Srirangapankajam

June 15, 2008

PESUM ARANGAN-48

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 6:12 am

சீலம்கொள் நாதமுனிகள் ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்தவராய் சொல்லுவர்.      ஆழ்வார்களின் அருளிச்செயலுக்கும்,  அரையர் இசைக்கும் வித்திட்ட இவரது காலத்தில்தான்,  இவரது தலைமையில்தான் கம்பர் ஸ்ரீரங்கத்தில் இராமாயணத்தை அரங்கேற்றினார் என்பர்.

இராமாயணத்தை அரங்கேற்றுவதற்குள் கம்பர் படாதபாடு பட்டுதான் அரங்கேற்றினாராம். அரங்கேற்றுவதற்கு முன் அரங்கனை வந்து வணங்க, அரங்கன், ‘நம் சடகோபனைப் பாடினாயோ?’ என்றாராம். சடகோபர் அந்தாதி என்னும் அந்தாதி பாடி முடித்தபின்தான் அரங்கேற்ற முடிந்ததாம் இப்பெரும் கவிக்கு!

(பிரபந்நாம்ருதம் என்ற ஒரு நூலில், நூலாசிரியர், நம்மாழ்வாரின் பாசுரங்களைக் குறித்து தர்க்கித்த தமிழ் சங்கத் தலைவர் கம்பர்தான் என்கிறார் – கம்பரின் சீடர்களிடத்துதான் ‘கண்ணன் கழலிணை’ என்று எழுதிய ஓலைச் சிறுமுறியை மதுரகவியாழ்வார் கொடுத்தனுப்பியதாகவும் கூறுகின்றார். அப்படியானால் கம்பர்,  மதுரகவியாழ்வார், நாதமுனிகள் ஆகிய இருவரையும் சந்தித்திருக்கின்றாரா?)

நாதமுனிகள் ஒரு நாள் தனது வீட்டிற்கு வந்தபோது
வீட்டார்கள், ‘ நம் அகத்திலே ஒரு குரங்கும், இரண்டு வில்லிகளும், ஒரு பெண்ணும் வந்து நாதமுனிகள் எங்கே? ‘  என்று கேட்டுவிட்டு போனார்கள் என்றவுடனே நாதமுனிகள்

அக்ரத: ப்ரயயௌ ராமஸ் ஸீதா மத்யே ஸூமத்யமா
ப்ருஷ்டதஸ்து தநுஷ்பாணிர் லக்ஷ்மணோநுஜகாம ஹ

(அகாரார்த்தமான) பெருமாள் முதலில் சென்றார்.
(உகாரார்த்தமான) சிற்றிடையாள் ஸீதை நடுவில் சென்றார்.
(மகாரார்த்தமான) இளையபெருமாள் வில்லேந்தி சென்றார்
(இது பிரணவம் நடந்து சென்றது போலிருந்தது).

என்றபடியே வந்தது தம் பரிவாரத்தோடு இராமபிரானே என்று அறிந்தார்.    அவர் போன திசையை அங்காங்கு விசாரித்தப்படியே சென்றார்.     இப்படியே திருவரங்கத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரைச் சென்றார். அதற்கு மேல் அங்குள்ளோர் ‘கண்டிலோம்’ என மறுத்திட, அங்கேயே ஏங்கி அடித்துக்கொண்டு விழுந்து மோஹித்து அதுவே அவர் ஆத்மா வைகுந்தம் புக ஹேதுவாயிற்று. (இதனை எழுதும் போது நான் ஏற்கனவே இத்தொடரில் தெரிவித்த, அரங்கன் கனவில் உணர்த்திய துலுக்கநாச்சியார் வைபவம் நினைவிற்கு வருகின்றது). அவரது குமாரன் ஈஸ்வரமுனி திருக்கையாலே ப்ரஹ்மமேத ஸம்ஸ்காரவிதிகளை செய்தார். அவரது சீடர் குருகைக் காவலப்பன் நாதமுனிகள் எப்போதும் யோகத்திலே எழுந்தருளியிருக்குமிடத்துக்குயருகே யோகத்திலேயே எழுந்தருளி அவர் வாழ்நாளை கழித்தார். உய்யக்கொண்டார் தன் ஆச்சார்யனிடம் கற்றதை தாம் பரப்பலானார்.

ஆழ்வார்கள் பதின்மராலும் அரங்கன் பாடப்பெற்றாலும் அவர்களில் தொண்டரடிப்பொடியாழ்வார் தவிர மற்றவர்கள் இதர திவ்யதேசத்து எம்பெருமான்களையும் பாடிக்களித்தனர். ஆனால் ஆச்சார்யர்களைப் பொறுத்தவரை நாதமுனிகளின் 9ம் நூற்றாண்டு துடங்கி மணவாள மாமுனிகளின் 15ம் நூற்றாண்டு இறுதியாக இந்த பெரியோர்களனைவரும் ஏழு நூற்றாண்டுகள் ஒருவர் பின் ஒருவராக ஸ்ரீரங்கத்தில் நித்யவாசம் செய்துகொண்டு தீதில்லாத நன்னெறியாம் வைணவத்தை பரப்பி, ஆழ்வார்கள் ஏற்றி வைத்த தெய்வீக சுடரொளியை, தங்களது அருமையான வியாக்கியனாத்தினாலும், அனுஷ்டானத்தினாலும், பக்தியாலும் பேரொளியாக மாற்றி எண் திக்குகளிலும் பரவும்படி செய்தார்கள். திருவரங்கம் பெரிய கோவிலானாது வைணவ உலகிற்கே ஒரு நடுநிலைத் தீபமானது.       ஸ்ரீரங்கஸ்ரீ வளர வளர அனைத்து திவ்யதேசங்களும் பொலிவுற்றது.

மைத்துனன்மார் காதலியை மயிர்முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி
உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட உயிராளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுதிறைஞ்சத் திசைவிளக்காய் நிற்கின்ற திருவரங்கமே
                                                                         -பெரியாழ்வார்-
தனது அத்தையின் பிள்ளைகளான பாண்டவர்களின் மனைவியான திரௌபதியின் சபதத்தினை நிறைவேற்றச் செய்து, அவிழ்த்து விடப்பட்ட அவள் கூந்தலை முடியச் செய்து, பாண்டவர்களை அரசர்களாக்கி, உத்தரையின் (அபிமன்யுவின் மனைவி) மகன் பரிக்ஷித்தைத் தனது திருவடிகளால் தீண்டி உயிர் பிழைக்கச்செய்து, அனைத்து உயிர்களுக்கும் தலைவனாகயிருக்கும் பெரியபெருமாளின் இடமானது – அடியார்களும், சந்நியாசிகளும், வேதங்களைத் தங்கள் வாக்கில் உடைய முனிவர்களும், பரந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும், சித்தர்களும் விழுந்து வணங்கி ஸ்தோத்திரம் செய்யும் வண்ணம் அனைத்துத் திசைகளுக்கும் விளக்கு போல் உள்ள திருவரங்கம் ஆகும்.

திருவரங்கம் கலங்கரை விளக்கு.      அரங்கன்தான், அங்கு ஒளிர்கின்ற, நாம் கரைசேர மிளிர்கின்ற தீப ஓளி! பேரொளி!. 

                                                     -Posted 12th June’ 2008-


 

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: