Srirangapankajam

June 7, 2008

PESUM ARANGAN-42

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:53 pm

ஆழ்வார்கள் பாடிய திவ்ய பிரபந்தங்களுக்கு ‘தமிழ் மறை’ என்று பெயர். இதற்கு இத்தனை ஏற்றம் வர காரணமாயிருந்தவர் ‘வேதம் தமிழ் செய்த மாறன் ‘ நம்மாழ்வார் ஆவார். இவரது கருணையில்லாவிடின் தமிழ் மறையுமில்லை. நாலாயிரமும் நமக்குக் கிடைத்திருக்காது. திருவழுதிவளநாட்டை ஆண்ட காரியார் என்ற மன்னருக்கும் உடையமங்கை என்னும் மலைவளநாட்டு வேளிர் அரசிக்கும் திருக்குருகூர் என்னும் திருத்தலத்தில், திருக்குறுங்குடி நம்பியின் கிருபையினால், கலியுகத்தின் நாற்பத்து மூன்றாம் நாளில் ப்ராமதி வருடம் வைகாசி, விசாக நட்சத்திரத்தில் விஷ்வக்ஸேனரின் அம்சமாக அவதரித்தவர். பிறந்தவர் அழவும் இல்லை, அசையவும் இல்லை, எந்தவித உணர்ச்சியும் இல்லை. ஒன்றேயொன்று உயிர் அது மட்டுமேயிருந்தது. குருகூர் ஆதிநாதர் ஸந்நிதியில் இக்குழந்தையை விட்டு கதறி அழுதனர் காரியாரும், உடையமங்கையும். அதிசயம் நிகழ்ந்தது. பூப்போல் சிரித்து, குப்புற கவிழ்ந்து, தவழ்ந்தது அக்குழந்தை ஸந்நிதியிலுள்ள ஒரு புளியமரத்தை நோக்கி!. புளியமரத்தினடியில் சேர்ந்த குழந்தையை யாராலும் தூக்க முடியாது போயிற்று. பசியோ, தாகமோயின்றி, எவ்வித வாட்டமுமின்றி அதனடியிலேயே இயல்புக்கு மாறாக வளர்ந்தமையினால் ‘மாறன்’ எனப் பெயரிடப்பெற்றார் சடகோபன். சாதாரணமாக குழந்தை பிறந்தவுடன் சடம் என்னும் அறியாமைக்கு உரித்தான ஒரு நாடி படருமாம். இக்குழந்தை அதனைத் தன்னிடத்து நெருங்க விடவில்லை. அதனை வென்றமையால் சடகோபன் என்ற பெயரும் இவருக்கு உரித்தாயிற்று. திருக்குறுகூர் ஆதிநாயகர், விஷ்வக்ஸேனரையே குருவாக நியமித்தார் இவருக்கு. இளமையிலேயே கற்றுத்தேர்ந்தார் காரியின் மாறன்!.
இவரின் மௌனத்தைக் கலைத்தவர் மதுரகவி. இவர் ஞானம் தேடி வடக்கேச் சென்று, அயோத்தியில் வானத்தில் தெரிந்த ஒரு தெய்வீக ஒளியைக் கண்டு, அந்த ஒளி இவரை இங்குக் கொண்டு வந்து சேர்த்தது. இத்தனைக்கும் இவருக்கு திருக்குறுகூரையடுத்த திருக்கோளுர்தான் சொந்த ஊர். இவரிடத்து வந்து சேர்வதற்கு பல க்ஷேத்திரங்கள், புண்ணிய நதியில் நீராடல்கள் தேவைப்பட்டதோ என்னவோ. வெகுதூரம் ஞானம் தேடிச்சென்று மீண்டும் தன்னுடைய ஊர் அருகிலேயே கண்டார் தான் தேடிய ஞானியை இவர்.

(ஸ்ரீரங்கத்திலேயே எனது நண்பர் ஒருவர், தன்னுடைய பெண்ணிற்கு வரம் தேடினார். ஏறத்தாழ இரண்டு வருடம். எங்கெங்கோ அலைந்தார். ஆங்காங்கு அருகேயுள்ள பெருமாள் கோவிலுக்கெல்லாம் சென்று வருவார். பரிகாரமாக பல கோவிலுக்கும் சென்றார். கடைசியில் மணமகன் கிடைத்து விட்டார்! எங்கு தெரியுமா? தானிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே, பக்கத்து வீட்டில்!.)

மதுரகவி நம்மாழ்வரிடத்து வெகுநாட்களாக தனக்கு விடைதெரியாத ஒரு கேள்வியை நம்பிக்கையுடன் கேட்கின்றார் – ‘செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?”
(செத்தது: சரீரம், சிறியது: ஜீவாத்மா(உயிர்) உடலில் தங்கும் இந்த ஜீவன் எப்படி செயலாற்றும்?)
நம்மாழ்வார் முதன் முதலாக திருவாய் மலர்ந்தருளுகின்றார் – ‘அத்தைத் தின்று அங்கே கிடக்கும்”.
(உடலில் உயிர் உள்ளவரை, அதன் உடலானது அனுபவிக்கும், ஐம்புலன்களின் இன்ப, துன்பங்களையும் இந்த ஜீவாத்மா ஆனது சகித்துக் கொண்டிருக்கும்). தெளிவுப்பெற்ற மதுரகவி அவருடனேயே தங்கி விட்டார். மதுரகவி வேண்டுகின்றார் குருவிடம் வேதமனைத்தும் தமிழ் படுத்த, நம்மாழ்வார் வேத சாரமாக அருளிச்செய்தவை:

திருவிருத்தம் – 100 பாசுரங்கள் – ரிக் வேத சாரம்
திருவாசிரியம் – 07 பாசுரங்கள் – யஜூர் வேத சாரம்
திருவாய்மொழி – 1102 பாசுரங்கள் – சாம வேத சாரம்
திருவந்தாதி – 87 பாசுரங்கள் – அதர்வண வேத சாரம்

புஷ்ப, தியாக, போக மண்டபத்து தொடக்கமான திவ்யதேசத்து எம்பெருமான்கள் அனைவருமே
இவர் வசித்து திருப்புளியடிவாரத்தே வலியவந்து தாங்கள் திவ்யதரிசனத்தை இவருக்குக் காட்டிக்கொடுத்தனர். எந்த திவ்யதேசத்திற்கும் செல்லாமலேயே அனைத்து திவ்யதேசத்து பெருமாளும் இவரிடத்தே வந்து ஸேவை சாதித்தனர்.

கங்குலும் பகலும் கண் துயிலறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும் –
சங்கு சக்கரங்களென்று கை கூப்பும்
தாமரைக் கண்ணென்றே தளரும் –
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும்
இரு நிலம் கை துழாவிருக்கும்
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே?

இரவிலும் பகலிலும் கண்கள் மூடி உறங்க வேண்டும் என்பதை அறிந்தும் அறியாதவளாக மாறி விட்டாள். கண்களில் பொங்கும் கடல் போன்ற தண்ணீரானது உன்னைக் காண்பதற்கு இடையூறாகயிருக்கும் என்பதால், அதனைத் தனது கைகளால் தள்ளிவிடுகின்றாள். திருச்சங்கு மற்றும் சக்கரத்தினை குறித்து ஏதோ சொல்லி அவற்றை வணங்க முயற்சிக்கின்றாள். அழகிய சிவந்த தாமரைப் போன்ற கண்கள் என்று சொல்லி அதனைப் பெற முடியாததால் உள்ளத்தினால் சோர்வடைகின்றாள். ‘உன்னை விட்டு நான் எப்படியிருப்பேன்?’ என்று கூறுகின்றாள். இந்த பெரும் பூமியினைத் தனது கைகளால் அளைந்த வண்ணம் உள்ளாள். அழகான சிவந்த மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடும் காவிரி நீர் நிறைந்த திருவரங்கப் பெரியபெருமாளே! என்னுடைய மகளின் நிலை குறித்து நீ என்ன நினைத்துள்ளாய்?

(இந்த பாசுரத்தினை நம்மாழ்வார் நாயகி பாவத்திலும், இந்த நாயகியின் தாயார் அரங்கனிடம் முறையிடுவது போன்றும் அமைந்துள்ளது)

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: