Srirangapankajam

May 28, 2008

PESUM ARANGAN-37

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 6:42 pm

Dear SwAmin,
I have a few questions….in your latest post you mention a verse from ParASara smriti and state that even achetana vasthu can attain moksham…is this consistent with SribAshyam? Moreover, how can there be ‘moksham’ for achetanas as they do not have any prajnA?
I think the verse is to be understood as praising a bhAgavathA and not making any metaphysical point……

என் அன்புக்குரிய நண்பர் ஒருவர் கேட்டக் கேள்வி இது.

ததிபாண்டன் கிருஷ்ணனிடம் மோக்ஷம் கேட்கிறார். கிருஷ்ணர் அசேதன வஸ்துக்களான அவரிடத்தேயுள்ள சட்டி பானைகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுக்கின்றார். வைகுண்டத்திலுள்ள இந்த வஸ்துக்களைப் பற்றி பராசரப்பட்டர் கூட ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றார்.

பிள்ளைலோகச்சாரியர் ஜ்யோதிஷ்குடியில் பிராணன் பிரியும் சமயம், நம்பெருமாள் அவருக்குக் காட்சிக்கொடுக்கின்றார். நீர் காணுகின்ற, தொடுகின்ற அனைத்திற்கும் எம்பக்கம் இடம் உண்டு என்கிறார். உடனேயே பிள்ளைலோகச்சாரியார் தன்னருகில் முளைத்துள்ளத் தாவரங்கள், கல், மண் என எது எது முடியுமோ அனைத்தையும் தன்னோடு அணைத்துக்கொள்கின்றார். எதிரேயுள்ள மலையினை முடிந்த மட்டும் பார்க்கின்றார், எல்லாம் மோக்ஷத்தினையடையட்டுமேயென்று அந்த பரம பாகவதோத்தமர்!

என்னைப் பொறுத்தவரை ஸ்மிருதி வார்த்தைகள் பொய்யாகாது. ஒருக்கால் என்னால் தக்க பதில் சொல்லமுடியாமற் போகலாம். அதற்கு என்னுடைய அஞ்ஞானம்தான் காரணமாகும்.

சரி! நாம் விஷயத்திற்கு வருவோம்!

‘என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தாரென்பர் போலும்”

என்கின்றபடியே லோகசாரங்கர் செய்த ஒரு சிறு தவறும் கூட திருப்பாணர் அர்ச்சா சொரூபமாகயுள்ள அரங்கனைக் காண ஏதுவாகின்றது. எந்த நேரத்தில் எது நடக்குமோ அதது இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கின்றது. சில சூக்ஷூமத்தினை நாம் புரிந்து கொள்ளமுடிகின்றது. சிலவற்றை நம்முடைய சிற்றிவினால் புரிந்து கொள்ள இயலாமற் போகின்றது. பகவானின் கைங்கர்யத்தினில் நாம் அபசாரப்பட்டு விட்டோமே? என வருந்திக் கொண்டேயிருந்த திருப்பாணரிடம் பரிவோடு நெருங்கின்றார் லோகசாரங்கர். தவற்றிக்கு அவரிடம் வருந்துகின்றார். திருப்பாணர் எவ்வளவோ மறுத்தும் இது அரங்கன் ஆணை! என்று அவரை வலுக்கட்டாயமாக தோளில் ஏற்றி புறப்படுகின்றார் பலிஷ்டரான லோகசாரங்கர். (நம்பெருமாளுக்கு தீர்த்த கைங்கர்யம் பண்ணுகின்றவர்கள் பலவானாகவே மாறிவிடுவார். அந்த மிகப்பெரிய செப்புக்குடத்தைத் தேய்த்து, தினமும் இரண்டு முறை தீர்த்தம் கொண்டு செல்வதே ஒரு சிறந்த உடற்பயிற்சி!.)

எதற்காக பாணர் ஏங்கித் தவித்தாரோ, இதோ! அரங்கனை, அழகனை, அர்ச்சையின் முதல்வனை, ஆசை தீர தரிசிக்கப் போகின்றார். லோகசாரங்கரின் தோளிலிருந்து இறங்குகின்றார். திருவடிகளைத் தரிசிக்கின்றர். அரைச்சிவந்த ஆடையினால் கவரப்படுகின்றார். பாடுகின்றார். கருத்த, விசாலமுள்ள, செவ்வரியோடிய அரங்கனது கண்ணழகு கவருகின்றது! கண்ணீர் மல்க துதிக்கின்றார்! எண்ணி பத்தே பாடல்கள் ஒரு பேரோளி தோன்றுகின்றது. இந்த தூண்டாவிளக்கு அதனுடன் கலக்கின்றது. பாணர் கலந்தார் அரங்கனுடன்!

காண்பனவும் உரைப்பதையும் மற்றொன்றின்றிக்
கண்ணனையே கண்ணேந்த கடிய காதல்
பாண்பெருமாள் அருள் செய்த பாடல் பத்தும்
பா மறையன் பொருள்!

என்று துதிக்கின்றார் ஸ்வாமி தேசிகன்!

கடவுளுடன் ஒன்றுவதற்கு குலம் ஒரு பேதமில்லை! குணமிருந்தால் போதும் என்றுணர்த்துகின்றார் திருப்பாணர்!

அமலனாதிபிரான் அடியார்க்கு என்னையாட்படுத்த
விமலன்!விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்!
நிமலன்நின்மலன்நீவானவன் நீள்மதிளரங்கத்தம்மான்-திருக்
கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளனவொக்கின்றதே!

மிக்கத் தூய்மையுடையவனாய், இந்த உலகினுக்கே ஆதியாய் உடையவனாய், எனக்கு வழிகாட்டியாய், தாழ்ந்த குலத்தில் பிறந்த என்னைத் தன்னுடைய அடியார்களது அடியாராக, மாற்ற வந்தவன் நம்பெருமாள்!. சிறந்த ஒளியினையுடையவனாய், வானோர்களுக்கும் அவனுடன் அன்றாடம் வாசம் செய்யும் அடியார்களுக்கும் தலைவனாய், மணம் வீசுகின்ற சோலைகள் நிரம்பிய திருமலையிலுள்ள திருவேங்கடமுடையானாய், பலனை எதிர்பாராமல் உதவிகள் செய்பவனாய், தர்மத்தையே கூறும் பரமபதத்தின் நாயகனாய், உள்ளவன் எம்பெருமாள்! இப்படிப்பட்டவனும், உயர்ந்த நீண்ட மதிற்சுவர்களையுடைய பெரியகோயிலில் வந்து சயனித்துக் கிடக்கும் அழகிய மணவாளனும் ஆகிய எம்பெருமாளுடைய தாமரைப் போன்ற திருவடிகள், என்னுடைய கண்களுக்குள் புகுந்து கொண்டு எப்போதும் காட்சி அளித்துக் கொண்டுள்ளன.)

திருப்பாணர் திருவரங்கத்தைத் தவிர எந்த திவ்யதேசமும் சென்றதில்லையே! எப்படி திருவேங்கடமுடையானைப் பற்றி வர்ணிக்கின்றார்?. இவர் அரங்கனைத் தரிசிக்கும் முன்பே திருமலையப்பன் இவருக்குக் கண்டிப்பாக ஸ்ரீரங்கத்திலேயே காட்சியளித்திருப்பார். அவரை வணங்கி இவரை துதிக்க வந்திருப்பார். இதனால்தான் நான் அர்ச்சா சொரூபமாயுள்ள அரங்கனைத் தரிசிக்கவருகின்றார் என்று சொன்னேன். இவர்களெல்லாருமே முன்னமேயே காட்சியளித்து அவரை ஆட்கொண்டிருப்பார். இது அனைத்து ஆழ்வார்கள் விஷயத்திலும் நடந்திருக்கின்றது.

இதில் பூர்வாச்சாரியார்கள் ‘திருக்கமலபாதம்’ என்பதை மூன்றாகப் பிரிக்கின்றார்.

1. திருப்பாதம்: ‘துயரறு சுடரடி” இது துயர்போக்கும் பேரருளாளன் காஞ்சி வரதனைக் குறிக்கும்.

2. கமலப்பாதம்: ”பூவார் கழல்கள்” – புஷ்பம் போல் தரிசித்த மாத்திரத்தில் மனதிற்கு ஹிதத்தைத் தரக்கூடிய திருவேங்கடமுடையானுடைய கமலப்பாதம்.

3. திருக்கமலப்பாதம்: ”பொது நின்ன பொன்னங்கழல்’
சமஸ்தலோகத்திற்கும், அனைவரையும் உஜ்ஜீவிக்கச் செய்யக்கூடியதான, எல்லாருக்கும் பொதுவான பாதங்கள். இது ஸ்ரீரெங்கநாதனுடையது!

-மேலும் பேசுவோம்- Posted on 27.5.2008.

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: