எல்லாமே அரங்கனே! என்ற ஒரே கொள்கையில் உறுதியாக நின்ற தொண்டரடிப்பொடியாழ்வார் – அந்த ஸர்வேஸ்வரனை துயிலெழுப்புகின்றார், ஒப்பற்ற திருப்பள்ளியெழுச்சியின் மூலம்.
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான்
கனையிருளகன்றது காலையம் பொழுதாய்
மதுவிருந்தொழுகின மாமலரெல்லாம்
வானவரரசர்கள் வந்து வந்தீண்டி
எதிர்திசை நிறைந்தனர், இவரொடும் புகுந்த
இருங்களிற்றீட்டமும் பிடியோடு முரசும்
அதிர்தலில் அடைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே!
திருவரங்கப் பெரிய கோயிலில் கண்வளரும் பெரிய பெருமாளே! நீ பள்ளி உணரும் பொழுதை அறிந்த சூரியன், கிழக்குத் திசையின் உச்சியிலே உதித்தான். அச்சமயம் மிகுதியான இருளானது மெதுவாக நீங்கத் துவங்கியது. அழகிய காலைப்பொழுது தோன்றத் துவங்கியவுடன், மிகவும் சிறந்த மலர்கள் அனைத்தும் மலர்ந்து தேன் பெருகி நின்றன. விண் ஆளும் தேவர்களும், மண் ஆளும் அரசர்களும் கூட்டமாகத் திரண்டு, உன்னுடைய திருக்கண்கள் நோக்கப் போகும் தெற்குத் திசையில் இருந்தனர். இவர்களுடன் வந்த ஆண் யானைகளும், பெண் யானைகளும், மங்கல வாத்தியங்களும் ஒலி எழுப்பும் போது, அலைகள் நிறைந்த கடலின் இரைச்சல் போன்று எங்கும் ஒலி பரவி உள்ளது. ஆகவே நீ திருப்பள்ளியை விட்டு எழ வேண்டும்.
இந்த திருப்பள்ளிnழுச்சி என்பது ஸ்ரீரங்கத்தில் ”விஸ்வரூபம்” என அழைக்கப்படுகின்றது. காலை 6.15 மணிக்கு இது தொடங்குகிறது. விஸ்வம் என்ற ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. ‘ரூபம்’ என்றால் தோற்றம். விஸ்வம் என்ற வார்த்தையின் எந்த ஒரு அர்த்தத்திற்கும் உண்டான தோற்றத்தினை இந்த ஸேவையின் போது நாம் காணலாம். விஸ்வம் என்பதற்கு அனைத்தையும் தன்னுள் அடக்கியவன் என்ற பொருளும் உண்டு. 108 திவ்வியதேசத்து எம்பெருமான்களும் முதல் நாள் இங்கு எழுந்தருளி, அரங்கனுடன் அந்தர்பவித்து, அவர்களனைவருடன் ஸங்கமித்து ஏகன் ஆன அரங்கனின் சொரூபம் என்பதினால் கூட விஸ்வரூபம் எனலாம். இந்த விஸ்வரூபத்தின் போது அரங்கனின் எதிரில் பூர்ணகும்பம் (காவிரிநீர் நிரப்பப்பட்டது – இந்த குடநீர் திருவாராதனத்திற்கு உபயோகப்படுத்தப்படும்) இருபுறமும் சாமரங்களுடன், அமுதுபாறையின் மேல் வீற்றிருக்கும். ஜய விஜயாள் தாண்டி கோயில் காராம்பசு நின்று கொண்டிருக்கும். இந்த பசுவிற்கு எதிரே கோயிலின் பட்டத்து யானை நின்றிருக்கும். மார்கழி மாதம் தவிர பெரும்பாலான நாட்கள் அரங்கன் கண்மலர்வது இவர்கள் எதிரில்தான். இந்த கோயில் பசுவும், பட்டத்து யானையும் பெரும் பாக்கியம் பெற்றப் பிறவிகள். இவைகள் மிகச்சிறந்த ஸ்ரீவைஷ்ணவப் பிறவிகள். நம் திருக்கோவிலின் பட்டத்துயானையின் பெயர் ‘ஆண்டாள்’ என்பதாகும். இதனைப்பற்றி தனியாக எழுதுகின்றேன். இது சிறப்பாக கைங்கர்யம், பெருமாள் ஸேவை இரண்டையும் அன்வயிக்கின்றது.
சுமார் ஒரு 15 அல்லது 16 வருடங்கள் முன்பு, அப்போதைய இணை ஆணையர், பெருகிவரும் கூட்டம் காரணமாக இந்த ‘விஸ்வரூபம்” ஸேவையினை சற்று முன்னதாக அதாவது அதிகாலை 4.30 மணி முதல் 5.00 மணிக்குள் நடத்தலாமா? என்று கோவிலார்களிடம் கலந்தலோசித்தார். அவ்வமயம் எனது தகப்பனார் இந்த திருப்பள்ளியெழுச்சியிலிருந்து இந்த பாடலையும், திருப்பள்ளியெழுச்சி இதர பாசுரங்களிலிருந்து, ‘கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ?” ”சுடரொளி பரந்தன சூழ்திசையெல்லாம்” என்பனப் போன்ற பலவரிகளையும் மேற்கோள் காட்டி, இவை நம்பெருமாளுக்காகவேயுள்ள திருப்பள்ளியெழுச்சி. எனவே கதிரவன் உதிக்கும் காலைப்பொழுதினைத் தவிர இதர நேரங்களில் இந்த விஸ்வரூபத்தினை நாம் நடத்தலாகாது – இது முறையல்ல’ என்று எடுத்துரைத்தார். இணை ஆணையரும் இந்த நடவடிக்கையைக் கைவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு கூட நிர்வாகம் அதிகமான கூட்டம் வருகின்ற நாட்களில், பெரும்பான்மையான நாட்கள், இந்த விஸ்வரூபத்தினைத் தவிர்க்க ஆரம்பித்தது. பலர் அதிருப்தியினைத் தெரிவித்து, அதன் பின்பு எந்தவித பிரச்சனையுமின்றி இன்று வரை நடந்துவருகின்றது. இந்தத் திருப்பள்ளியெழுச்சி – ‘விஸ்வரூபம்’ எனப்படும் இந்த ஸேவைகாலம் மிகவும் உயர்ந்தது. திருப்பள்ளியெழுச்சியினை மனதிற்குள் சொல்லியபடியே அமைதியாக அரங்கனைக் காணுங்களேன். உங்கள் உள்ளம் மேம்படும். தொண்டரடிப்பொடி காட்டிய வழியில் ‘அளியனென்றருளி உன்னடியார்க்கு ஆட்படுத்தாய்’ என வேண்டுங்கள். அரங்கன் அருள் செய்வான்.
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?
கதிரவன் கணைகடல் முளைத்தனன் இவனோ?
துடியிடையார் சுரிகுழல் பிழிந்துதறி
துகிலுடுத்தேறினர் சூழ்புனலரங்கா!
தொடையொத்த துவளமும் கூடையும் பொலிந்து
தோன்றி தோள் தொண்டரடிப்பொடியென்னும்
அடியனை – அளியனென்றருளி உன்னடியார்க்கு
ஆட்படுத்தாய்! பள்ளியெழுந்தருளாயே!
காவிரி நதியால் சூழ்ந்து விளங்கும் திருவரங்கப் பெரிய கோயிலில் உறையும் ஸ்ரீரெங்கநாதனே! மணம் வீசும் தாமரை மலர்கள் நன்றாக மலர்ந்துள்ளன. எப்போதும் ஒலித்துக்கொண்டுள்ள கடலில் சூரியனும் வந்துவிட்டான். மிகவும் மெல்லிய இடையினை உடைய பெண்களும் தங்கள் சுருண்ட தலைமுடியினை நீர்காயும் வண்ணம் உதறிவிட்டுக் கொண்டு, ஆடைகளை அணிந்து கொண்டு, காவிரிக்கரையில் ஏறத் தொடங்கிவிட்டனர். நன்கு நேர்த்தியாய் தொடுக்கப்பட்டத் துளசி மாலையும், அழகான பூக்கூடையும் வைக்கப்படும் தோளினையுடைய ”தொண்டரடிப்பொடி” என்னும் பெயர் கொண்ட அடியேனை, உனக்குத் தொண்டு செய்வதற்கு ஏற்றவன் என்று ஏற்றுக்கொண்டு, உன்னுடைய அடியார்களுக்கு அடிமையாக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்குத் திருப்பள்ளி எழவேண்டும்.
-மேலும் பேசுவோம்- Posted on 24.5.2008.