Srirangapankajam

June 22, 2008

PESUM ARANGAN-55

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:51 am

ஆளவந்தார் என்னும் ராஜமாமுனி பரமபதித்தையடுத்து, ஸ்ரீரங்கம் கோவில் ஆஸ்தான தாஸிகள் அவரது ஆஸ்ரமத்தின் திருவாசல் திருவலகிட்டு (பெருக்கி) திருநீர் தெளித்து ஸ்தலசுத்தி செய்தனர். கோவிலார்கள் திருக்காவனமிட்டனர் (பந்தல் அமைத்து நான்கு புறமும் நடுவே வழிவிட்டு அடைத்தல்). அதனை கோடித்தனர்(துணியினால் அலங்கரித்தல்). தர்ப்பமாலைகள், செங்கழுநீர் மாலைகளால் பந்தலை அலங்கரித்து, பல கலர் பட்டுத் துணிகளை சிருங்காரமாக தொங்கவிட்டு, அழகான சாமரைங்களை குச்சிக்கட்டி அலங்கரித்தனர். திருக்காவனத்தின் நான்கு வாசல்களிலும் வாழைப்பழத்தாருடன் கூடிய வாழைமரங்கள் கட்டினர். இளம்பாக்குக் கொத்து, கரும்புகளால் வாசல்களை அலங்கரித்தனர். நாலுவாசல்களிலும் துணிக்கொடி நாட்டினர். பவித்ரமான ஓவியங்களை பொருத்தினர். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய த்வாரங்களில் முறையே பலாச, அஸ்வத்த, கதிர், உதும்பர தோரணங்களால் அலங்கரித்தனர். நெல்பரப்பி நடுவே ஒரு பூர்ணகும்பம், நான்கு கோணங்களிலும் ஒவ்வொரு பூர்ணகும்பம் கேசவன் தொடங்கி த்வாதசநாமம் உச்சரித்தபடியே ஸ்தாபித்தனர். த்வாதச (12) கலசங்களையும் இந்த ஐந்து பூர்ணகும்பங்களை சுற்றி ஸ்தாபிதம் செய்து, அந்த கலசத்திலுள்ள புனிதநீரீல் குஸதூர்வா, தர்ப்பம், விஷ்ணுக்ராந்தி முதலான புஷ்பங்களையிட்டு, குருபரம்பரையை த்யானித்து, பூர்வகமாக த்வயம் அநுசந்தானத்துடன் (பாராயணத்துடன்) கும்பார்ச்சனைப் பண்ணி, த்வாதஸ நாமாவினாலே கலஸ ஸ்தாபனம் பண்ணினார்கள். ஆளவந்தாருக்கு பஞ்சாமிருத ஸ்நாநனம் பண்ணுவித்து, ஈசானபாகத்தில் ஸங்கர்ஷண கும்பத்தினைத் தவிர்த்து பாக்கியுள்ள நாலுகும்பங்களையும் கொண்டு ஸ்ரீபுருஷசூக்தத்தினாலே திருமஞ்சனம் பண்ணுவித்தனர். திருச்சூர்ண பரிபாலனம் பண்ணுவற்காக ஒரு சிறுஉரல், உலக்கை ஆகியவற்றை எழுந்தருளப்பண்ணி, புண்யாஹசுத்தி செய்து, அவற்றிக்கு மஞ்சளிட்டு அதனை எடுத்துக் கொண்டு கோவில் தாஸிகள் திருவிக்ரமன் சுற்றினை வலம் வந்த பின், த்வாதஸநாம உச்சாடனம் செய்து திருச்சூர்ணமிடித்தனர்.
திருவரங்கப்பெருமாளரையரும் அவரோடு சேர்ந்தவர்களும் இதன் அஷ்டதிக்குகளிலும் திவ்யசூர்ண, திவ்யதைல, திவ்யாநுலேபந, திவ்யமால்ய, திவ்யதுக்த, திவ்யததி, திவ்யசுத்தஜல பூர்ணங்களை ஸ்தாபித்தனர்.
வடக்கே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கான ஸம்பாவணை த்ரவ்யகிழியினை வைத்தனர். ஸ்ரீபாததீர்த்தம் நிறைந்த கும்பத்தினை மேற்கே வைத்தனர். ஆளவந்தாரின் திருமேனியினை அனைவரும் சூழ எழந்தருளவித்து, அவரை தன் கண்களிலும், நெஞ்சினுள்ளும் தேக்கி வைத்து, திருப்பல்லாண்டு, கண்ணிநுன்சிறுத்தாம்பு, சூழ்விசும்பணிமுகில் இவைகளை திருவரங்கப்பெருமாளரையர் இசையோடு இயலாக அநுசந்திக்க, தாஸிகளின் திவ்யமான நாட்டியம், கீதங்கள், வாத்யங்களோடு வலமாக வந்து, மடத்து வாசலிலே இயல் சாற்றி, திவ்யதைல, திவ்யசூர்ணங்கள் அவரது திருமேனியில் சாற்றி, புனித கலச நீரினால் நீராட்டி, நம்பெருமாள் சாற்றி களைந்த சந்தனமும், சூட்டிக் களைந்த சுகந்தமும், உடுத்திக் களைந்த உடைகளையும் இவருக்குச் சாற்றி, ஆளவந்தார் திருமேனியினை நீராட்டும் போது சேகரிக்கப்பட்ட எண்ணைப்பிரஸாதம், ஸ்ரீசூர்ண பிரஸாதங்களை திருவரங்கப்பெருமாளரையர் ஸ்வீகரித்து பின்னர் கோஷ்டி விநியோகம் செய்யப்பட்டது. திருவரங்கப்பெருமாளரையர் ஆளவந்தாரின் திருவடிகளிலே தெண்டனிட்டு அவரது ஸ்ரீபாதங்களைத் தூக்கி தம் திருக்கண்களிலும், திருமார்பிலும், திருமுடியிலும் தரித்து மிகவும் ஸோகித்து மூர்ச்சையானார். அங்குள்ள முதலிகள் வந்து இவரைத்தேற்றி, ஆசுவாசப்படுத்தினர்.
ஆளவந்தாரை பல்லக்கில் ஏளப்பண்ணி, நம்பெருமாள் ஸ்ரீபாதந்தாங்கிகள் எழுந்தருளப்பண்ணிக் கொண்டு செல்ல,
திருச்சங்கு ஒலிக்க, ஆளவந்தாருக்கு முன்பாக தாஸிகள் ஆடிப்பாடி முன்னேற, வாத்யங்கள் முழங்க,
நடைபாவாடையிட்டு கரும்பும் குடமும் ஏந்தி, நெற்பொரியும், புஷ்பபுஞ்ஜமும் எங்குஞ் சிதற, சுமங்கலிகள் மங்கள தீபமேற்றி முன்னேச் செல்ல, ஆளவந்தாருக்கு இருபுறமும் சாமரமிட, மேலே கருடன் வட்டமிட, ‘தரிசனத்திலே ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளினார்” என்று திருச்சின்னம் ஒலிக்க, ஸ்ரீரங்கத்திலுள்ள ஜனங்கள் அனைத்தும் திரண்டு பின்வர, திருவீதிகள் வலம் வந்து, வடதிருக்காவிரிக் கரையோரம், திருக்கரம்பன் துறையிலே பள்ளிப்படுத்துவதற்காக எழுந்தருளப்பண்ணுகின்றனர். ஸங்கர்ஷண கும்பஜலத்தினால் பள்ளிப்படுத்துமிடத்தை சுத்திகரிக்கின்றனர். யதிகள் ஸம்ஸ்காரத்திற்கான அனைத்து விதிகளையும் முறையே செய்து கொண்டிருக்கின்றனர்.

வடதிருக்காவிரிகரையில் திரண்ட மாபெரும் கூட்டத்தினை காணுகின்றனர் அப்போதுதான் ஸ்ரீரங்கம் வந்தடைந்த பெரியநம்பிகளும், இளையாழ்வாரும். மனமுடைகின்றனர் ஆளவந்தாரின் மறைவு குறித்து. இருவரும் ஆளவந்தாரின் திருமேனியை சேவிக்கின்றனர். இளையாழ்வார் திருபாதத்திலிருந்து ஆழ்ந்து ஸேவித்துவர, வலதுகை மூன்று விரல்கள் மட்டும் உள்ளங்கையைத் தொட்டவண்ணம் மூடியிருப்பதைக் கண்ணுற்றார். இதில் ஏதேனும் ஒரு சூக்ஷமம் கண்டிப்பாகயிருக்கும் என்றுணர்ந்து அவரோடு எப்போதும் கூடவேயிருந்தவர்களிடத்தில் விசாரிக்கின்றார் ஆளவந்தாரின் தீராத உள்ளக்கிடக்கை ஏதேனும் உண்டோ? என்று!.

பெரியநம்பிகளும் மற்றையோரும், ‘ஆம்! அவருக்கு
மூன்று குறைகள் இருந்தது. அவை

(1) வேதவியாஸரின் பிரம்மசூத்ரத்திற்கு ‘போதாயனவிருத்தி’ என்ற போதாயனரின் விளக்கத்தழுவி
விசிஷ்டாத்வைத கொள்கைகளுக்கு ஏற்ப விரிவுரை செய்ய எண்ணியிருந்தார்.

(2) நம்மாழ்வார் அருளிய ‘திருவாய்மொழிக்கு” வியாக்கியானம் காணவும், அவரது பெயரை தகுதியுள்ள ஒருவருக்கு சூட்டி அவரது பெயரினை விளங்கச் செய்ய எண்ணியிருந்தார்.

(3) ‘விஷ்ணு புராணம்” அருளிச்செய்த ‘பராசரபட்டர்’ மற்றும் ‘மஹாபாரதம்” எழுதிய அவரது குமாரர் ‘வேதவியாசபட்டர்’ ஆகியோரது பெயர்களை தகுதியுள்ளோர்க்கு சூட்டி அவர்கள் புகழ் விளங்கச்செய்ய எண்ணியிருந்தார்.’

என்று கூறினார்கள். இளையாழ்வார், ”இவையே ஆச்சார்யனின் மனோரதங்கள் எனின் இம்மூன்றையும் தனக்கு ஆயுளும், ஆச்சார்ய கிருபையும், பகவத் அனுக்ரஹமும் இருக்குமாயின் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்’ என்று கூறி தனித்தனியே மூன்று முறை சங்கல்ப்பம் செய்கின்றார். ஒவ்வொரு சங்கல்ப்பம் முடியும் போதும் ஒவ்வொரு விரலாக நிமிர்ந்தன. கூடியிருந்தோர் மெய்சிலிர்த்தனர். இந்த ஸங்கல்பத்தினை இளையாழ்வார் கூறும்வரை ஆளவந்தாரின் ஆவி சூட்சமமாகயிருந்தது. தன் மனோரதம் பூர்த்தியடையப் போவதையறிந்து சாந்தியடைந்தது என்பர் பெரியோர்.

ஆளவந்தாரினை உயிரோடு சந்திக்கவிடாமல் செய்த நம்பெருமாளிடத்து விரக்தியுற்று, இளையாழ்வார் கச்சி நோக்கி திரும்புகின்றார் மனம் நொந்தவாறே!

(அது என்னவோ? நான் பலரை சந்தித்திருக்கின்றேன்.
முதன்முறை அரங்கனை ஸேவிப்பதற்குள் அவர்கள் படாதபாடு பட்டதாகச் சொல்லுவர். ஸ்ரீரங்கம் என்றாலே விரக்தியுறுவர். இதற்கு பிறகு இவர்களை நாம் சமாதானப்படுத்தி ஒரு முறை நாம் நன்கு ஸேவைப் பண்ணிவைத்தாலோ அல்லது அவர்களாகவே ஒரு முறை நன்கு ஸேவித்துவிட்டாலோ, அதன்பிறகு அவர்களுக்கு நாம் கூட ஒரு பொருட்டில்லை! அரங்கனும் அவர்களும் அந்தளவுக்கு அந்தரங்கமாகிடுவர்.

நல்ல அருமையான கலரில் பட்டு வஸ்திரங்கள் அவ்வப்போது வரும். வெகு சிரத்தையாக இரண்டு மூன்றுநாள் சாற்றிக்கொள்வார் என்று ஆசையோடு சாற்றுவோம். அமர்க்களமாகயிருப்பார். ஆனால் அன்றைய தினமே சாதாரண ஒரு அழுக்குக்கலர் பார்டரில் ஏதேனும் ஒரு சாதாரண ஆடை வந்துவிடும். இதனைக் களைந்து அதனை சாற்றினால் அதனை நாட்கணக்கில் சாற்றிக் கொள்வார். நல்லதே ஆகாதோ? என்று எரிச்சலாய் வரும் நமக்கு!

கழிசடை என்னையே கைங்கர்யத்திற்கு வைத்திருக்கின்றாரே அதற்கு இது பரவாயில்லைதான் என்று ஆறுதலடைவேன் உடனேயே!)

-posted on 22nd June’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: