Srirangapankajam

June 26, 2008

PESUM ARANGAN-59

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 12:16 pm

யதிராஜரின் சீடரான கோவிந்தஜீயர் ‘யதிதர்மஸமுச்சயம்’ என்னும் ஸந்நியாசிகள் கடைப்பிடிக்க வேண்டிய தர்மத்தினையும், அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய கர்மங்களைப் பற்றியும் ஒரு நூலை படைத்து அதனை இராமனுஜரும் திருக்கண் சாற்றி ஸந்தோஷித்து அருளினார். ஆச்சார்யனான இராமனுஜரின் திருவடிகளையே நினைந்து போற்றி, சிலகாலம் நிம்மதியாகயிருந்து பரமபதித்தார் கோவிந்தஜீயராக மாறிய யாதவப்பிரகாசர்.

திருவரங்கத்தில் வைணவத்தினைத் தலைமையேற்று நடத்த தகுந்த ஆச்சார்யனாக இராமனுஜரை அனைவரும் ஒருமனதாக முடிவு செய்தனர். அவரை ஸ்ரீரங்கத்திலேயே நித்யவாஸம் பண்ணும்படி அழைத்துவர வேணும் என தீர்மானித்து நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்தவண்ணம் இருந்தனர். பேரருளாளனிடம் யாசித்துப் பெற திருவரங்கப் பெருமாளரையரை அனுப்புகின்றனர்.

அவர் காஞ்சி போய் சேர்ந்தவுடன் அங்கு அவரது உறவினரான வரந்தரும் பெருமாளரையர் எதிர் கொண்டு அழைக்கின்றார். மறுநாள் காலையில் இருவரும் பேரருளாளன் ஸந்நிதி சென்று ‘கச்சிக்கு வாய்த்தான்’ என்னும் மண்டபத்தின் மேல் ஏறி நிற்கின்றார்கள். கோவிலார்களும், திருக்கச்சி நம்பிகளும், இராமனுஜரும் வந்து சேர அனைவரும் அருளாளனைத் தரிசிக்கின்றனர்.

கதாபுநஸ் சங்க ரதாங்க கல்பக த்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்நம்
த்ரிவிக்ரம த்வச்சரணாம் புஜத்வயம் மதீயமூர்த்தா நமலங்கரிஷ்யதி!

த்ரிவிக்ரம அவதாரம் செய்த எம்பிரானே! சங்கு சக்ரம்
கற்பகவிருக்ஷம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம் இவைகளை அடையாளமாக உடைய உன் திருவடித் தாமரைகள், என் தலையை எப்போதுதான் அலங்கரிக்கப் போகிறது.

என்றவாறு பிரார்த்தனைச் செய்தபடி எல்லா மரியாதைகளுடனும் ஸேவிக்கின்றார்.

பாலேய்தமிழான ஆழ்வாரின் பாடலான

“பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர்”
எனும் பாசுரத்திற்கும்

“தொழுதெழுதொண்டர்கள் தமக்கு பிணியொழிந்தமரர் பெருவிசூம்பருளும் பேரருளாளன்”
எனவும்.

” …கச்சிபோ் மல்லையென்று மண்டினார். உய்யல்லால் மற்றையார்க்கு உய்யலாமே?“
எனவும், தேவகானத்திலே இசையும், அபிநயமும் பிடித்து ஆடுகின்றார். சொக்குகின்றார் பேரருளாளன். ஒரு வரம் கேட்கின்றார் திருவரங்கப்பெருமாளரையர். ”நாமும் நம்பெண்டுகளுமொழிய நீர் வேண்டினதை தருகிறோம். அத்தைச் சொல்லிக் காணீர்” என்றருள அரையர் இராமனுஜரைச் சுட்டிக்காட்டுகின்றார். ‘இவரை அடியேனுக்குத் தந்தருளவேணும்” என்கின்றார். இதனைக்கேட்ட அருளாளன் ‘இவரையொழிய நீர் வேண்டியதைக் கேளும்” என்றருள, அரையர் ‘ராமராக அவதாரம் எடுத்த நீர் இரு வார்த்தை அருளாலாகுமா’ என்று வினவ ”தந்தோம்’ என்றருளினார் இராமனுஜரைப் பிரிய மனமின்றி!.

திருவரங்கப்பெருமாளரையர் ‘வாரும்” என்று உடையவரின் திருக்கைப்பற்றியழைக்க இருவருமாக பேரருளாளனிடத்தில் தண்டன் சமர்ப்பித்து பிறந்த வீட்டை விடுத்து புகுந்த வீட்டிற்குச் செல்லும் மகளைப் போல பேரருளாளினிடமிருந்து பிரிகின்றார் இவரும் பிரியமனமின்றி!. இராமனுஜர் தம் மடத்திற்கு கூடச் செல்லவில்லையாம். கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் பார்த்து ”நம் மடமே போய் நம்முடைய திருவாராதனப் பெருமாளாகிய பேரருளாளரையும் மற்றுமுண்டான ஸம்பந்தங்களையும் கொண்டு வாருங்கோள்” என்று அருளுகின்றார். திருக்கச்சிநம்பிகளிடத்து விடைபெறுகின்றனர் இருவரும்.

ஸ்ரீரங்கமதுலம் க்ஷேத்ரம் ஸ்ரியா ஜூஷ்டம் சுபாஸ்பதம்
யத்கத்வா ந நரோ யாதி நரகம் சாப்யதோகதிம்
(செல்வம் நிறைந்ததாய், மங்களங்களுக்கு இருப்பிடமான ஸ்ரீரங்கம் ஒப்பற்ற க்ஷேத்ரமாகும். அதையடைந்த மனிதன் நரகத்தையும் தாழ்ந்த கதிகளையும் அடைவதில்லை)

மங்களமான ஸ்ரீரங்கத்தினையடைகின்றனர் இருவருமே!. வடதிருக்காவிரியில் நீராடுகின்றனர். ‘நம் இராமனுஜனை எதிர்கொண்டு அழைத்துவாரும்” என்று ஸேனைமுதல்வர்க்கு உத்தரவிடுகின்றார் பெரியபெருமாள். பெரியநம்பிகள் தலைமையில் ஸ்ரீரங்கமே, நித்யசூரிகள் முக்தராய் வருவோரை விரஜைநதிக்கரையில் திரண்டு அழைப்பது போன்று, யதிராஜரை எதிர்கொண்டு அழைக்கின்றது. எதிர் கொண்டழைத்த ஸேனைமுதல்வரை தண்டனிட்டு, பின்னர் பெரியநம்பிகளின் அடிபணிந்து, திருவிக்ரமன் சுற்று வழியே பிரதட்சிணமாக வந்து, பெரிய பலிபீடத்திற்கருகே சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கின்றார். பின்னர் வடக்குக்கோபுர வாயிலையடைந்து அங்கு மேட்டழகியசிங்கரை தரிசித்து, ஸ்ரீரங்கநாயகி தாயாரிடத்து பணிகின்றார். தாயார் புன்முறுவலோடு கடாக்ஷிக்கின்றார். பின்னர் ஸ்ரீசந்திரபுஷ்கரிணி தீர்த்தம் ஸ்வீகரித்து, அருகேயுள்ள பரமபதநாதர் ஸந்நிதியடைந்து அங்கு ஆழ்வார், ஆச்சார்யர்களை வணங்கி மணல்வெளி வழியே பிரதட்சிணமாக வந்து, பிரணவாகார விமானம் ஸேவித்து
ஸேனைமுதல்வர் திருவடி தொழுது அழகிய மணவாளன் திருமண்டபத்தில்(சந்தனு மண்டபம்) ஏறுகின்றார். அங்கு அர்ச்சகர்களின் கைத்தலத்திலே அரங்கன் எதிர்கொண்டு அழைக்கின்றான். உடையவரும் அரங்கன் கருணைக்கண்டு சாஷ்டாங்கமாக விழுவதும், எழுவதும், தொழுவதுமாய் கண்குளிர தரிசிக்கின்றார். அரங்கன் திருக்கண் மலர்ந்து ஸேவை சாதிக்கின்றார். எதிர் கொண்டழைத்த அரங்கன் ஆஸ்தானம் அடைகின்றார். மூலஸ்தானத்தில் திருப்பல்லாண்டும், ஆழ்வார் பிரபந்தங்களையும் பாடிய வண்ணமே பெரியபெருமாளை அனுபவிக்கின்றார். பூரிக்கின்றார் அரங்கன். இந்த பூரிப்பினால் அரங்கன் அர்ச்சைத் திருமேனியிலேயே முத்து முத்தாக வியர்க்கின்றது. தம் சோதிவாய் திறந்து, ”பொங்கோதஞ் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்’ என்கிற உபய விபூதி ஐஸ்வர்யமனைத்தையும் உமக்கும் உம்மடியார்க்கும் தந்தோம். நம்முடைய வீட்டின் கார்யத்தையெல்லாம் ஆராய்ந்து நடத்தும்” என்று அருளுகின்றார். – அரங்கன் வீட்டினை இனி உடைமையாகக் கொண்டதால் அவருக்கு ‘உடையவர்” எனும் திருநாமமும் சாற்றி, உகக்கின்றான் அரங்கன். ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்” என்று நம்மாழ்வார் அருளிச்செய்த பவிஷ்யதர்த்தம் ப்ரத்யக்ஷமானது என்று மிகவே மகிழ்கின்றார். ஸ்ரீரங்கஸ்ரீக்குப் பொறுப்பேற்கின்றார் அதன் உடையவர்.

இராமனுஜர் ஆராதித்த திருவாராதனப்பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீபேரருளாளன், இன்னமும் ஸ்ரீரங்கத்தில் இராமனுஜர் சந்நிதியிலுள்ளது. ஸ்ரீரங்கம் வந்தபிறகு இந்த பேரருளாளனிடத்து இராமனுஜர் எவ்வளவு ப்ரியமாக திருவாராதனம் பண்ணியிருப்பார்? அவசியம் தரிசியுங்கள்.!.

நம் கிருஹத்திலுள்ள திருவாராதன மூர்த்திகள் நம் குடும்பத்தோடு ஒன்றியவர்கள். நாம் அன்போடு ஆராதனம் செய்வோமாயின், பரம கிருபையுடன், நம்முடனேயேயிருப்பர். என்றும் நம்மை காத்தருளுவர்.

நானும் எனது அண்ணா திரு ஆர்.வீ.ஸ்வாமி அவர்களும் சமயபுரம் அருகே மாகாளிக்குடி என்னும் சிற்றூரில்,
திரு.தாமோதரன் என்பவரிடத்தில் சோதிடம் பயின்று கொண்டிருந்தோம். அவரிடத்தில் ‘போகர் நாடி’ என்னும் நாடிக்குண்டான ஏடுகள் இருக்கின்றது. எங்களது குருநாதர் இதுகுறித்து எந்த விளம்பரமும் செய்ய மாட்டார். அவரது மாணவர்களுக்கு மட்டுமே இவரிடத்து நாடி ஒன்றிருப்பது தெரியும். ஒரு நாள் திரு ஆர்.வீ.ஸ்வாமிகள் தமக்குண்டான நாடிப் பார்த்து வருகையில், எங்கள் குருநாதர் உங்கள் வீட்டு ஆராதனை விக்ரஹம் ‘ஆராவமுதனா?’ என்று வினவினார். அதிர்ந்தோம் நாம். ஏனெனில் இவ்வளவு நாள் நெருங்கி பழகிய எனக்கேத் தெரியாது அவரது ஆராதனை மூர்த்தி யாரென்பது? அவரும் யாருக்குமே அதனைத் தெரியப்படுத்தவுமில்லை. நாடித் தொடர்ந்தது. ‘அவரது வீட்டின் ஆராதனை மூர்த்தியாகிய அமுதன் தினந்தோறும் அவர் ஆராதிக்கும் நேரத்தில் ஒரு சிறு ஒளிக்கீற்று போல் வந்து அனுக்ரஹித்து செல்கின்றார் எனவும் அமுதன்தான் அவர்கள் குடும்பத்தினையே ரக்ஷிக்கின்றார்’ எனவும். வீட்டிலுள்ள ஆராதனை மூர்த்திகளை நம் தாய் தந்தை போல் பாவியுங்கள். பாசம் காட்டுங்கள். நேசமுடன் நம் பக்கம் என்றுமிருப்பார் அவர்கள் நமக்கு துணையாக!

-posted on 26th June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: