Srirangapankajam

June 23, 2008

PESUM ARANGAN-56

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 1:54 pm

அரங்கன் மீது விரக்தியுற்ற இளையாழ்வார் பேரருளான் மீது முன்னைக்காட்டிலும் பெரும் அன்பு கொண்டு அதீத ப்ரீதராய் திருமஞ்சன கைங்கர்யம் செய்து வரலானார்.

”கிமப்யத்ராபி ஜாயந்தே யோகிநஸ் ஸர்வயோநிஷூ
ப்ரத்யக்ஷிதாத்ம நாதாநாம் நைஷாம் சிந்த்யம் குலாதிகம்”

எந்த குலத்தில் வேண்டுமானாலும் யோகிகள் விசேஷமாக பிறக்கிறார்கள். எல்லா ஆத்மாக்களுக்கும் தமக்கும் நாதனான ஸர்வேஸ்வரனை நேரில் கண்ட அவர்களுடைய குலம், கல்வி, ஓழுக்கம் முதலானவற்றைப் பற்றி ஆராயக்கூடாது.

பேரருளாளனிடம் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கும் வைசியரான திருக்கச்சிநம்பிகளிடம், ‘இவ்வாத்மாவை தேவரீர் உஜ்ஜீவித்தருள வேணும்” என்று தெண்டனிட்டு பிரார்த்திக்கின்றார். பொருளல்லாத என்னையும் ஒரு பொருளாக்கி பேரருளாளன் அடிமைக் கொண்டது கண்டு பரம வைதீக நிஷ்டையையுடைய நீர் விரும்பினீர். ஆயினும் எனக்கு இது தகாது என்று விலக்கியருளினார்.
நம்பிகள் நம்மை சீடராக தான் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றார் – அவர் சாப்பிட்டப்பின் அவர் மீதம் வைத்த பிரஸாத்தையாவது நாம் ஆச்சார்ய பிரஸாதமாக சாப்பிடுவோம் என்ற ப்ரஸாதப்ரதிபத்தி பிறந்தது இளையாழ்வாருக்கு!. நம்பியிடத்து, ‘அடியேன் குடிசையிலே அமுது செய்ய வேணும்’ என்று விண்ணப்பஞ்செய்து, தன் மனைவியிடத்து தளிகையைப் பாங்காக பண்ணிவை. நம்பியவர்கள் விருந்திற்கு வருகின்றார்’ என்று கூறி வேகமாக திருமஞ்சன கைங்கர்யம் செய்வித்து, கிரஹத்தில் தன் ஆராதனப் பெருமாளான பேரருளாளருக்கும் ஆராதனை, அமுதுப் படைத்து நம்பியை அழைக்கக் கிளம்புகின்றார். இவரது நோக்கம் புரிந்த நம்பிகள், வேறேரு பக்கமாக வந்து இவர் வருவதற்குள் ‘திருவாலவட்ட கைங்கர்யத்திற்கு உதவப்போக வேணும்’ என்று சடக்கென அமுதுசெய்து இளையாழ்வார் வருவதற்குள் போய்விடுகின்றார்.

இளையாழ்வார் வரும்போது நம்பிகள் சாப்பிட்ட இலையினை தஞ்சமாம்பாள் ஒரு கோலாலே தள்ளி, கோமயத்தாலே ஸ்தலசுத்தி செய்து, தானும் தலை முழுகி குளித்து விட்டு வந்தாள்.

இளையாழ்வாருக்கு ‘குண ஆசாரம்’ பெரிது. அவரது பத்னியான தஞ்சமாம்பாளுக்கு ”குல ஆசாரமே” பெரிது.
வந்தது இருவருக்குமிடையே பிளவு.

ஸந்நிதியில் நம்பிகளிடத்து வருந்துகின்றார் இளையாழ்வார். பின்னர், ‘அடியேன் சில விஷயங்கள் நினைத்துள்ளேன். அவற்றைக் குறித்து தேவரீர் பெருமாளிடம் விண்ணப்பம் செய்து அடியேனைத் தெளிவு படுத்த வேண்டும்’ என்று பிரார்த்திக்கின்றார். நம்பிகள் அன்றிரவு பேரருளாளனுக்கு ஏகாந்தமாக ஆலவட்டம் (விசிறி) சமர்ப்பிக்கின்றார். ‘நம்பீ! நம்முடன் சிலவார்த்தை சொல்ல விரும்பினாயோ?’ என்று வினவுகின்றார் பேரருளாளர். இளையாழ்வார் தம்மிடத்துக் கூறியதை பெருமாளிடம் சொல்லுகின்றார் நம்பீ!.

சகல சாஸ்த்ரங்களையும் அலகலகாக அறிந்திருக்கும் இளையாழ்வாரின் திருவுள்ள குழப்பத்தினை தெளிவு படுத்துகின்றார் பெருமாள்!

”பரத்வம் நாமே! பேதமே தர்ஸநம்! உபாயமும் ப்ரபத்தியே! அந்திம ஸ்ம்ருதியும் வேண்டா!
சரீராவஸாநத்திலே மோக்ஷம்! பெரியநம்பி திருவடிகளிலே ஆஸ்ரயிப்பது!”

1. நாமே பரம்பொருள்
2. ஜீவாத்மா வேறு. பரமாத்மா வேறு.
3. என்னை சரணடைவதே முக்திக்கு வழி
4. என்னை சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்க தேவையில்லை.
5. என் அடியார்களுக்கு சரீர முடிவில் மோக்ஷம் கொடுப்பேன்
6. மஹா பூரணராம் பெரியநம்பிகளைக குருவாகக் கொள்.
என்று கூறினார்.

”செப்புகின்ற பரத்துவமும் யாமேயென்ன செப்புதி வேறு
ஒப்பிலாதாய்! தரிசனமும் பேதம் என்றே உரைத்திடுக!
தப்பிலாத உபாயமதும் பிரபத்தியென்றே சாற்றிடுக!
அப்ப! புகல்க இவையன்றி நினைவும் வேண்டா! அந்திமத்தில்
இந்த சரீர அவதானம் தன்னிலிசையும் மோக்கமது!
அந்தமில்லாக் குணத்தினனுக்கு ஆசார்யனும் பெரியநம்பி!
சிந்தையுள்ளே இவையெல்லாம் தெளிந்து நோக்கி இளையாழ்வான்
முந்த நினைத்தான் இவை இவையே மொழிந்து வருக போயென்றான்”
-வடிவழகிய தாஸர்-ஸ்ரீராமானுஜ வைபவம்-

இவைகள்தாம் தாங்கள் நினைவோ என்று நம்பிகள் இளையாழ்வாரிடம் கேட்க, ‘ஆம்’; என்றார் மற்றற்ற மகிழ்வுடனே மாசறு நம்பியிடத்து!

(பெருமாளின் வலதுபக்கத்திலிருந்துதான் திருவாராதனம் செய்ய வேண்டும் என்பது விதி – ஆனால் பேரருளாளனுக்கு இன்றும் இடது புறத்தில் நின்றுதான் அர்ச்சகர் திருவாராதனம் செய்வார்கள். திருக்கச்சி நம்பிகள் எப்போதும் பெருமாளுக்கு அருகாமையில் வலது புறம் நின்று ஆலவட்ட கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்தமையால் அந்த இடத்தினை அவருக்காக இன்றும் இவர்கள் ஆக்ரமிப்பதில்லை!

இளையாழ்வார் திருக்கச்சிநம்பிகளின் சேஷத்தை கடைசி வரை உண்ண முடியாதே போயிற்று. உடையவரின் நெஞ்சிலுள்ள அவரது வருத்தத்தினை அரங்கன் இவர் விக்ரஹரூபத்திலிருக்கும் போது தீர்த்துக்கொண்டிருக்கின்றார். ஆழ்வார்கள் ஆச்சார்யனோடு அரங்கனிருக்கையில், தளிகை நிவேதனம் செய்கையில், திருக்கச்சிநம்பிகளுக்கு அமுது செய்த அதே பிரஸாதத்தைதான் உடையவருக்கும் கண்டருளப் பண்ணுவர்!)

-posted on 23rd June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: