Srirangapankajam

June 19, 2008

PESUM ARANGAN-52

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:48 pm

ஸூலபம் ஸ்வகுரும் த்யக்த்வா துர்லபம் ய உபாஸதே
லப்தம் த்யக்த்வா தனம்மூடோ குப்தமந்வேஷ திக்ஷிதௌ

மிக எளியவனான தன் ஆச்சார்யனை விட்டு எவன் அரியவனான பகவானை வணங்குகின்றானோ அந்த மூடன் கைக்கு வந்த பொருளை விட்டு பூமிக்குள் புதைக்கப்பட்டிருக்கின்ற அதே பொருளைத் தேடுகிறவன் போன்றவன் ஆவான்.

இதையே பிள்ளைலோகாச்சாரியாரும் தமது ஸ்ரீவசன பூஷணத்தில்

‘கைப்பட்ட பொருளைக் கைவிட்டுப் புதைத்த பொருளை கணிசிக்கக் கடவன் அல்லன்’

எளிதிற் கிடைக்கின்ற ஆச்சார்யனை விட்டு அரிதிற் கிடைக்கின்ற பகவானை இச்சிக்க கடவன் அல்லன்’

என்கிறார்.

நம் பூர்வாச்சார்யர்கள் அனைவருமே இதனை நன்கு உணர்ந்திருந்தனர்.

”ஆச்சார்யனுக்கு சிஷ்யன் பக்கல் கிருபையும்
ஸ்வாசார்யன் பக்கல் பாரதந்திரியமும் வேணும்’
-ஸ்ரீவசனபூஷணம்-

ஆச்சார்யனுக்கு இரண்டு குணங்கள் ஒருதலையாக வேண்டும். தன்னை வந்தடைந்த சிஷ்யனிடத்தில் ‘ஐயோ!” என்று இரங்கி அவன் உஜ்ஜீவிப்பதற்கு பேரருள் கொண்டு உபதேசம் செய்யவேணும். தான்தான் உபதேசிக்கின்றோம் தாமே தலைவன் என்று எண்ணாமல், செருக்கடையாமல் தன் ஆச்சார்யனுடைய கிருபையே காரணம் என்று ஆச்சார்யனிடத்தில் ஆழ்ந்தபக்தி கொள்ளல் வேண்டும்.

ஆளவந்தாரும் அவரது சீடர்களும், எம்பெருமானரும் அவரது சீடர்களும் இப்படித்தான் இருந்தார்கள்.

ஆச்சார்யனிடத்தில் அபரிமிதமான மரியாதையும் ஆச்சார்யனுக்கு ஏதேனும் துன்பமென்றால் தாங்கள் துடித்தும் போனார்கள். அவர்கள் இட்ட பணியை தம் சிரமேற் கொண்டார்கள்.

இவர்களில் பெரியநம்பி ஆளவந்தாருக்கு அடுத்து அமையும் பேறு பெற்றவர். முன்னமேயே கூறியது போல் ஞானத்திலும் சீலத்தினாலும், தம் தியாகத்தினாலும் உயர்ந்த உத்தமர்.

திருக்கோட்டியூர் நம்பி: அந்தணர். திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம் ஆகிய ரஹஸ்யங்களின் ஆழ்பொருளை நன்கறிந்தவர். தகுதியில்லாத யாருக்கும் வெளியிடலாகாது என்று பரம ரகஸ்யமாக வைத்திருந்தவர். ஆளவந்தாரிடமிருந்து இராமனுஜரின் ‘பவிஷ்யதாச்சார்ய’ விக்ரஹத்தினைப் பெற்றவர். இராமனுஜரை திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு 18 முறை திருமந்த்ர உபதேசத்திற்காக நடக்கச் செய்தவர் இவரே. இராமனுஜரின் பரந்த மனம் கண்டு ‘எம்பெருமான்’ என்றழைத்தவரும் இவரே.

திருமலையாண்டான்: அந்தணர். திருமாலிருஞ்சோலையில் அழகருக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தவா;. ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளே சீடனாக வந்து இவருக்கு கைங்கர்யம் செய்யுமளவிற்கு பெருமாளால் நேசிக்கப்பெற்ற மஹாத்மா இவர்.

பெரியதிருமலை நம்பி: திருவேங்கடமுடையானுக்கு மிகவும் அபிமானவர். தினந்தோறும் திருமலையில் திருவாராதனத்திற்கு பாபவிநாச தீர்த்தம் கொணர்ந்து தீர்த்த கைங்கர்யம் செய்தவர். ஸ்ரீவேங்கடவனால் ‘அப்பா’ என்று அழைக்கப்பெற்றவர். எம்பெருமானார்க்கு இளையாழ்வார் என்று பெயரிட்டவர் இவரே!.

திருவரங்கப் பெருமாள் அரையர்: ஆளவந்தாரின் பூர்வாஸ்ரம (ஸன்னியாசம் பெறுவதற்கு முன்) திருக்குமாரர். அரையர் ஸேவையில் வல்லவர். இவர்தான் காஞ்சி வரதரை தமது ஆடல் பாடல்களினால் இன்புறச் செய்து இராமனுஜரை அரங்கனுக்காக வரதனிடமிருந்து யாசித்துப் பெற்றவர். தம் தம்பிகள் தெய்வத்துக்கரசுநம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டைநம்பி ஆகியோரை இராமனுஜருக்கு சீடராக்கி மகிழ்ந்தவர்.

மாறநேர் நம்பி: இந்த உத்தமரை பற்றி நாம் முன்னரேக் கண்டோம்.

இவ்வளவு மிகச் சிறந்த சிஷ்யர்களைப் பெற்றிருந்தாலும், இராமனுஜரின் பவிஷ்யதாச்சார்ய விக்ரஹத்தினையடைந்த ஆளவந்தார் இந்த ஸ்ரீரங்கஸ்ரீயை பொறுப்பேற்று வைணவத்தினை ஓங்கச் செய்யும் மாபெரும் தலைவராக இராமனுஜரையே திருவுள்ளத்தில் கொண்டு அவரின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

-posted on 18th June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: