Srirangapankajam

June 25, 2008

PESUM ARANGAN-57

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:20 am

இளையாழ்வாருக்கு பேரருளாளன் பெரியநம்பியை குருவாகக் கொள் என்று அருளியதும், பெரியநம்பியிடத்து மேலும் அன்பு கொண்டு அவரிடத்து பணிந்து சீடராக ஸ்ரீரங்கம் நோக்கி செல்கிறார்.

ஸ்ரீரங்கத்திலிருந்து இளையாழ்வாரை வைணவத் தலைமைப் பொறுப்பேற்று நடத்துமளவுக்கு தகுதியுள்ளவராக்கி அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரவேண்டும் என்கிற ஒரு ஆவலோடு பெரியநம்பியும் அவரது மனைவியும் கச்சி நோக்கி புறப்படுகின்றனர்.

இவர்கள் இருவரும் மதுராந்தகத்தில் ராமர் ஸந்நிதியில் தரிசனத்திற்காக சென்றபோது சந்திக்கின்றனர். பேரானந்தப்படுகின்றனர். இளையாழ்வார் பெரியநம்பிகளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து தன்னை அவரது சீடராக்கி பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கும்படி பிரார்த்திக்கின்றார். பெரியநம்பிகள் ஆளவந்தாரையே குருவாக தியானிக்கும்படியும், தாம் ஒரு கருவியே என்றும், ஆளவந்தாரை தியானித்தபடியே மதுராந்தகத்திலேயே இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடக்கின்றது. இளையாழ்வாருக்கு அப்போது வயது 27. தாரண ஆண்டு ஆவணி வளர்பிறை பஞ்சமி. இந்நாளை கொண்;டாடும் வகையில் இன்றும் த்வயம் விளைந்த பூமியான மதுராந்தகத்தில் ‘பஞ்சசம்ஸ்கார உற்சவம்’ நடந்து கொண்டிருக்கின்றது. இவர்களெல்லாரும் சேர்ந்து காஞ்சிபுரம் செல்கின்றனர். திருக்கச்சி நம்பிகளோடு அளவளாவி பேரருளாளனைத் தரிசிக்கின்றனர்.

பெரியநம்பியையும் அவரது மனைவியையும் தம் திருமாளிகைக்கு அழைத்துக்கொண்டு அவரிடத்தில் நாதமுனிகள் மற்றும் ஆளவந்தார் அருளிச்செய்தவைகளையும், ஸ்ரீபாஞ்சாராத்ர ஆகமமுறைகளையும், பிரம்மசூத்ரத்தினையும், ஆழ்வார்கள் அருளிச்செயலையும் ஆறு மாதகாலமாக கற்றுக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே தஞ்சமாம்பாள் தன் வீடு தேடிவந்த வைணவரிடத்து ஏதும் இல்லை என்று பொய்கூறி அனுப்பியதை இளையாழ்வார் கவனித்தார். பின்னர் ஒரு நாள் பெரியநம்பிகள் மனைவியிடத்தே பலத்த சண்டை ஏற்பட்டு, பெரியநம்பிகள் இதனை பெரிதுபடுத்த விரும்பாததாலும், மேலும் பிரச்சினையை வளரவிடாமலிருப்பதற்காகவும், இளையாழ்வார் வெளியே சென்ற சமயம், யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஸ்ரீரங்கத்திற்குக் கிளம்பி விடுகின்றார். நிகழந்ததையறிந்த இளையாழ்வார் மனமுடைந்து துக்கித்து துடிக்கின்றார். கணவன் மனைவிக்கிடையேயிருந்த பிளவு நிரந்தர பிரிவாகியது. பேரருளாளனிடம் சந்யாஸத்திற்காக பிரார்த்திக்கின்றார்.

த்ரிதண்டம் உபவீதஞ்ச வாஸ: கௌபீநவேஷ்டநம்
ஸிக்யங்கவசமித்யேதத் பிப்ருயாத்யாவதாயுஷம்

முக்கோல், யஞ்ஞோபவீதம், காஷாயம், கௌபீனம், சிக்கம்(பிக்ஷை ஏற்றுக்கொள்ளும் வஸ்திரம்),
மேற்போர்வை காஷாயம் ஆகிய இவ்வனைத்தையும் சந்யாஸியானவன் தரிக்கக் கடவன்.

அர்ச்சகமுகமாக பேரருளாளன் மேலே குறிப்பிடனைத்தையும் தரிக்கக்கடவீர் என்றருளி, அவருக்கு இராமனுஜமுனி என்று திருநாமமிடுகின்றார்.
திருமங்கை மன்னனுக்கு பெருமாள் பஞ்சசம்ஸ்காரம் பண்ணிவைத்தார். இளையாழ்வாருக்கு சந்யாஸம்
அருளுகின்றார்.

திருக்கச்சிநம்பிகளிடம் ‘நம் இராமனுஜனை மடத்திலே வைத்து வாரும்” என்று கட்டளையிடுகின்றார். இளையாழ்வர் சன்யாஸியாக நம் இராமனுஜனாக ஆகின்றார். தன் குடும்பம் ஒழித்து ஒட்டுமொத்த வைணவ உலகிற்கும் தலைமையேற்க தயாராகின்றார்.

(எல்லா கெடுதல்களிலும் ஒரு நல்லது மறைந்திருக்கும் – எல்லா நல்லவற்றிலும் ஒரு கெடுதியும் இருக்கும். தஞ்சமாம்பாளின் குணம் நமக்கு ஒரு மாமனிதரை இராமனுஜமுனியை ஈந்தது.

அது சரி! பஞ்ச சம்ஸ்காரம் என்றால் என்ன?

ஒவ்வொரு வைணவனும் குருவிடமிருந்து பெறவேண்டிய ஒரு நிகழ்வு இது.

1) தாப ஸம்ஸ்காரம்: வலது தோளில் சக்கரத்தினையும், இடது தோளில் சங்கையும் நிரந்தர சின்னமாகக் கொள்ளுதல்.

2) புண்ட்ர ஸம்ஸ்காரம்: திருமாலின் பன்னிரு நாமாக்களைச் சொல்லி பன்னிரு இடங்களில் திருமண் இடப்பெறல்

3) நாம ஸம்ஸ்காரம்: ஒரு வைணவப்பெயரை குரு வைக்க பெறுதல்

4) மந்த்ர ஸம்ஸ்காரம்: திருமந்திரம், த்வயம், சரம சுலோகம் ஆகியவற்றினை குருமுகமாக உபதேசிக்கப் பெறல்.

5) யாக ஸம்ஸ்காரம்: திருவாராதனம் முறையாகக் கற்றுக்கொள்ளல் அல்லது அதற்கு உதவியாகயிருத்தல்.
இவையனைத்தையும் ஆச்சார்யனிடமிருந்து ஒரே சமயத்தில் அடையப் பெறுதலுக்கு பஞ்ச சம்ஸ்காரம் என்று பெயர்).

-posted on 24th June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: