Srirangapankajam

June 12, 2008

PESUM ARANGAN-46

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:50 pm

‘ஆரா அமுதே! அடியேன் உடலம் அன்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்றன நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தால் கண்டேன் எம்மானே”

யாரோ ஒரு யாத்ரீகர் அமுதன் ஸந்நிதியில் பாடிக் கொண்டிருந்தார், அமுதனிடத்து மெய் மறந்து. அங்கு தரிசிக்க வந்த மஹாயோகி நாதமுனிகளின் மெய்யுணர்வு ஏதோ உணர்த்தியது. இந்த உணர்வே நாம் தமிழமுதான நாலாயிரமும் பெறுவதற்கு காரணமாயிற்று. அமுதன் காரணன் ஆனான்.

பன்னீராயிரம் முறை ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு’ மனமுருகப் பாடினார். தம் சீடரின் பாடலை, தவமாகப் பாடிக் கொண்டிருந்த நாதமுனிகளிடத்து பிரத்யட்சமானார் நம்மாழ்வார். பரிவுடனே பிரபந்தங்கள் அனைத்துமேயளித்தார்.

பரிசாகப் பெற்ற பிரபந்தங்களை தொகுத்தார் – தமது மருமகன்களான மேலையகத்தாழ்வாரையும், கீழையகத்தாழ்வாரையும் அழைத்தார் – ஆழ்வார் நம்மை விசேஷமாக கடாக்ஷித்து அருளிய இந்த தீந்தமிழ் பாசுரங்களை இயலும் இசையுமாக்க வேண்டும். இன்கவிபாடும் பரமகவிகள் அருளிச் செய்ததாய் இதனை திவ்யகானமாய் தேவகானமாய் பாடவேணும் என்று அவர்களை ஆசீர்வதித்து முறைப்படுத்தி இயலுமிசையுமாய் தெய்வீக மணத்தோடு பாடுவித்தருள இது பிரஸித்தமாயிற்று.

அரையர் இசை என்னும் தெய்வீக பிரபந்தங்கள் இன்னிசை-நாட்டிய வழிமுறை உண்டாயிற்று. அரையர் என்பதற்கு மன்னன் என்றொரு பொருளும் உண்டு. இயல் இசை நாட்டியம் ஆகியவற்றில் ராஜா போன்று திகழ்ந்ததால் இப்பெயர் உண்டாயிற்று. ஸ்ரீரங்கத்தில் கீழ உத்திர வீதி முழுவதுமே அரையர்களால் சூழப்பட்டிருந்ததாம். இதற்கு செந்தழிழ் பாடுவான் வீதியென்றே பெயர். இராமனுஜர் காலத்தில் 700 அரையர்களிருந்ததாகச் சொல்லுவர். அரையர்கள் வீட்டில் குழந்தைகள் பிறந்தால் திவ்யதேசத்தின் பெருமாள் பெயரை வைக்காமல், அப்போது அவர்களுக்குத் தோன்றும் திவ்யதேசத்தின் பெயரையே வைப்பார்களாம். அந்த திவ்யதேசத்து பிரபந்தங்களையும் அவர்களுக்கு விசேஷமாக கற்பிப்பார்களாம்.

நாதமுனிகள், உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், நம்பி கருணாகரதாஸர், ஏறு திருவுடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாமலை தேவியாண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான் என்கின்ற எண்மர்க்கும் சகல வேத சாஸ்திரங்களையும், திவ்ய பிரபந்தங்களையும் ஓதுவித்தார். அவர்கள் பூரணமாகக் கற்றபின் யோகத்தில் வெகுவாகயெழுந்தருளியிருந்தார். குருகைக்காவலப்பனுக்கு அஷ்டாங்க யோகக்ரமத்தினை அருளிச் செய்தார். உய்யக் கொண்டார் ‘பிணம் கிடக்க மணம் புணரலாமோ” என அஷ்டாங்க யோகம் கற்க மறுத்துவிட்டார். அவருக்கு சாஸ்திரங்களையும், பிரபந்தங்களையும் அருளிச் செய்தார். நாதமுனிகளுக்கு ஈஸ்வரமுனி என்றவொரு புத்திரர். தம் யோகநிஷ்டையால் தமக்கு தலைச்சிறந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவர் பேரனாகப் பிறக்கப் போவதையறிந்தார். தம் புத்திரானாகிய ஈஸ்வரமுனியைக் கூப்பிட்டார். அவருக்குப் பிறக்கப்போகும் புத்திரருக்கு ‘யமுனைத்துறைவன்’ என்று திருநாமம் சாற்றப்பணித்தார். குருகைக்காவலப்பனையும், உய்யக்கொண்டாரையும் யமுனைத்துறைவனுக்கு குருவாகயிருந்து அனைத்தும் கற்பிக்கப் பணித்தார். தாம் மீண்டும் யோகத்தில் ஆழ்ந்தார்.

– Posted on 11th June’ 2006

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: