Srirangapankajam

May 27, 2008

PESUM ARANGAN-36

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:06 pm

”மத்பக்தாந் ஸ்ரோத்ரியோ நிந்தந் ஸத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத்”
”வேத அத்யயனம் செய்தவனேயாகினும் என் பக்தனை நிந்தித்தானேயாகில் உடனே சண்டாளத்தன்மையை அடைகிறான்” என்கிறார் பகவான்.

இதனையே திருமாலையில் தொண்டரடிப்பொடிகள்,

‘அமரவோ ரங்கமாறும் வேதமோர் நான்கு மோதித்
தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோரளவிலாங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே”

ஒப்பற்ற ஆறு வேதங்களையும், ஈடு இணை இல்லாத நான்கு வேதங்களையும் நன்கு நெஞ்சில் பதியும் வண்ணம் கற்று, ஓதி, முதன்மைப் பெற்று விளங்கும் பிராம்மண குலத்தவர்கள் ஆனாலும், அவர்கள் உன்னடியார்களை பழிப்பாரேயாகில், அந்த நொடிப் பொழுதிலேயே அவர்கள் சண்டாளர்கள் ஆகிறார்கள்
என்கிறார்.

”ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு. அதுவும் இல்லை இவனுக்கு: ஆருட பதிதன் ஆகையாலே” என்கிறது வசனபூஷணம்.
(ஜாதியினால் தாழ்ந்த குலத்தவர் காலப்போக்கிலே தன்னுடைய உயர்ந்த பக்தியினாலே பாகவதன் ஆகைக்கு யோக்யதை உண்டு. ஆனால் பாகவதர்களிடத்தில் செய்த அபசார ரூபமான கர்மத்தினாலே சண்டாளனான இம்மகாபாபிக்கு அந்த தகுதியும் இல்லை – ஆருடபதிதன்-கர்மசண்டாளன்)

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் – கீழிருந்தும்
கீழல்லார் கீழல்லவர்

மேற்பிறந்தாராயினும் கல்லாதார் – கீழ்ப்பிறந்தும்
கற்றாரனைத்திலர் பாடு

ஆகிய திருக்குறளும்

”வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே” என்ற புறநானூற்றுப் பாடலும் இங்கு ஒப்புநோக்கத் தக்கது.

இதையெல்லாம் நன்கு அறிந்தவராகத்தானிருந்திருப்பார் லோகசாரங்கர். நடந்ததையெண்ணி, எண்ணி, கண்ணீர் உகுத்திருப்பார். கதறி அழுதிருப்பார். அரங்கன் அவரை தேற்றுவதற்கு அவரது கனவில் வருகின்றார். சூக்குமமாக அவர் செய்த பாபத்திற்கு பரிஹாரமும் சொல்கிறார்.

‘பஸூர் மநுஷ்யா பக்ஷீவாயேச வைஷ்ணவ ஸம்ஸ்ரயா:
தேநைவதே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம்”

”நாற்கால் விலங்காயினும் மனிதனாயினும் பறவையாயினும் இவை ஒரு வைஷ்ணவனைச் சார்ந்தனவாயின் அந்த வைஷ்ணவ சம்பந்தத்தாலே அந்த விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடைகின்றன” என்கிறது பாரத்வாஜ ஸ்மிருதி.

பரம பாகவத உத்தமரான, உத்தம ஸ்ரீவைஷ்ணவரான, திருப்பாணின் சம்பந்தத்தைப் பெற, திருப்பாணனைத் அவரதுத் தோளின் மீது எழுந்தருளப்பண்ணி வர ஆணையிடுகிறார் அரங்கன்.

”யம்யம் ஸ்ப்ருஸதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சக்ஷூஷா
ஸ்தாவராண்யபி முச்யதே கிம்புநா பாந்தவாஜநா:”

”பாகவதன் தனது கரங்களால் எதை எதைத் தொடுகின்றானோ, எதை எதைக் கண்களால் பார்க்கின்றானோ, அவைகள் நிலையியற்பொருள்கள் ஆயினும் மோக்ஷத்தையடைகின்றன. அப்படியிருக்க, அவனுக்கு உற்றாரைப்பற்றி கூறவும் வேண்டுமோ?” என்கிறது பராசரஸ்மிருதி.

இத்தகைய பரமபாகவதர் லோகசாரங்கரைக் கருணை கூர்ந்து மன்னித்து, தொட்டு ஆசிர்வதித்தாலேப் போதும் – லோகசாரங்கர் செய்த அபராதம் ஒன்றுமில்லாது போகும். அவரை தன் தோளின் மீது எழுந்தருளப் பண்ணிக் கொண்டுவந்தால் இவரது பாக்கியத்தைக் கூறவும் வேண்டுமோ?. லோகசாரங்கமுனி மீது அரங்கன் எவ்வளவு கருணையிருந்தால் இத்தகைய உயர்ந்ததொரு பரிஹாரம் சொல்லியிருப்பான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளான் அரங்கன். திருப்பாணாழ்வாருக்கும் ஏற்றம் – லோகசாரங்கருக்கும் நிவர்த்தி.

தவறுதனைத் திருத்துவதாகட்டும், திருத்திப் பணிக் கொள்வதாகட்டும், இவனின் பாணியே தனி!

-மேலும் பேசுவோம்- Posted on 26.5.2008.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: