Srirangapankajam

June 20, 2008

PESUM ARANGAN-53

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:47 pm

ஆளவந்தாரின் சீடர்களில் பெரியதிருமலைநம்பிக்கு இரண்டு சகோதரிகள். மூத்த சகோதரி ஸ்ரீபூமிபிராட்டியார் என்பவரை ஸ்ரீபெரும்புதூரைச் சார்ந்த ஆஸூரி கேசவப்பெருமாள் என்கிற ஸர்வக்ரது தீக்ஷிதர் என்பவருக்கு மணமுடித்தும் இளையவள் ஸ்ரீபெரியபிராட்டியாரை கமலநயனபட்டர் என்பவருக்கும் மணமுடித்தார்.

இருள்தருமாஞாலத்திலே கலியும் கெடும் கண்டுகொள்மின் என்கின்றபடியே கலியிருள் நீங்கி பேரொளி பெருகும் வண்ணம், ஆதசேஷனின் அம்சமாக ஒரு தெய்வீகக் குழந்தை கலியுகம் 4119 பிங்கள சித்திரை 12ம் நாள் வளர்பிறை பஞ்சமி வியாழக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தன்று (04.04.1017) ஆஸூரி கேசவப்பெருமாளுக்கு தேசமெல்லாம் உகந்திடவே ஒரு திருமகன் அவதரித்தார். பெரிய திருமலை நம்பிகள் குழந்தையை உச்சி முகர்ந்து குளிர கடாக்ஷிக்கின்றார். காந்தியுடன் கூடிய அந்த தேஜோமயத்தினைப் பார்க்கின்றார்.

‘உலகெல்லாம் துதிக்கும் கருணைக்கடலோ!
ஓங்கும் ஆனந்த மாக்கடலோ !
அலகிலா இன்ப அமுதமாக் கடலோ? ஆசறு
கமையருள் கடலோ?
மலமிலா நிலைசேர் போதவான் கடலோ? என்றென்று
மதலையைக் கண்டார்
பலபல பகரப் பாலனாய் கிடந்தான் பங்கயக்
கண்ணனுக்கு இளையான்”
-வடிவழகிய நம்பிதாஸர் ஸ்ரீராமானுஜ வைபவம் – 272-

இவன் ஸர்வலக்ஷணஸம்பந்நன் – சகலவித சாஸ்திரங்களையும் அதிகரிப்பவன். லக்ஷ்மணோ லக்ஷ்மிஸம்பந்ந: என்கின்றபடி இவருக்கு ‘இளையாழ்வான்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

பெரியதிருமலைநம்பியின் இளைய சகோதரி பெரியபிராட்டியாருக்கும் கமலநயனபட்டருக்கும் குரோதன வருஷம் தைமாஸம் பெளர்ணமி திங்கட்கிழமை புனர்வசு நட்சத்திரத்தில் ஒரு குழந்தை மலர்ந்த தாமரை போன்ற அழகுடன், தேஜஸூடன் பிறந்தான். அக்குழந்தைக்கு ‘கோவிந்தன்’ என்று திருநாமமிட்டு மகிழ்ந்தார்.

பாலகர்கள் இருவரும் க்ரமமாக வேத அத்யனனமும் வேதாந்த இதிகாச புராணங்களையும் கற்று வளர்கின்றனர். இளையாழ்வாருக்கும் தஞ்சமாம்பாள் என்கின்ற வரனுக்கும் திருமணமாகின்றது. காஞ்சியயடுத்த திருப்புட்குழி என்ற ஊரில் யாதவபிரகாஸர் என்பவரிடத்து மேலும் கற்க அவரிடத்து சிஷ்யராகின்றார் இளையாழ்வார். அண்ணன் அங்கு சேர்ந்ததையறிந்து தானும் அங்கேயே சேருகின்றார் கோவிந்தனும். இருவரும் வேதாந்தம் பயிலுகின்றனர். அவரது குருவோ அத்வைதக் கருத்துக்களையே வலுக்கட்டயாமாக சிஷ்யர்களிடத்தில் திணிக்கின்றார். இதனால் அவ்வப்போது இளையாழ்வானுக்கும் யாதவப்பிரகாசருக்கும் கருத்து வேறுபாடு உண்டாகிறது.
இளையாழ்வாரது கருத்திற்கு மாறுபட்டு விபரீத அர்த்தம் பண்ணமுடியாது அவ்வப்போது தவிக்கின்றார் யாதவபிரகாசர். சிஷ்யனைக் கொல்ல நினைக்கின்றார். இவர்களிருவரையும் கூட்டிக்கொண்டு கங்கையாத்திரைச் செல்கின்றார். போகும்வழியிலேயே இவர்களது சதி திட்டம் அறிந்த கோவிந்தன் அண்ணனை ஒரு சந்தர்ப்பத்தில் தப்பிப் போக உதவுகின்றார். இளையாழ்வார் தப்பித்து வருகின்றார். அடர்ந்த கானகத்தில் திக்குத் தெரியாத காட்டில், பசி உடலை வருத்த, திக்குத் தெரியாது நிற்கின்றார். ஸர்வேஸ்ரன்
மஹாலக்ஷ்மியோடு ஒரு வேடுவதம்பதிகளாக இவர் முன் தோன்றி இவர்தம் பசியாற்றி, தம்மோடு அழைத்துச் செல்கின்றார். இளையாழ்வார் காட்டில் ஓரிடத்தில் கண்ணயருகின்றார். விடிந்தபோது காஞ்சிபுரத்தினருகே சாலைக்கிணறு என்ற கிணற்றடி கீழ் கிடக்கின்றார். விந்தியமலை எங்கே? சாலைக்கிணறு எங்கே? அவன் அருள் இருந்தால் எதுதான் இயலாது? உணர்ச்சி ததும்ப, பெருங்கருணை புரிந்த பேரருளான் தாள் பணிந்தர், இளையாழ்வார். தீர்த்த கைங்கர்யம் செய்யலானார் வரதனுக்கு தினந்தோறும் சாலைக்கிணறு நீர் முகர்ந்து!

இவரது வேதாந்த ஞானத்தினையும் நடந்தவற்றையும் காஞ்சியிலிருந்து ஸ்ரீரஙகம் வந்த ஒரு பக்தர் கூறக்கேட்ட ஆளவந்தார் பெருமகிழ்வு கொண்டார்.

அஸந்த ஏவாத்ரஹி ஸம்பவந்தி
ஹஸந்திகாயாமிவ ஹவ்யாவாஹ:
அத்ரைவ ஸந்தோ யதி ஸம்பவந்தி
தத்ரைவ லாபஸ் ஸரஸீருஹாணாம்

நெருப்புச்சட்டியில் நெருப்பு போல இவ்வுலகில் துஷ்டர்களே உள்ளனர். இதிலேயே நல்லோர்களாகச் சிலர் காணப்படுவார்களாகில், அந்த நெருப்புச்சட்டியிலேயே தாமரைகள் பூத்தது போலாகும்.

(அக்காலத்திலேயே இம்மாதிரி நிலைமையிருக்குமாயின் இன்றைய நிலைமையைப் பற்றி என்னவென்பது?).

இந்த உலகிலே இப்படியும் ஒரு மஹானுண்டோ என்று அதிசயித்தார். அவரை காணவேண்டும் என்று பிரயாசைப் பட்டார். காஞ்சி நோக்கி பிரயாணித்தார்.

-posted on 20th June’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: