Srirangapankajam

June 16, 2008

PESUM ARANGAN-50

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 2:53 pm

ஒரு ஸ்ரீவைஷ்ணவனுக்கு வாரிசு பிறந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஜாதகர்மண்யலாபேது விஷ்ணோஸ்சக்ரஸ்ய தாரணம்
சௌளோபநயநே சாபி தந்மந்த்ராத்யயநேபிவா
விதிநா வைஷ்ணவஞ்சக்ரம் தாரயித்வா த்விஜோத்தம:

ஜாதகர்மம் செய்யாதிருக்கையிலேயே விஷ்ணுவினுடைய சக்கரத்தை (ஆபரணமாக) தரிக்கச் செய்ய வேண்டும். சௌளம் உபநயனம் ஆனவுடன் வேதமந்திரத்தை ஓதுவிக்க வேண்டும். விஷ்ணுவின் (சங்கு) சக்ரத்தினை தோள்களில் தரிக்க வேண்டும்.

வைஷ்ணவைஸ்சைவ சூக்தைஸ்ச்ச குர்யாத் ஸம்மார்ஜனம் ஸிசோ:
தஸ்ய தக்ஷிணகர்ணே து ஜபேத் அஷ்டாக்ஷரம் த்வயம்
மூர்த்தி ஹஸ்தம் விநிக்ஷிப்ய ஜபேச்ச த்வாதசாக்ஷரம்
நாம குர்யாத் தத: பஸ்ச்சாத் வைஷ்ணவம் பாபநாசனம்

(குழந்தை பிறந்தவுடன்) விஷ்ணு ஸம்பந்தமான சூக்தங்களாலே குழந்தையைத் துடைக்க வேண்டும்.
அக்குழந்தையின் காதில் அஷ்டாக்ஷரம், த்வய மந்திரங்களை ஜபிக்க வேண்டும். தலையில் கையினை வைத்து திரு த்வாதசாக்ஷரத்தினையும் ஜபிக்க வேண்டும். பின்னர் குழந்தையின் பாபத்தினை போக்கக் கூடிய, விஷ்ணு சம்பந்தமான பெயரைக் குழந்தைக்கு இட வேண்டும்.

இவையனைத்து நாதமுனிகளின் புதல்வரான ஈஸ்வரமுனிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்த போது மணக்கால் நம்பி முன்னின்று செய்தார்.
12ம் நாள் ஸ்ரீமந்நாதமுனிகள் ஏற்கனவே அனுக்ரஹித்தவாறு ‘யமுனைத்துறைவர்” என்னும் திருநாமத்தையும் சாற்றி மகிழ்ந்தார்.

ஒரு உத்தம ஸ்ரீவைஷ்ணவனால் பிறக்கின்றபோதே ஆசீர்வதிக்கப் பெற்ற யமுனைத்துறைவர் வேதத்தையும், பிரபந்தங்களையும் பதக்ரம ஸஹிதமாக அத்யயனம் பண்ணினார். கல்யாணமும் இனிதே நடந்தேறியது. ஈஸ்வரமுனிகள் சில காலம் வாழ்ந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

யமுனைத்துறைவன் மஹாபாஷ்யபட்டர் என்பவரிடம் சாஸ்திரங்கள் கற்று வந்த சமயம், தன்னை தர்க்கத்தில் யாராலுமே வெல்லமுடியாது என்ற இறுமாப்புடனிருந்த ஆக்கியாழ்வான் என்பவர் இவரை வாதத்திற்கு அழைத்தான். மஹாபாஷ்யபட்டர் மிகவே கவலைக்குள்ளானார். அவரது நிலை கண்ட யமுனைத் துறைவர்

ந வயம் கவயஸ்து கேவலம் ந வயம் கேவலதந்த்ரபாரகா:
அபி து ப்ரதி வாதி வாரண ப்ரகடாடோப விபாடநக்ஷ்மா:

யாம் கவிகள் மாத்திரமில்லை. யாம் மீமாம்ஸா சாஸ்திரக் கடலை மாத்திரம் கரைக் கண்டவர்களல்லோம். ஆனால் எதிர்வாதம் புரியுமவர்களாகிற யானைகளின் மிக்க ஆடம்பரமாகிற மத்தகத்தைப் பிளக்க வல்லமைமுடையோம்

என்று ஒரு ஒலையில் எழுதி ஆக்கியாழ்வான் அதனை கண்ணுறும் படிச் செய்தார். இராஜா இவரது ஞானம் புரிந்து பல்லக்கு அனுப்பி ராஜசபைக்கு வரச்செய்தார்.
என்னை நீ வெல்லமுடியாது என சூசகமாக பொருள்படும் படி ஒரு சுலோகத்தினை அமைக்க ஆக்கியாழ்வான் வெகுண்டான். இவருடன்தான் நான் தர்க்கிப்பேன் என ஆர்ப்பரித்தான். ராஜகுமாரி யமுனைத்துறைவரின்
தேஜஸ்சைக் கண்டு இவர் வெல்லுவார் எனக்கூற ‘அரசன் வெல்லுவாராகில் இந்த ராஜ்யத்தில் பாதித் தருவேன்’ என உரைத்தான். யமுனைத்துறைவருக்கோ அப்போது 12 வயதுதான் ஆகியிருந்தது. ஆக்கியாழ்வான் முதலில் எளிமையாக கேட்க ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல கடுமையான கேள்விகள் பல சாஸ்திரங்களிலிருந்தும் கேட்க, அனைத்திற்கும் தக்க பதிலளித்து அவரை திணற டித்துக் கொண்டிருந்தார் யமுனைத்துறைவர். கடைசியில் ஆக்கியாழ்வான் ‘உலகியலில் உண்டு என்பதை இல்லையென்றும் இல்லையென்பதை உண்டு என்றும் நாமிருவரும் நமது திறமையால் ஸாதிக்கவேண்டும்” என்று கூறினான். யமுனைத்துறைவர் முதலில் கேள்விகேட்க ஆரம்பித்தார்.

1. உம்முடைய தாய் மலடி அல்லள்
2. இந்த அரசன் ஸார்வபௌமன்
3. இந்த அரசி பதிவிரதை.

ஆக்கியாழ்வான் இவையனைத்துமே இல்லையென்று
ஸாதிக்க வேண்டும். முடியுமா? வேர்த்து விறுவிறுத்தான். வாயடைத்து ஏதும் மறுப்புத் தெரிவிக்க இயலாது தவித்தான். அவனது ஆணவம் அழிந்தது. அரசன் ஆளவந்தாரைப் பார்த்து உம்மால் இதனை மறுக்க முடியுமா? என வினவினார். இயலும் என்றுரைத்து ஆளவந்தார் பேசலானார்.

”காக வந்த்யா கதலி வந்த்யா” என்றபடி ஒரு முட்டையிடும் காக்கையும் ஒரு குலையிடுவதால் வாழையும் மலடுகள் என்பது சாஸ்திரக்கூற்று. ‘ஏக புத்ரோஹ்ய லோக வாதாத்’ என்றபடி ஒரு பிள்ளையை மட்டும் பெற்ற தாய் அந்த பிள்ளை நமக்கு தங்க வேண்டுமே என்று எப்போதும் கலங்கிக்கொண்டிருப்பாளாதலால் அவள் பிள்ளைப் பெற்றும் மலடிதான். ஆக்கியாழ்வான் அவரது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. ஆகவே அவள் தாய் மலடியே’ என வாதிட்டார்.

2. ஸார்வபௌமன் என்றால் உலகனைத்தும் ஆள்பவன் என்று பொருள். தாங்கள் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிதான் ஆள்கின்றீர்கள். ஆகவே தாங்கள் ஸார்வபௌமன் அல்ல என்றார். மேலும் மக்கள் செய்யும் குற்றங்கள் ராஜாவினையும் பாதிக்கும் என்பதினால் ஸார்வபெளமன் ஆக முடியாது என்றார்.

3. ஒரு கன்னிகை திருமணச் சடங்குகளின் போது மந்திரப்பூர்வமாக சந்திரன், அக்னி போன்ற தேவர்களுக்கு ஆட்படுத்தப்பட்ட பின்னரே ஒரு வரனை அடைகிறார்கள். வைதீக முறைப்படி எந்தப் பெண்ணும் சாஸ்தீரீதியாக பதிவிரதையல்ல என்றார்.

சபையாரும், அரசனும், ஆக்கியாழ்வானும் அமோதித்தனர். ஆர்ப்பரித்தர் சபையோர் மகிழ்ச்சியினால். மகிழ்வோடு ஓடிவந்த அரசகுமாரி இந்த இளம்பாலகனை அன்போடு தழுவி ‘என்னை ஆளவந்தீரே!’ என உச்சிமுகர்ந்திட அன்று முதல் இவர் ஆளவந்தார் ஆனார். பாதிராஜ்யத்தினை அரசன் கூறியபடி பகிர்ந்தளிக்க அதனையும் ஆண்டார். இந்த அரசபோகம் இவருக்கு அரங்கனை முற்றுமாக மறக்கச் செய்தது. மணக்கால் நம்பியை அவரிடத்து நெருங்கவிடாமல் செய்தது.

ஆளவந்தாருக்கு தூதுவளை கீரையுண்பதில் அதீதப்ப்ரீயம். நம்பிகள் தினமும் தூதுவளையைப் பறித்து பக்குவபடுத்தி அரசனின் சமையல்காரரிடம் கொடுத்து வந்தார். சிலகாலம் கழித்து இக்கீரைத் தருவதை நிறுத்தினார். தினமும் இதனை உண்டு பழகிய அரசன் விசாரித்தான். கீரை தருபவரை தன் முன்னே வரச்செய்தான். நம்பிகளிடத்து அவர் செய்த இந்த பணிக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்றார். மணக்கால் நம்பி நான் வாங்குவதற்கு வரவில்லை. உம்மிடம் உங்கள் பாட்டனார் சேர்ப்பிக்கச் சொன்ன ஒரு நிதியைக் கொடுப்பதற்கே வந்துள்ளேன் என்றார். அரசன் அது என்னவென்று வினவ அது அசையா சொத்து. அடியேனோடு வந்தால் அதனை ஒப்படைப்பேன் என்றார். அரங்கன் ஆளவந்தாரோடு ஆடுவதற்குத் தயாராகிவிட்டான். மணக்கால் நம்பி அரசவைக்கு தடையின்றி வந்து போக ஆணையிட்டான் அரசன். நம்பிகள் தினமும் வந்து ஆளவந்தாருக்கு கீதையின் உட்பொருளையும், மெய்மைப் பெருவார்த்தையான சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தையும், வேதாந்த ரகசியங்களையும் உபதேசித்தருளினார். நெல் விதைகள் முதிர முதிர நெற்செடி தலைவணங்குமாப் போல சரணாகதி அடையவேண்டும் என்ற அவா பிறந்தது அரசனுக்கு.

ந ச ஞானஸ்ய ஸங்கோச: ந சைவ யமகோசர:
தஸ்மாத் ரங்கம் மஹாபுண்யம் கோ ந ஸேவேத புத்திமாந்!
(ஸ்ரீரங்கத்தில் வாழ்கிறவர்களுக்கு) ஞானத்தில் சுருக்கம் கிடையாது. யமனுக்கு வசப்படுகையும் கிடையாது ஆகையால் மஹாபுண்யமான ஸ்ரீரங்கத்தை அறிவாளியான எவன்தான் அடையமாட்டான்?)

நம்பிகளோடு ஸ்ரீரங்கம் வந்தடைந்தான் அரசன். அழிவற்ற செல்வமாகிய அரங்கனை ஸேவைப் பண்ணி வைக்கின்றார் மணக்கால் நம்பிகள். ‘உங்கள் பூர்வர்கள் தேடி வைத்த மஹாநிதி இதுகாணும்” என்றார்.
அரங்கனுக்கோ தன் நிதி தன்னை வந்தடைந்ததில் நிம்மதி!. வந்தவரை அங்கிங்கு அசையாதபடி கட்டிப் போடுகின்றான்!

‘பழுதே பலபகலும் போயினவென்றஞ்சி அழுதேன்
அரவணை மேற்கண்டு தொழுதேன்”

என்கிறபடியே கண்ணுங் கண்ணீருமாய் அரங்கத்தம்மானை அநுபவிக்கின்றார் ஆளவந்தார். ஆளவந்தார் தாம் பெற்ற அனைத்தையும் துறந்தார். சன்னியாசம் பெற்றார். பட்டை தீட்டப்பட்ட வைரம் போன்று, இந்த வைணவவைரம் ஜொலித்தது. மணக்கால் நம்பி நம்மாழ்வாரிடமிருந்து பெறப்பெற்ற இராமனுஜரின் பவிஷ்யதார்ச்சார்யன் விக்ரஹத்தினையும் இவரிடத்தே ஈந்தார்.

-posted on 16th June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: