Srirangapankajam

June 4, 2008

PESUM ARANGAN-41

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 10:25 pm

திருமங்கையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வாரைச் சந்தித்திருக்கிறார். திருமதிள் அமைக்கும் போது இவரது நந்தவனத்திற்கு எந்த ஊறும் ஏற்படாவண்ணம் திருமதிளை நந்தவனத்தை வளைத்துக் கட்டியுள்ளார். இதனைக் கண்டு மகிழ்ந்த தொண்டரடிப்பொடிகள் அவரை வாழ்த்தி, தான் பூக்களைப் பறிக்கும் சிறுகத்தி போன்ற ஆயுதத்திற்கு, திருமங்கைமன்னனின் மற்றொரு பெயரான ‘அருள்மாரி’ என்ற பெயரை வைத்துள்ளார்.

திருமங்கையாழ்வார் அரங்கனிடத்து சில வரங்களை யாசிக்கின்றார்.  அவற்றுள் சில

– தசாவதாரங்களையும் தரிசிக்க வேண்டும்
– திருமங்கைமன்னன் படித்துறைக்கு (மயானம்) எந்தவித தோஷங்களும் கூடாது. அது எப்போதும் தோஷற்றதாக விளங்க வேண்டும்.

அரங்கன் ஆழ்வாரது கோரிக்கையை சந்தோஷமாக ஏற்கின்றான். எம்பெருமானின் தசாவதாரங்களையும் பாடிக் கொண்டிருந்த திருமங்கையாழ்வாருக்கு அந்த அவதாரங்களை தானும் ஸேவிக்க மிகுந்த ஆசையுண்டாயிற்று. ஆழ்வார்கள் வேண்டி அரங்கன் ஏதும் மறுப்பானோ? ஆழ்வார் உய்ய, அவர் பொருட்டு நாம் உய்ய அர்ச்சாரூபமான (சிலா ரூபத்தில்) தசாவதாரங்களையும் காண்பித்தருளினான். அப்போதே திருமங்கையாழ்வார் விக்ரஹத்தையும் தோன்றச் செய்தார். இவருக்குக் காட்சியளித்த விக்ரஹங்களனைத்தையும் இன்றும் ஸ்ரீரங்கத்தில் அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ‘தசாவதார ஸந்நிதியில்’ அதிவிசேஷமாகக் காணலாம். (இத்திருக்கோவில் ஒரு காலத்தில் கோயிலண்ணன் கட்டுப்பாட்டிலிருந்ததாகவும், 18ம் பட்டம் அழகியசிங்கர் காலத்தில் கைமாறியதாகவும் சொல்லுவர்). இங்குள்ள திருமங்கையாழ்வார் விக்ரஹம்தான் ஸ்ரீரங்கத்தில் அத்யயன உற்சவத்தின் போது எழுந்தருளப் பண்ணியதாகவும், இந்த உற்சவம் முழுவதும் வடக்குச் சித்திரை வீதியிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்ததாகவும் சொல்லுவர். அடுத்தமுறை ஸ்ரீரங்கம் வரும்போது இந்த ஸந்நிதியினை ஸேவிக்கத் தவறாதீர்கள்!

இக்கலியனை மிகவும் கவர்ந்த திவ்யதேசங்கள் திருநறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம், திருவேங்கடம், திருக்குடந்தை ஆகிய திவ்யக்ஷேத்திரங்களாகும். இவர் நாலுகவிப் புலவராவார். அவையாவன ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி என்பதாகும். திருவரங்கத்தில் ஆழ்வார்களின் தீந்தமிழுக்கு, திருவாய் மொழித் திருநாள் ஏற்படுத்தி, பெருவிழா எடுத்த முதல்வர் இவர்தான். திருக்குடந்தை ஆராவமுதன் குறித்து இவர் இயற்றிய ‘திருவெழுக்கூற்றிருக்கை” ஒரு அற்புத சித்ரகவியாகும். காடு, மேடு, ஆறுகள், குன்றுகள் பலவற்றைக் கடந்து எண்பதிற்கும் மேலான திவ்யதேசத்து எம்பெருமான்களைப் பற்றி பாடியுள்ளார். அதிக திவ்யக்ஷேத்திரத்து எம்பெருமான்களை பாடிய பெருமை இவரையேச் சாரும். இவரது வாழ்க்கையும், பாக்களும் மிகவும் சுவாரசியமானவை. பாசுரங்கள் காந்தம் போன்று மனதினை கவர்ந்துவிடும்.

ஏழை ஏதலன் கீழ்மகனென்று எண;ணாது
இரங்கி மற்றவற்கு இன்னருள் சுரந்து
மாழை மான்மட நோக்கி உன் தோழி
உம்பியெம்பியென்றொழிந்தில்லை – உகந்து
தோழன் நீ எனக்கு இங்கொழியென்ற
சொற்கள் வந்து அடியேன் மனந்திருந்திட –
ஆழிவண்ண! நின்னடியினையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே!


ஞானமில்லாதவன், பகைவன், தாழ்ந்த பிறவியுடையவன் என்று சிறிதும் நினைக்காமல் மனதில் இரக்கம் கொண்டு, அதற்கும் மேலே அந்த குகனுக்கு உனது இனிய அருளையும் கொடுத்தாய். கள்ளம் கபடம் இல்லாத மானுடைய இனிமையான பார்வை போன்று கனிவான பார்வையுடைய ‘இந்த சீதை உனக்கு தோழியென்றும், என்னுடைய தம்பியான இலக்குவன் உனக்கும் தம்பியாவான்’ என்று கூறினாய். இதோடு நிற்காமல் மிகவும் உவகையுடன், ‘நீ எனக்குத் தோழன்’ என்று குகனைப் பார்த்துக் கூறினாய். உனது தம்பியான பரதன் ஆட்சி செய்யும் காலத்தில் அவனுக்குப் பாதுகாப்பாக இருக்க எண்ணி ‘நீ அங்கேயே இரு’ என்றாய். இவ்விதமான நீ அருளிய சொற்கள் பெரியோர்கள் மூலம் அடியேன் காதில் விழுந்து எனது மனதிலேயே தங்கிவிட்டது. கடல் போன்ற நிறமும் மனதும் உடையவனே! அழகான சோலைகளை உடைய திருவரங்கப் பெரிய பெருமாளே! உனது திருவடிகளே சரணம் என்று நான் வந்தேன்.

நம் தேகமே ஆத்மா,  ஆத்மா நம்முடையது,     நாம் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகின்றோமே அதுதான் ஒரு பெரிய களவு.    எப்போது மெய்ஞானம் தோன்றி அரங்கனிடத்து ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகின்றோமோ அன்றுதான் நமக்கு விடுதலை!

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: