Srirangapankajam

May 26, 2008

PESUM ARANGAN-35

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 6:42 am

தொண்டரடிப்பொடியாழ்வார் மட்டும் திருவேங்கடமுடையானைப் பற்றி பாடியிருந்தால், திருவேங்கடமுடையானும் பதின்மர் பாடிய பெருமாளாக ஆகியிருப்பார். அரங்கனைத் தவிர அவர் யாரையுமே பாடவில்லை. அரங்கன் முதல்வன் ஆனார். பதின்மர் பாடிய பெருமாள் ஆனார். ஆனால் தொண்டரடிப்பொடி அரங்கனடியார்கள் பற்றி பாடியுள்ளார். பாடியுள்ளார் என்பதை விட அவர் காலத்திற்கு பின் வரும் சந்ததியினரை எச்சரித்துள்ளார். ஒருக்கால் திருப்பாணாழ்வார் பற்றி முன்னமேயே அறிந்திருப்பாரோ என்னவோ? சதுர்மறையும் பயின்ற பிராமணர் வகுப்பை சார்ந்த அவர் பாடலைப் பாருங்களேன்!

பழுதிலாவொழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள்!
இழிகுலத்தவர்களேனும் எம்மடியார்களாகில்
தொழுமின் கொடுமின் கொண்மின் என்று நின்னோடும்
ஒக்க வழிபட அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே


மதிள்கள் சூழ்ந்து விளங்கும் பெரிய கோயிலில் கண் வளரும் பெரியபெருமாளே! பிரம்மன் முதல் தங்கள் காலம் வரை நீண்டு விளங்கும் பரம்பரையில் ஒழுக்கக் குறைபாடு இல்லாமல் நான்கு வேதங்களையும் ஓதி வருகின்றவர்களே! ‘இப்போது உள்ள பிறப்பைக் காட்டிலும் இழிந்த பிறப்பு இல்லை என்ற குலத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய உறவினைப் புரிந்து கொண்டு நடப்பதாகயிருந்தால், எனது அடியார்கள்’ என்று பெரியபெருமாளே கருதுவான். ”அப்படிப்பட்டவர்கள் கீழ்குலத்தினைச் சேர்ந்தவர்களானாலும், அவர்களை நீங்கள் வணங்குங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றை அவர்களுக்கும் உபதேசம் செய்யுங்கள். அவர்களுக்குத் தெரிந்தவற்றை அவர்கள் உபதேசிக்கக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.” – இவ்வாறு நீ அருளிச் செய்து உனக்கு சமமான இடத்தை அவர்களுக்கும் கொடுத்தாய் போலும்.

இராமானுஜர் பிராம்மணர். திருக்கச்சிநம்பிகள் வைசியர். ஆயினும் இராமனுஜர் திருக்கச்சிநம்பிகள் சாப்பிட்ட உணவின் சேஷத்தை(மீதமுள்ளதை) உண்ண விரும்பினார். இராமனுஜர் உயிருடன் இருந்தவரையில் இவரால் இது இயலாமற் போயிற்று. அரங்கன் இவரது உள்ளக்கிடக்கையை இராமனுஜர் அர்ச்சை ரூபத்தில (விக்ரஹரூபமாய்) இருக்கும்போது தீர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றார். ஸ்ரீரங்கம் கோவிலில் அத்யயன உற்சவத்தின் போது, தளிகை அமுது செய்யும் சமயம் ஆழ்வார்களுக்குக் கிரமப்படியாகி, ஆச்சார்ய க்ரமம் வரும் போது திருக்கச்சிநம்பிகளுக்கு முதலில் நிவேதனமாகி பின்னர், அதே பிரஸாதத்தை இராமனுஜருக்குக் கண்டருளப்பண்ணுவர்.

திருப்பாணாழ்வார் நெல் வயலிலே கிடந்து பண்ணிசைக்கும் பாணர்கள் குலத்தவரால் வளர்க்கப் பட்டவா;. அரங்கனின் மீது ஆறாத காதல் கொண்டவர். ஆனால் தாழ்மையுணர்வினால ஸ்ரீரங்கம் மண்ணைக் கூட மிதிப்பதற்கு அஞ்சி, காவிரிக் கரையோரம் நின்று ஸ்ரீரங்கம் கோபுரத்தைப் பார்த்து வணங்கி ஆறுதலடைந்தவர். அன்றிலிருந்து இன்று வரை காவிரி நீர்தான் அரங்கன் ஆராதனத்திற்கு. அன்று லோகசாரங்கமுனியெனும் அந்தணர் ஆராதனத்திற்காக குடத்தில் காவிரிநீரை நிரப்பக் காவிரிக்குச் செல்கின்றார். அங்கு திருப்பாணர் கண்ணீர் சிந்தி அரங்கனைத் துதித்து மெய்மறந்து நின்று கொண்டிருக்கின்றார்.    லோகசாரங்கர் குரல் கொடுத்தும் திருப்பாணர் கவனம் திரும்பவில்லை.     சிறிது நேரம் போராடிய லோகசாரங்கர் பொறுமையிழந்து ஒரு சிறுகல் எடுத்து அவர் மேல் எறிகின்றார். அது சற்று வேகமாகப் பட்டு திருப்பாணருக்கு சற்று பலமான அடி. சிறிது ரத்தமும் அடிப்பட்ட இடத்தில் தோய்கின்றது.    ஒருவரை புண்படுத்தி விட்டோமோ? என்று பதறுகிறது லோகசாரங்கருக்கு! இருப்பினும் அரங்கனுக்கு பவித்ரமாக நீர் கொணர்ந்து செல்லப் போகத்தானே தாம் இம்மாதிரி நடக்கவேண்டியதாயிற்று என்ற ஒரு சிறு ஆறுதலுடன் கர்ப்பகிரஹத்தினுள் நுழைகின்றார்!   அங்கு அரங்கனின் நெற்றியில் இரத்தம்!    அங்கு அவன் அடியவரை அடித்த அடி இங்கு இவனைப் பாதித்துள்ளது.   பதறி கதறுகின்றார் லோகசாரங்கர். அவர் கனவில் அரங்கன் அவருக்கு உணர்த்துகின்றர்.      பாபமும் புண்ணியமும் குலத்தால் அல்ல. குணத்தாலேயே என்று!.      திருப்பாணாழ்வாரை தோள் மீது சுமந்து கருவறைக்கு அழைத்து வர ஆணையிட்டு மறைந்தான் அரங்கன்!

அன்று முதல் இன்று வரை அரங்கனுக்கு கனவில் வருவதுதான் அதிகமாகப் பிடிக்குமோ?-மேலும் பேசுவோம்-      Posted on 26.5.2008.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: