Srirangapankajam

June 21, 2008

PESUM ARANGAN-54

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 1:52 pm

கங்காயாத்திரைச் சென்ற கோவிந்தன் ஒருநாள் கங்கைஸ்நானம் பண்ணும்போது அவரது கையில் ஒரு சிவலிங்கம் அகப்பட்டது. அவர் அதுமுதல் தீவிர சைவராகி தான் பிறந்த மழலைமங்கலத்திலே அதனைப் பிரதிஷ்டை செய்து உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்ற திருநாமத்தோடு சிவபூஜைகளைச் சிறப்புற செய்து வரலானார்.

புரீணாமபி ஸர்வாஸாம் ஸ்ரேஷ்டா பாபஹரா ஹி ஸா
நாம்நா காஞ்சீதி விக்யாதா புரீ புண்யவிவர்த்த நீ

நகரங்கள் அனைத்திலும் சிறந்ததாய், பாபத்தை போக்கடிப்பதாய், புண்ணியத்தை வளரச் செய்வதாயிருப்பது காஞ்சியென்று புகழ்பெற்ற அந்நகரம்.

கன்றைத் தேடிச் செல்லும் தாய்பசு போல் காஞ்சியில் யாதவப்பிரகாசருடனும், சிஷ்யர்களுடன் கூடியிருந்த இராமனுஜரை தூரத்திலிருந்து கண்குளிர கடாக்ஷித்தார்.
நம்மாழ்வார் அளித்த பவிஷ்யதாச்சார்ய விக்ரஹம் இவரேயென்று அறிந்தார். இவரே வருங்கால வைணவ தரிசனத்தின் வழிகாட்டி எனப்புரிந்து ஆறுதல் கொண்டு திருக்கச்சிநம்பியோடு அன்போடு அளவளாவி, பேரருளாளனின் திருவடிகளில் இராமனுஜரை நினைத்து பிரார்த்தித்து ஸ்ரீரங்கம் திரும்பினார்.

இராமனுஜரின் தேஜஸ், புகழ் மேன்மேலும் பரவியது. அந்நாட்டு இளவரசிக்கு பிரம்மராக்ஷஸ் பிடிக்க, அந்த இளவரசியின் திருமுடியில் இவரது பொன்னடிப்பட்ட பிறகே அது விலகியது.

ஆளவந்தார் நினைத்திருந்தால் அப்போதே இராமனுஜரிடம் அன்பு காட்டியிருக்கலாம்! ஏன் அவரை ஆட்கொண்டு இருக்கலாம்!. இராமனுஜர் அத்வைதம் யாதவபிரகாசரிடம் நன்கு கற்க வேண்டும். அப்போதுதான் இவர் இதனை பூரணமாகக் கண்டித்து விசிஷ்டாத்வைதத்தை நிலைநிறுத்த முடியும் என்பதுதான் அவரது மனநிலை. ஒன்றை மறுத்து பேசுவதென்றால் அதனைப் பற்றிய உண்மைகள் யாவும் தெரிந்திருந்தால்தான் சாத்தியம்.

அத்வைத பாடம் தொடர்ந்தது. ‘ஸர்வம் கலு இதம் பிரம்ஹ’ என்ற பதத்திற்கு ‘ஜீவனும் பிரம்மமும் ஒன்றே’ எனப் பொருள் கூற இளையாழ்வார் அதனை மறுத்து ‘ஜீவாத்மா வேறு – பரமாத்மா வேறு” என்று விசிஷ்டாத்வைதப் பொருளைக் கூறி நிலைநாட்டினார். தோல்வி பொறுக்கமாட்டாத யாதவபிரகாசர் இளையாழ்வாரை தம்மிடமிருந்து விலக்கினார். திருக்கச்சிநம்பிகள் அறிவுரைப்படி தீர்த்த கைங்கர்யம் செய்து வரலானார் இளையாழ்வார்.

அனைத்தையும் அறிந்தார் ஆளவந்தார். அப்போது அவர் சற்றே நோய்வாய் பட்டிருந்தார். தம் அந்திமகாலம் நெருங்குவதையறிந்த அவர் திருவரங்கப் பெருமாளரையர், பெரியநம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள் ஆகியோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார். பெரியநம்பிகளையழைத்து காஞ்சியிலிருந்து இளையாழ்வாரை அழைத்து வர பணித்தார்.

பெரியநம்பிகள் காஞ்சி சென்றடைந்து, ஆளவந்தாரின் பெருமைகளைனைத்தும் திருக்கச்சிநம்பியுடனே இளையாழ்வாருக்கு எடுத்துரைத்தார். இளையாழ்வாருக்கு ஆளவந்தாரை ஸேவிக்க வேணும் எனும் பெரிய ஏக்கம் உண்டாயிற்று. இருவரும் பேரருளாளனை தரிசித்து திருக்கச்சிநம்பிகளிடம் அனுமதி பெற்று ஸ்ரீரங்கம் நெருங்குகின்றனர்.

ஆளவந்தார் இதர கைங்கர்யபரர்கள் அனைவரையும் அழைத்தார். ”பெரிய பெருமாளுடைய திருவாராதநம், திருமந்த்ரபுஷ்பம் காலாகாலத்திலே நடத்திக் கொண்டு போருங்கோள். ஆச்சாரியர்கள், முதலிகள், தேசாந்திரிகள் முதலானோரை அரவணைத்துக் கொண்டு போருங்கோள்” என்று ஆசீர்வதித்து வேதபாராயணத்துடன் தம் குருவான மணக்கால்நம்பியினை தியானித்த வண்ணமே தம் ப்ரஹ்மந்த்ரத்தாலே திருநாட்டுக்கு எழுந்தருளினார் அந்த வைணவ மாமுனி!.

-posted on 21st June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: