பரமரஹஸ்யார்த்தத்தை உபதேசிக்கின்றார்.

இதனையறிந்த திருக்கோட்டியூர் நம்பி அதிர்ந்தார். வெகுண்டார். ‘ஒருவருக்கும் சொல்ல வேண்டாமென்று நியமித்த பிறகுதானே சொன்னோம். எந்த பலத்தில் அதனை மறந்து, மறுத்து உபதேசித்தீர்;” என்று கடுகடுக்க, ”ஆச்சார்ய நியமநத்தினை மறுத்த எனக்கு நரகம் உறுதி’ என்கிறார் பணிவாக. மேலும் தொடர்கின்றார், ”இந்த பாபத்தினால் அடியேன் ஒருவனேயன்றே நரகம் புகுவேன். தேவரீர் திருவடிகளை முன்னிட்டுச் சொன்னதினாலே இவ்வர்த்தத்தைக் கேட்ட, திருமந்திரத்தினை ஜபம் செய்கின்ற ஆத்மாக்கள் மேன்மையேயடையுமே” என்று கருதியே உபதேசித்தோம் என்று பணிவோடு நம்பிகள் திருவடி தொழுது கண்ணீரோடு உரைக்க, நம்பிகளுக்கு உள்ளுணர்வு உரைத்தது. இந்த உணர்வு, பரஸம்ருத்தி நமக்கு கூடிற்றில்லையே என்று வருத்தமுற்று கலங்குகின்றார். தம் திருவடிகளில் வீழ்ந்த உடையவரை தம்மோடு வாரியணைக்கின்றார். ‘எம்பெருமானாரே! வாரும்” என்று ஆரத் தழுவுகின்றார். இதுநாள் வரையில் இத்தர்ஸநம் (திருமந்திரப் பொருள்) பரம ரஹஸ்யமாக வைதீக சித்தாந்தமாகயிருந்தது. இன்று முதல் இது ‘இனி
”எம்பெருமானார் தர்ஸநம்” என்றே அழையுங்கள்’ என்று கூடியிருந்த அனைத்து வைணவர்களுக்கும் விண்ணப்பம் செய்தார்.

-posted on 28th june’ 2006

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: