Srirangapankajam

June 8, 2008

PESUM ARANGAN-43

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:55 am

திருத்துழாய் இலையுண்டாகும் போதே பரிமளத்தோட அங்குரிக்கும். அது போன்று ஸ்வாமி நம்மாழ்வாரும் மற்றைய ஆழ்வார்கள் போன்று இவ்வுலக உணர்ச்சி ஏதும் அடையாமல், தத்துவஞானத்தோடு இயற்கையான ஞான பக்தியையுடையவராய், சதா தியானபரராய், இந்நிலை என்றும் மாறதிருந்த மாறன் ஆவார். இவர் அவயவி. மற்றைய ஆழ்வார்களெல்லாரும் இவருக்கு அவயம்..

இவருக்கு
– பூதத்தாழ்வார் : சிரம்
– பொய்கை மற்றும் பேயாழ்வார்கள் : இரண்டு கண்கள்
– பெரியாழ்வார்: முகம்
– திருமழிசை: கழுத்து
– குலசேகராழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார்: இரண்டு கைகள்.
– தொண்டரடிப்பொடியாழ்வார்: திருமார்பு
– திருமங்கையாழ்வார்: கொப்பூழ்
– மதுரகவியாழ்வார் : திருப்பாதங்கள்.

இந்த பூமியில் சுமார் 35 ஆண்டுகள் எழுந்தருளி, எல்லா திவ்யதேச எம்பெருமான்களையும் தாமிருக்கும் இடத்திலே தரிசித்து களித்த ஸ்வாமி நம்மாழ்வார் பரமபதம் செல்லத் திருவுள்ளம் கொண்டார். மிக மிக துக்கித்த அவரின் சீடர் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் திருமேனியை வேண்டினார். ஆழ்வார் தாமிரபரணியின் ஆற்று நீரை கொணர்ந்து சுண்ட காய்ச்சினால் தமதுருவம் கிடைக்கும் எனத் தேற்றினார். மதுரகவிகள் ஒரு பொற்குடத்தில் தாமிரபரணியாற்றின் நீரை இடைவிடாமல் வேத விற்பன்னர்களின் வேதகோஷத்தோடு காய்ச்சினார்.

ஏழாம் நாள் கூப்பிய கையுடனும், திரிதண்டத்துடனும், ஒரு திவ்வய மங்கள விக்ரஹம் யாரும் எதிர்பாராவண்ணம் தோன்றிற்று. அதனைக் கண்ட நம்மாழ்வார் ‘பொலிக பொலிக பொலிக” எனத் திருவாய் மலர்ந்தருளி அது வருங்காலத்தில் வைணவத்தை ஸ்திரமாக நிலைநாட்டப் போகும் ஸ்வாமி இராமானுஜரின் ‘பவிக்ஷதாச் சார்ய’ திருமேனி என்று அருளி, தனது வலது திருவடியை அங்கு காண்பித்தார். அதில் இராமானுஜருடைய உருவத்தினை அனைவரும் தரிசித்தனர். அந்த விக்ரஹத்தினை அங்கேயே ஆராதித்து வரும்படி பணித்தார்.

மீண்டும் ஒருமுறை காய்ச்சச் சொன்னார். மீண்டும் முன்பு செய்தது போல செய்யும்போது, இன்று நாமனைவரும்
ஆழ்வார் திருநகரியில் தரிசித்துக் கொண்டிருக்கும் இந்த ஸ்வாமி நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் சின்முத்திரையோடு அப்போது உண்டாயிற்று. அப்போது நம்மாழ்வாரின் திருமேனியிலிருந்து ஒரு அருள்ஒளி விக்ரஹ திருமேனியில் பாய்ந்தது. இதன் பின்பு நம்மாழ்வார் ”சூழ்விசும்பணிமுகில் தூரியம் முழக்கின’ என்கின்றபடியே பரமபதம் எழுந்தருளினார். மதுரகவியாழ்வார் அவரது சரமத்திருமேனியை திருப்புளியாழ்வாரினடியில் திருப்பள்ளிப்படுத்தி, திருவரசு ஏற்படுத்தி வழிப்பட்டு வரலானார்.

முடிவு இவன் தனக்கு ஒன்றறிகிலேனென்னும்
மூவுலகாளியே! என்னும் –
கடிகமழ்கொன்றைச் சடையனே! என்னும்
நான்முகக் கடவுளே! என்னும் –
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்
வண் திருவரங்கனே! என்னும்
அடியடையாதார் போல் இவளணுகி
அடைந்தனள் முகில் வண்ணனடியே!.

இந்த பெண் இவ்வாறு சிரமப்படும் நேரங்களில் தனக்கோ அல்லது தன்னுடைய சிரமங்களுக்கோ எந்தவித முடிவும் தெரியவில்லை என்கிறாள். மூன்று லோகங்களையும் ஆண்டு வரும் இந்திரனுக்கு ஆத்மாவாக உள்ளவனே என்கிறாள். மிகுந்த மணம் உடைய கொன்றை மாலையை தனது சடையில் தரித்துள்ள சிவனுக்கு ஆத்மாவாகயுள்ளவனே என்கிறாள். நான்முகனுக்கு ஆத்மாவாகயுள்ளவனே என்கிறாள். உன்னுடைய வடிவினை உடைய வானோர்களின் தலைவனே என்கிறாள். அனைவருக்கும் அருள்புரிகின்ற திருவரங்கப் பெரியபெருமாளே என்கிறாள். அவனது திருவடிகளை அடைய மாட்டாள் என்று எண்ணும்படியிருந்தபோது, நீர் கொண்ட மேகம் போன்ற நிறத்தையுடைய அவன் திருவடிகளை அவள் பெற்றுவிட்டாள்.

மூவுலகாளியே என்பதை மூ + உலகு + ஆளியே என்று பிரிக்க வேண்டும். திருமலையாண்டன் உரைக்கையில் ”மூன்று உலகையாளும் இந்திரன் எனப்படும், சிவன் எனப்படும், பிரம்மன் எனப்படும் வடிவுடைய வானோர்கள் மற்றும் தேவர்களின் தலைவனே’ என்று கூறுகின்றார். எம்பெருமானார் கூறுகையில் அவர்களது தலைவன் என்பதோடு அந்தர்யாமி என்று சேர்க்கின்றார்.

இந்த மூவலகின் தலைவன் என்று கூறும்போது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது. திருவரங்கம் கோவிலில், காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளிலும் கர்ப்பகிரஹத்தில் பச்சரிசி மாவை நீர் கொண்டு குழைத்து பூர்ணம் போன்று செய்து நடுவில் நெய் திரி ஏற்றி ஆறு மங்களஹாரத்தியும், கற்பூரத்தினால் மூன்று கற்பூரஹாரத்தியும் பெரியபெருமாளுக்கு காண்பித்தருளுவர். சுமார் இரண்டு வருடங்களிருக்கும். அன்று ஒரு ஏகாதசி. நம்பெருமாள் புறப்படுவதற்கு முன் மங்களஹாரத்தி செய்தேன். வெளியில் ஆந்திரா ஸ்ரீதிரிதண்டி நாராயண ஜீயர் ஸ்வாமிகள் ஸேவித்துக் கொண்டிருந்தார். அவர் கூட உபன்யாஸகர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீகண்ணன் ஸ்வாமிகளும் உடனிருந்தார். ஏளப்பண்ணுவதற்கு என்னுடன் கூட இரண்டு மூத்த அர்ச்சகர்களும் உடனிருந்தனர். நம்பெருமாளை தோளுக்கினியானில் எழுந்தருளச் செய்து ஒவ்வொருவராக துவாரபாலகர்கள் தாண்டி வந்து கொண்டிருந்தோம். ஜீயர் ஸ்வாமிகளுக்கு திடீரென்று ஒரு சந்தேகம். எதற்காக ஆறு பூரணம் போன்று செய்யப்பட்ட மங்கள ஹாரத்தி? எதற்காக மூன்று கற்பூர ஹாரத்தி? என்று. இரண்டு மூத்த அர்ச்சகளிடமும் கேட்டார். அவர்களால் உடனடியாக பதில் சொல்ல இயலவில்லை. ஸ்ரீ கண்ணன் ஸ்வாமிகள், ‘ முரளீ! உனக்குத் தெரியுமா?’ என்றார். நான் பட்டென்று நம்பெருமாள் ஷாட்குண்யபரிபூரணர் (ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறுகுணங்களையும் முழுமையாக பெற்றவன்) அதனால் ஆறு மங்களஹாரத்தி என்றேன். ‘மூன்று கற்பூரஹாரத்தி?’ வினவினார்
ஜீயர் ஸ்வாமிகள். த்ரைலோக்ய பூஜிதர்! (மூன்று உலகிலும் ஆளும் இந்திரன், சிவன், பிரம்மனால் பூஜிக்கப்படுபவர்) என்றேன்.
இதனால் மனமகிழ்வு கொண்ட ஜீயர் ஸ்வாமிகள் உடனடியாக பத்துரூபாய் கட்டு (ரூ.1000) ஒன்றினை சன்மானமாகக் கொடுத்தார். வாங்கி கொண்ட எனக்கு ஒரே உதைப்பு!. நாம் ஏதோ சமயத்திற்கு ஏற்றாற்போல உளறிவிட்டாமே! எப்படி உடனடியாக இப்படிச் சொன்னோம்? நம்மைக் காட்டிலும் பெரியவர்களே போகும்போது நாம் ஏன் வாயைக் கொடுத்து வாங்கிக்கொண்டோம்(பணத்தினை!)
என்ற உதறல்!. (இந்தத் தொடர் எழுதும்போது கூட அதிகபிரசங்கித்தனமாக எழுதுகிறோமோ? என்று அவ்வப்போது தோன்றுகிறது!) சிறிது நேரம் சென்று ஸ்ரீகிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் ஸேவிக்கவந்தார். ஸ்வாமி என் தகப்பனாருக்கு மிகவும் நெருக்கம். அடியேனையும் சிறுகுழந்தையாகயிருக்கும் போதிலிருந்து நன்கறிவார். அவரிடம் நடந்ததையெல்லாம் சொன்னேன். தாங்கள்தான் இதற்கு சரியான தீர்வு தரவேணும் என்று பிரார்த்தித்தேன். அதற்கு ஸ்வாமி, ”நீ இங்கிருந்து சொன்னாய் அல்லவா! அதுதான் உண்மை. இதுதான் பிரமாணம் – நீ கவலைக் கொள்ள வேண்டாம்” என ஆசீர்வதித்தார். ஆறுதலடைந்தேன்!.

-Posted 7th June’ 2008-

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: