Srirangapankajam

June 25, 2008

PESUM ARANGAN-58

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:35 pm

இளையாழ்வார் சன்னியாஸம் மேற்கொண்டதும் முதலில் அவரது சிந்தனையைத் தாக்கியது தீவிர சைவராக, உள்ளங்கைகொணர்ந்த நாயனராக பெயர் மாற்றம் பெற்ற கோவிந்தன்தான் ‘அவன் நமக்கு ஹிதப்ரவர்த்தகன், ஸர்வவிஷய விரக்தன், சாஸ்த்ர வைதக்த்யமுள்ளவன், இனி அவனை நம்மோடே சேர்ப்பாருண்டாகில் நல்லது. இப்போது அவன் பரம்பொருளை விடுத்து வழிபடுகின்றானே’ என்ற வருத்தம் உண்டாயிற்று. தனது தாய்மாமா பெரியதிருமலைபட்டரிடத்து தம் உள்ளக்கி;டக்கையை வெளிப்படுத்துகின்றார்.

இராமானுஜருக்கு பூர்வாஸ்ரமத்தில் இரண்டு சகோதரிகள்.
மூத்த சகோதரி பூமி நாச்சியார் இவரது கணவர் அனந்த தீட்சதர். இவர்களிருவருக்கும் ‘தாஸரதி’ என்றொரு சத்புத்திரன்; (கிபி1027) சித்திரை புனர்வசு அன்று பிறந்தார். இவரே இராமனுஜரின் முதல் சீடர். பஞ்சசம்ஸ்காரத்தின் போது ‘முதலியாண்டான்’ எனும் திருநாமம் பெற்றார். இராமனுக்கு ஒரு இலக்குவன் போல் இராமனுஜருக்கு முதலியாண்டான். பின்னாளில் இவர்
இராமனுஜரின் ‘தண்டு’ (திரிதண்டம்) எனவும், ‘பாதுகை’ என்றும் புகழப்பட்டார்.

இளைய சகோதரி கமலாம்பாள். இவரது கணவர் மஹாதயாதீசர். இவர்களுடைய குழந்தைக்கு ‘நடாதுராழ்வான்’ என்று திருநாமம். இவரே ஸ்ரீஇராமனுஜரின் ஸ்ரீபாஷ்ய வியாக்யானத்திற்கென நியமிக்கப்பட்டவர். இவரும் இவரது சீடரானார்.

இராமானுஜர் அவதரிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் (கி.பி.1009) தைமாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் ஸ்ரீராமனின் அம்சமாய் அவதரித்தவா; கூரேசன் என்கிற ஸ்ரீவத்ஸாங்கமிஸ்ரர். தர்மசிந்தனை மிக்க பெரிய தனவந்தர். இவரது அன்னசத்திரத்தின் கதவு ‘அடையா நெடுங்கதவு” என்றே அழைக்கப்பட்டது. இவரது துணைவியார் ஆண்டாள். மதிநுட்பமும், ஆழ்ந்த ஞானமுடையவர்கள் இத்தம்பதிகள். பேரருளாளன் ஏதுமறியாதது போல் ஒரு சூதுபண்ணி இவர்தம் செல்வத்தின் மேல் விரக்தி ஏற்படுத்தி இராமனுஜரிடத்து சீடராக்கினார். பஞ்சசம்ஸ்காரத்தின் போது ‘கூரத்தாழ்வான்’ என்று திருநாமம் பெற்றார். இவர் இராமனுஜரின் இரண்டாவது சீடர். இவா; இராமனுஜரின் ‘பவித்திரம்’ என்று புகழப்பட்டவர்.

பெரியதிருமலை நம்பிகள் கோவிந்தனைத் தேடி காளஹஸ்தி வந்து சேர்ந்தார். கோவிந்தன் சிவப்பழமாக ஒரு பூக்குடலையுடன் ஸ்வர்ணமுகி நதிக்கரைக்கு வந்துகொண்டிருந்தார். ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தின ஸ்லோகங்கள் எழுதிய சில ஓலைச் சுவடிகளை அவர் கண்ணில் படுமாறு தவறவிட்டிருந்தார் பெரியதிருமலை நம்பிகள். அதனை கையில் எடுத்துப்பார்த்த
கோவிந்தன் அருகில் நின்றிருந்த தனது தாய்மாமாவையும் பார்க்கின்றார். தாய்மாமா என்று அறிந்தும் அதிகம் பேசாது சிவபூஜைக்குத் திரும்பிவிடுகின்றார். திருத்துவது எளிதன்று என்று உணருகின்றார் தாய்மாமா. எனினும் இராமனுஜர் வாக்கின் மேல் நம்பிக்கை வைத்து அடுத்த நாள் அவர் கோவிந்தன் பூப்பறிக்கும் இடத்தின் அருகே ஒரு மரநிழலில் சில சீடர்களுக்கு திருவாய் மொழியிலிருந்து,

‘தேவும் எப்பொருளும் படைக்க,
பூவில் நான்முகனை படைத்த
தேவன் எம்பெருமானுக்கெல்லால்
பூவும் பூசனையும் தகுமோ”

என்ற பாசுரத்திற்கு அற்புதமாக ஆழ்மனதினில் பதியும் வண்ணம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க, அருகில் அதனைக் கேட்டுக்கொண்டிருந்த கோவிந்தன் என்கிற உள்ளங்கைகொணர்ந்த நாயனாரின் உள்ளத்தில் அரங்கன் அமர்ந்தான். தகாது! தகாது! என்று கதறியபடியே நெடுஞ்சாண்கிடையாக தாய்மாமா திருவடிகளில் வீழ்ந்தான். வாரியெடுத்து தொலைந்த கன்றினை அடைந்த தாய்பசு போல அணைத்துக் கொண்டார் பெரிய திருமலைநம்பிகள். கோவிந்தனுக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து அவனை ஆட்கொண்டார் பெரியதிருமலைநம்பிகள். இராமனுஜருக்கு தகவல் அனுப்பிவைத்தார். அளவிலாத ஆனந்தம் அடைந்தார் இவ்வைணவமுனி!

இராமனுஜரின் புகழும் சீடர்கள் குழுவும் பல்கி பெருகியது. இவரது தத்துவங்கள் அனைவரையும் கவர்ந்தது. தாம் தம் சீடரான இளையாழ்வாருக்குச் செய்த கொடுமைகள் அனைத்திற்கும் மிகவும் வருந்தினார் அவரது குருவான யாதவபிரகாசர். ஒருநாள் அவரது கனவில் பேரருளாளன், ‘நம் இராமனுஜரை பணிந்து சந்நியாசம் மேற்கொள்வாய்’ என்றருள, இதனையே திருக்கச்சிநம்பிகளும் அவரிடத்து பேரருளாளன் கூறியதாக உறுதி செய்ய, இராமனுஜரை ஆஸ்ரயித்து, மிகவும் தயங்கிய அவரிடத்து வெகுவாக விண்ணப்பித்து, ஸந்நியாசம் மேற்கொண்டார். ‘கோவிந்த ஜீயர்;” என்று யதியாக மறுபிறவியெடுத்தார் யாதவபிரகாசர். இராமனுஜர் எனும் விழுது வேராயிற்று. தம்முடைய குருவிற்கே ஆசானாக ஆன இராமனுஜர். யதிகளுக்கெல்லாம் யதியாக விளங்கினார். யதிராஜா ஆனார்.

-posted on 25th June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: