Srirangapankajam

June 11, 2008

PESUM ARANGAN-45

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:49 pm

”ஆசார்யன் சிஷ்யனுடைய சொரூபத்தைப் பேணக்கடவன் – சிஷ்யன் ஆசார்யனுடைய தேகத்தைப் பேணக்கடவன்-ஸ்ரீவசனபூஷணம் (337).

இங்கு சொரூபம் என்றால் ஆன்மா என்று பொருள். ஆச்சார்யன் என்பவர் சிஷ்யரது ஆத்மபலத்தினைப் பேணி வலிமையுண்டாக்க வேண்டும். சிஷ்யன் தன்னுடைய ஆன்மாவினை பேணி பக்குவப்படுத்தி பாதுகாக்கும் ஆசாரியனுடைய திருமேனியை, தக்கனவான கைங்கர்யங்களினால் எல்லாக் காலங்களிலும் அதிலே கருத்து ஊன்றினவனாய் நோக்கிக்கொண்டு, பேணுதல் வேண்டும். மதுரகவிகள் பரதாழ்வானுக்கு பணிவிடை புரிந்தொழுகின சத்துருக்கனாழ்வான் போன்று பகவத் பக்தியுடனும் பாகவத ப்ரபத்தியும் தலையாயக் கொண்டு வாழ்ந்து வந்தார். நம்மாழ்வார் பரமபதித்தப் பிறகு அவரால் தாமிரபரணி நீரைக் கொண்டு தோற்றுவிக்கப் பட்ட அர்ச்சாரூபமான ஆழ்வாரின் விக்ரஹத்திற்கு சிறப்புற வழிபாடு செய்து கொண்டுவந்தார். இவ்வமயத்தில் மதுரை தமிழ்சங்கத்தினைச் சார்ந்த சிலர் ‘உமது ஆச்சார்யன் சங்கமேறிய புலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்றே? இவரை வேதந்தமிழ் செய்தவரென்று சிலாகிக்கலாகுமோ? என பல குதர்க்கவாதம் செய்தனர். மதுரகவிகள் ஆச்சார்யனைத் தவிர யாரையுமே அண்டாதவராயிற்றே! – நம்மாழ்வாரையேப் பிரார்த்தித்தார். சடகோபர் பிரசன்னமானர்.

திருவாய் மொழியிலிருந்து

‘கண்ணன் கழல் இணை’

என்று பாசுரத்தின் இவ்வடிகளை ஒரு சிறு ஓலையில் எழுத பணித்தார். தமிழ் சங்கத்தாரிடம் “இச்சிறுமுறியை சங்கப் பலகையின் மேல் வையுங்கள்“ என்று கூறி கொடுத்தார்.

தமிழ் சங்கத்தில் விசையுடன் கூடிய ஒரு பெரிய பலகை போடப்பட்டது. தமிழ்சங்கப் புலவர்களனைவரும் தாம் எழுதிய கவிதைகளுடன் ஒரு பக்கம் அமர்ந்தனர். மறுபுறம் இந்த சிறு ஒலைமுறி வைக்கப்பட்டவுடனேயே, தமிழ்புலவர்களையும், அவர்கள்தம் ஏடுகளையும் தூக்கியெறிந்ததாம் இதன் பாரம் மிகுந்து!. இறுமாப்பொழிந்த புலவர்களனைவரும் தாங்கள் அபசாரப்பட்டதிற்கு வருந்தி

‘சேமங் குருகையோ செய்ய திருப்பாற்கடலோ
நாமம் பராங்குசமோ நாரணமோ – தாமந்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு
முளவோ பெருமான் உனக்கு”

என்று சடகோபனைப் போற்றிப் பணிந்தனர். ஆச்சார்யன் பெருமைதனை யாரும் குறைத்து மதிப்பிடாதபடி, அவரது அர்ச்சா திருமேனியினை முன்னைக் காட்டிலும் பன்மடங்கு மிகுதியாக சிறப்புற கொண்டாடி பிறப்பிலாத பெருவீட்டினையடைந்தார். பெரிய பெருமாள் திருவடியை விட ஆச்சார்யன் திருவடி உயர்ந்தது என்றே வாழ்ந்தவர் இவர். இவர் எழுதிய ஆச்சார்யனைக் குறித்த ‘கண்ணி நுண் சிறுத்தாம்பு” எனும் பாசுரம்தான் நாலாயிர பிரபந்தங்களும் வெளிப்பட காரணமாயிருந்தது. நாதமுனிகள் நம்மாழ்வாரைக் காணும் பேறு பெறச் செய்தது!.
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே

பொருள் – மிகவும் நெருக்கமான முடிச்சுகள் கொண்ட, உறுத்தும்படியான கயிறு கொண்டு யசோதை கண்ணனை உரலில் கட்டினாள். அவ்விதம் அவள் தன்னைக் கட்டும்படியாகத் தன்னை அந்த ஸர்வேச்வரன் ஆக்கிக் கொண்டான். இப்படியாக அவள் தன்னைக் கட்டும்படியாக, மாயச்செயல்கள் பல நிறைந்தவனான கண்ணன் செய்து கொண்டான். என்னே அவன் இரக்கம்! இத்தனை எளிமையுடையவனாக உள்ள கண்ணனை அண்டி, அவன் திருநாமத்தைக் கூறுவதைக் காட்டிலும் எனக்கு (மதுரகவி ஆழ்வார்) வேறு ஒன்று மிகவும் இனிமை அளிப்பதாக உள்ளது! ஆழ்வார் திருநகரி என்னும் தென்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வார் என்று ஆழ்வாரின் திருநாமம் கூறும்போது, ஸர்வேச்வரனின் திருநாமத்தைக் கூறுவதைக் காட்டிலும் மிகவும் இனிமையாக உள்ளது. இப்படிப்பட்ட அமிர்தம் என் நாவிற்குக் கிட்டியது.

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: