Srirangapankajam

June 10, 2008

PESUM ARANGAN-44

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:20 pm

12 வருடங்களுக்கு முன்பு அடியேனின் தகப்பனார் சிறிது நாட்கள் நோய்வாய்பட்டு படுக்கையிலேயே படுத்துக் கிடந்தார். அவருக்கு அருகாமையிலேயே இருந்து கைங்கர்யம் பண்ணும் பாக்யம் அடியேனுக்கு. அன்று ஆவணிமாதம் கிருஷ்ணபட்ச ஏகாதசி இரவு தன்னருகில் என்னை அழைத்தார். “இன்றோடு சரி இனி உனக்கு என்னால் எவ்வித கஷ்டமும் இருக்காது. நீ நன்றாகயிருப்பாய்! கவலைப்படாதே! என்று ஆசீர்வதித்து, போய் படுடா! என்றார். நானும் ஏன் இப்படியெல்லாம் பேசுகின்றீர்கள் என்று சற்று அவருக்கு ஆறுதலளிக்குமாறு பேசி, அவருக்குத் தேவையானதெல்லாம் செய்து படுக்கச் சென்றேன். நள்ளிரவு சுமார் 1.30 மணியிருக்கும் என் அம்மாவின் அலறல் கேட்டு விழித்தெழுந்து ஓடினேன். என் தகப்பனார் நிலைவாசல் வரை எழுந்து வந்து தரையில் விழுந்து இரு கைகளாலும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தபடியே உயிரை துறந்தார். என் அம்மாவிற்கு வெளியுலகமே தெரியாது. வேதாந்தமோ, சுலோகங்களோ, பிரபந்தங்களோ ஏதும் அறியாதவள். என் தகப்பனாரைத் தேடிவரும் விருந்தினர்களை உபசரிக்கவே அவருக்கு பொழுது சரியாகவிடும். இருவரும் மிக மிக அன்யோந்ய இணை பிரியாத தம்பதிகள். இரண்டு நாட்கள் சென்றிருக்கும். திடீரென அம்மா எழுந்து அருகில் படுத்திருந்த என்னை எழுப்பி, “உன் அப்பா என்னை வா வாவென்று கூப்பிடுகிறார். அவர் போகின்ற பாதை முழுதும் குளிர்ந்த சோலைகளாகயுள்ளதாம். களைப்பு, பசி, தாகம் ஏதுமில்லாமல் மிகவும் சந்தோஷமாக போகின்றாராம். மனதிற்கு மிகவும் பிடித்த ஒரு ரம்மியமான சூழல்! நறுமணம்!. எவ்விதமான வலியோ இடையுறுகளோ இல்லாத பயணம். இனிமையான தெய்வீகமான இசை வேறு கேட்கின்றதாம். ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் தற்போது தங்கியுள்ளாராம். என்னையும் கண்டிப்பாக அழைத்துக் கொண்டுதான் போவேன்“ என்று பிடிவாதம் பிடிக்கிறார் என்றாள். அதற்கு நான் “வரமுடியாது“ என்று சொல்லும்மா! என்றேன். அதெல்லாம் நடக்கவில்லை!. அப்பா இறந்து ஏழாம் நாள் ஒரு கடுமையான இருதயவலி அம்மாவிற்கு ஏற்பட்டது. அந்த நேரத்திற்கு அரங்கன் எங்கள் பிரார்த்தனையை செவிமடுத்தான். ஒரு சில நாட்களிலேயே என் அம்மாவையும் பிடிவாதமாய் அழைத்துச் சென்று விட்டார் என் தகப்பனார். அவ்வப்போது தன் ஆத்மாவானது பயணிக்கும் பாதையை என் தகப்பனார் எனது அம்மாவிடம் தெரியபடுத்தி வா! வா! என்று அழைத்துக் கொண்டேயிருந்தார். இதெல்லாம் நடக்குமா? என்று தாங்களில் யாரேனும் நினைக்கலாம். ஆனால் இவையனைத்தும் சத்தியமாக உண்மை. என் பெற்றோர்களின் அருகிலிருந்து நான் பார்த்த நிகழ்வு.

சரி! இனி விஷயத்திற்கு வருவோம். நம்மாழ்வார் உயிருடனிருந்தபோதே நம் ஆத்மா பயணப்படும் அர்ச்சித்தராதி மார்க்கத்தினைப் பற்றி 11 பாசுரங்களில் பாடுகின்றார். இந்த அர்ச்சித்தராதி மார்க்கத்தில் பயணம் செய்து மீண்டும் இந்த புவியில் மீண்டிருக்கின்றார்.

ஒன்பதாம் திருவாய்மொழி

பல திவ்யதேச எம்பெருமான்களை திருவாய்மொழி மூலமாக அனுபவித்தார். இனி இந்த உலகில் இருந்து அனுபவிக்க வேண்டியது ஏதும் இல்லாமையால், பரமபதம் போகவேண்டும் என்று ஆழ்வார் எண்ணினார். இவரை விரைவாகக் கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஈச்வரன், பரமபதத்தில் அனுபவிக்கக் கூடியவை என்று இவருக்குக் காண்பித்து, அதனால் இவருக்கு அங்கு செல்லும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்தான். ஆகவே தனது ஸ்வரூப ரூப குண விபூதிகளைக் கண்ணால் காணுவது போல் செய்தான்.

1. சூழ்விசும்பு – பரமபதம் செல்லக் கிளம்பும் ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டு அசேதனமான மேகங்கள் மகிழ்ந்தன. இவர்கள் செல்லக்கூடிய ஆகாயம் எங்கும் நிறைந்து, தூய கோஷத்தை உண்டாக்கின. கடல்கள் தங்கள் அலைகள் என்னும் கரம் உயர்த்தி ஆடின. இப்படியாக அனைத்தும் மங்களகரமான செயல்களைச் செய்தன என்றார்.

2. நாரணன் தமரை – பரமபதம் செல்ல வரும் நாராயணனின் அடியார்கள் கண்டு மேகங்கள் உகந்தன. ஆகாயத்தில் தேவர்கள் பூர்ணகும்பம் ஏந்தி நின்றனர். தேவர்கள் தோரணம் நாட்டி மகிழ்ந்தனர்.

3. தொழுதனர் – அனைத்து லோகங்களில் உள்ளவர்களும் எதிரே நின்று இவர்களைக் கண்டு, “கை பெற்ற பயன் அடைந்தோம்”, என்றனர். முனிவர்கள் வரிசையாக நின்று, “இங்கு சற்றுத் தங்கிச் செல்லலாம்”, என்றனர்.

4. எதிரெதிர் – வழியில் தங்குவதற்கு ஏற்றபடி தேவர்கள் தோப்புகள் அமைத்தும், வாத்யங்கள் இசைத்தும் கொண்டாடினர்.

5. மாதவன் – தேவர்கள் தங்களுடைய இருப்பிடங்களையும், செல்வங்களையும் அளித்து, “இவற்றை ஏற்க வேண்டும்”, என்று வேண்டி நின்றனர். கின்னரரும் கருடர்களும் கீதம் இசைத்தனர். வேதங்கள் ஓதப்பட்டது.

6. வேள்வியுள் – தேவலோகப் பெண்கள் பரிமள புகைகளை வீசி, வாழ்த்து ஒலி கூறினர்.

7. மடந்தையர் – மருத் கணங்கள், வஸுக்கள் தங்கள் எல்லைவரை இவர்களைத் தொடர்ந்து சென்று வாழ்த்து கூறினர்.

8. குடியடியார் – ப்ரக்ருதி மண்டலம் கடந்த பரமபதத்தின் வாயிலில் நித்யஸூரிகள் இவர்களை எதிர்கொண்டு அழைத்தனர்.

9. வைகுந்தம் புகுதலும் – நித்யஸூரிகள் போற்றியபடி அழைத்துச் செல்லுதல்.

10. விதிவகை – நித்யஸூரிகள் இவர்களைக் கொண்டாடுதல்.

11. வந்தவர் – இந்தத் திருவாய்மொழியை அனுஸந்திப்பவர்கள் நித்யஸூரிகளுக்கு ஒப்பாக வைக்கப்படுவர்.

-Posted 9th June’ 2008-

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: