Srirangapankajam

June 17, 2008

PESUM ARANGAN-51

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 2:46 pm

ஆட்சியை துறந்த ஆளவந்தார் வைணவர்களின் உள்ளத்தை ஆட்கொண்டார். அரங்கன் அவரை ஆட்கொண்டான். அஷ்டாங்க யோக ரகஸ்யத்தை குருகைக் காவலப்பனிடமிருந்து கற்க ஆளவந்தார் முயற்சித்தும் அது முடியாமற் போயிற்று. நாதமுனிகளிடமிருந்து கற்பிக்கப்பட்ட இந்த அஷ்டாங்க யோகரகசியமும் குருகைக் காவலப்பரோடு மறைந்து விட்டது.

ஆளவந்தாருக்கு இருபது சீடர்கள். அவர்களில் பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலையாண்டான், பெரிய திருமலை நம்பி, திருவரங்க பெருமாளரையர், மாறநேர் நம்பி ஆகியோர் மிகவும் ஆளவந்தாரோடு அந்தரங்கமானவர்கள். இவர்களில் அநேகர் பிராமணர்கள் – மாறநேர்நம்பி தாழ்ந்த குலத்தில் பிறந்த உயர்ந்தவர். ஆளவந்தாரின் உள்ளங்கவர்ந்த சீடர்களில் ஒருவர். திருக்கச்சிநம்பிகள் வைசியர். இவர் ஆளவந்தரின் நேரடி சீடர் அல்லாவிடினும் இவர்பால் ஆழ்ந்த பக்திக் கொண்டவர். பெரியநம்பி எல்லாராலும் விரும்பப்பட்ட சீலமிகு ஞானமிகு நம்பியாவார்.

மாறநேர் நம்பி ஒரு முறை மிகவும் பசித்த போது வாய்க்கால் நீரை சேற்றுடன் அள்ளி குடித்தாராம். அதைக் கண்டு வியந்து வினவிய ஆளவந்தாரிடம் ‘கஞ்சிக்குக் காத்திருந்தேன் வரவில்லை. எனவே இந்த மண்சுவருக்கு(உடம்பிற்கு) மண்ணிட்டேன்” என்றராம். உலகப்பற்று அறுத்த உத்தமர். தம் உணர்வில், நம்மாழ்வாரை ஒத்திருந்ததால் ‘மாறன்நேர் நம்பி” (மாறனுக்கு இணையான நம்பி) என்ற திருநாமம் பெற்றவர்.

கீழச்சித்திரை வீதியில் (தற்போது சித்திரைத்தேர் நிற்குமிடத்திற்கருகில்) ஆளவந்தார் திருமாளிகையமைத்து ஒரு பிரவசனக்கூடமும் (உபதேசிக்கும் மண்டபம்) அமைத்தார். மறுநாள் அதற்கு புண்யாஹம் எனும் ஒரு சுத்தப்படுத்தும் வைதீக கார்யம் நடத்த உத்தேசித்திருந்தார் ஆளவந்தார். நள்ளிரவில் ஒரு கரிய உருவம் வீட்டினுள் புகுந்து அங்குமிங்கும் அலைந்து எல்லாவற்றையும் நன்கு பார்த்து விட்டு வெளியேறியது. ஆளவந்தார் இதனைப் பார்த்து விட்டார். யாரென அறிய முற்படுகையில் அது மாறநேர்நம்பியெனவும், தாம் தாழ்ந்தகுலம் என்பதால் அடுத்த நாள் காலை புண்யாஹம் நடந்துவிட்டால் பார்க்கவியலாதாகையினால் இரவே வந்து பார்த்துவிட்டு சென்றதாயும் தெரிவித்தனர். ஆளவந்தார் கண்ணீர் சிந்தி மாறநேர் நம்பி திருவடிகள் பட்டதே போதும் – இந்த இடம் மிக மிக புனிதமாகிவிட்டது. இனி புனிதபடுத்துவதற்காக புண்யாஹம் தேவையில்லை என்று மறுநாள் காலை நடக்கவிருந்த நிகழ்ச்சியினை ரத்து செய்து விட்டார்.

ஆளவந்தாருக்கு ராஜபிளவை நோய் தாக்கியது. தம் ஆச்சார்யனுக்கு ஏற்பட்ட இப்பெரும் தீங்கைக் கண்டு துடித்தார் மாறநேர்நம்பி. அரங்கனிடம் வெகுவாக மன்றாடினார். இறுதியில் வென்றார். அவரது நோயை தாம் பெற்றார் அரங்கனிடம் பிரார்த்தித்து. தமக்கு இந்த ‘ராஜபிளவை’ நோய் வந்தபோது அதனை ‘ஆச்சார்ய பிரஸாதம்’ என்றெண்ணி பெருமிதம் கொண்டார். ஆளவந்தார் மாறநேர்நம்பியிடம் என் பிறவிதனை போக்கவந்த கொடுநோயை நீ எடுத்துக் கொண்டாயே!’ என்று வருத்தப்பட்டாராம். மகாஞானியானவரும் மகாபூரணருமான பெரியநம்பிகளால் நீராட்டி, புண்ணுக்கு மருந்திட்டு, உணவு உட்டப்பட்டு அன்போடு ஆதரிக்கப்பட்டவர் மாறநேர்நம்பிகள்.

மாறநேர்நம்பி என்ற சான்றோன் மடிந்தார். பெரியநம்பிகள் ஸம்ஸ்காரங்களனைத்தும் மாறநேர்நம்பிகளுக்கு செய்தார். மாறநேர்நம்பிகள் என்ற தாழ்ந்தகுலத்தவற்கு ஸம்ஸ்காரம் செய்து வைத்தபடியால் இவரை சக அந்தணர்கள் ஒதுக்கினர் தம் சமுதாயத்தினை விட்டு. இது குறித்து இராமனுஜர் வினவுகின்றார். பெரியநம்பிகள் ‘ஜடாயுவையும், விதுரரையும் விட தாழ்ந்தவரில்லை எங்கள் மாறநேர்நம்பி” என்றுரைக்கின்றார். யாரும் பதிலேதும் கூற முடியவில்லை.

சித்திரைத்தேர் ஆளவந்தார் திருமாளிகைத் தாண்டி நகரவேயில்லை. பெரியநம்பியை ஜாதிபிரஷ்டம் செய்த அந்தணர்கள் பெரியநம்பியின் செயல்கள் சரியே என்று ஓப்புக்கொண்டு, அவரிடத்து மன்னிப்புக் கேட்டபின், பெரியநம்பிகள் தேர்தட்டிலுள்ள அரங்கனைத் தரிசித்தப் பின்னரே தேர் நகர்ந்ததாகச் சொல்லுவர்.

இன்று ஆளவந்தார் போன்றோ இராமானுஜர் போன்றோ ஸ்வாமி தேசிகர் போன்றோ மணவாள மாமுனிகள் போன்றோ வைணவத்தை முழுமையாக நடத்திச் செல்ல, நம்மை வழிநடத்த ஒரு தலைவர் இல்லாதது நாம் செய்த பெரும் துர்பாக்கியமாகும். ஆளவந்தார் அனைத்தையும் துறந்து ஆண்டார். ஆனால் இன்று அனைத்தையும் துறந்ததாகச் சொல்லப்படும் பெரும்பாலானோர் பணம் சோ்ப்பதிலும், தனவந்தர்களை தம் சீடர்களாக சோ்ப்பதற்கும் பெரும் பிரயத்தனம் படுகின்றனரேத் தவிர வைணவம் வளர்ப்பதற்கோ, வைணவர்களிடையே ஒற்றுமையை உண்டாக்குவதற்கோ முயற்சிகள் ஏதும் எடுப்பதில்லை. அதில் அக்கறையும் இல்லை. கோவில்களை எடுத்துக் கொண்டால் இரு கலையாரும் ஒற்றுமை தவிர்த்து இரு துருவமாயிருக்கின்றனர். இருவர்களும் அவ்வப்போது அடித்துக் கொள்ள தயங்குவதில்லை. ஏன் அவரவர்களுக்குள்ளேயும் கூட ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து சீரழிகின்றார்கள்.
என்று இந்த அவல நிலை மாறுமோ? என்று வைணவம் ஆலமரம் போன்று தழைக்குமோ?

-posted on 17th June’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: