Srirangapankajam

June 15, 2008

PESUM ARANGAN-49

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:52 am

நாதமுனிகளையடுத்து உய்யக்கொண்டார் அவர் இட்ட பணியை தம் சிரம் மேற்கொண்டார். மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர், செட்டலூர் செண்டலங்காரர், ஸ்ரீ புண்டரீகதாஸர், உலகுப்பெருமாள் நங்கை என்கின்ற ஐந்து பேர்கள் இவரை ஆஸ்ரயித்து கற்றுவந்தனர். இந்த ஐந்து பேர்களிலும் மணக்கால் நம்பிகள் தம் ஆச்சார்யனுக்குச் செய்த கைங்கர்யம் மகத்தானது. உய்யக்கொண்டாரின் பத்னி ஆண்டாள் சிறு வயதிலேயே திருநாட்டுக்கு எழுந்தருள, திருமாளிகை பராமரிப்பையும், உய்யக்கொண்டாரின் வாரிசுகளையும் தன் இமைபோல் பாதுகாத்தார். ஒருநாள் உய்யக்கொண்டாரின் சிறு பெண்பிள்ளைகள் இருவரையும் நீராட்டி அழைத்துவருகையில் ஒரு சிறுவாய்க்கால் சேறாகயிருந்ததாம். இவர் வாய்க்காலின் குறுக்கே படுத்து, தம் ஆச்சார்யரின் பெண்கள் கால்கள் சேறாகாதவண்ணம், தம் முதுகின் மீது அவர்களை நடக்கச் செய்து சேற்றினைக் கடக்க வைத்தார். உய்யக்கொண்டார் இதனையறிந்து, தம் சிஷ்யரின் குணம் புரிந்து, மனம் கசிந்தார். சிஷ்யன் கடைத்தேற அதீதமான பரிவுடனே, மீண்டும் த்வயத்தின் அர்த்த விசேஷத்தினை ப்ரஸாதித்து அருளினாராம்.

குரு பரம்பரையை உற்று நோக்கின் ஒரு விஷயம் நமக்கு நன்கு புலனாகும். ஆச்சார்யர்கள் அதிக சந்தோஷமடைந்தாலும், அதிக கவலையடைந்தாலும் அவர்கள் த்வயத்தினையே அதிகம் பிரயோகத்திருக்கின்றனர்.

இரண்டாம் குலோத்துங்க மன்னனது கொடுமையினால் ஸ்ரீரங்கத்தை விட்டு தம் அணுக்க சீடர்களுடன் வெளியேறிய ஸ்ரீராமானுஜர் த்வயத்தினையே உயிர் மூச்சாகக் கொண்டு காடு மலைகளையெல்லாம் கடந்து மேல்கோட்டை திருநாராயணபுரம் அடைந்தார்.

கூரத்தாழ்வானை ஸ்ரீரங்கத்தில் சந்தித்த பின்பு மேல்கோட்டையில் ராமானுஜரை சந்திக்கின்றர் அவரது சீடர் சிறியாண்டான். கிருமி கண்ட சோழன் இறந்த செய்தியை அறிவிக்கின்றார். இராமனுஜர் மகிழ்வுடன் அவரை அப்படியே கட்டித் தழுவி த்வயத்தினை அவருக்கு உபதேசிக்கின்றார்.

கூரத்தாழ்வாருக்கு த்வயம் சொல்லாமலிருந்தால் தொண்டை வறட்சியாகி விடுமாம். அவரது உயிர் பிரியும் சமயம், இராமனுஜர் த்வயம் சொல்லியபடியே அவரது தொண்டையினை வருடிக் கொடுத்தாராம்.

ஸ்ரீரங்கத்தில் சோழமன்னனால் வைணவர்களுக்கெல்லாம் பெரும் பீதி. பெரியநம்பியுடன் கலந்தோசிக்கின்றார் இராமனுஜர். த்வயத்தினை அனைவரும் அனுசந்திப்பது என்று தீர்மானமாயிற்று. த்வயத்தை அனுசந்தித்தவாறே பெரியநம்பியும் கூரத்தாழ்வானும் பிரகாரங்களை வலம் வந்தார்களாம்.

த்வய மந்திரம் என்பது அவ்வளவு ஏற்றமுடைய மந்திரமாகும்.

மாநஸம் வாசிகம் பாபம் காயிகம் தத்த்ரிதா க்ருதம்
த்வய ஸ்மரண மாத்ரேண நாஸம் யாதி ஸூநிஸ்தம்

பொருள்: மனம், வாக்கு, இந்திரியங்கள் மூன்றாலும் செய்யப்பட்ட மூவகைப்பட்ட பாபங்கள் த்வயத்தை நினைத்த மாத்திரத்தில் அழிகின்றன என்பது மிக உறுதி.

அனைத்தையும் தெளிவுற போதித்த உய்யக்கொண்டார் மணக்கால் நம்பியிடத்து அனைத்து பொறுப்பையும் அளித்து, பின்பு ‘நாதமுனிகளின் குமாரர் ஈஸ்வரமுனிக்கு ஒரு பேரன் அவதரிப்பார். அவரிடத்து எப்பாடுபட்டேனும் நாம் அறிந்ததையனைத்தும் புகட்டும். எனக்கு இந்த பாக்யமில்லாது போயிற்று” என்று கூறி அவர்தம் குரு நாதமுனிகளை தியானித்தபடியே ஆச்சார்யன் திருவடியடைந்தார். மணக்கால் நம்பி உய்யக்கொண்டாருக்கு ஆகவேண்டிய சம்ஸ்காரங்களனைத்தும் குறைவறச் செய்தார்.

-posted on 15th June’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: