Srirangapankajam

May 24, 2008

PESUM ARANGAN-33

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:04 pm

மற்றுமோர் தெய்வமுண்டோ? மதியிலாமானிடங்காள்!
உற்ற போதன்றி நீங்கள் ஒருவனென்று உணரமாட்டீர்!
அற்றமேலொன்றறியீர் அவனல்லால் தெய்வமில்லை
கற்றினம் மேய்த்தஎந்தை கழலிணை பணிமின்நீரே.

தெளிவாக அறியும் ஞானம் இல்லாத மனிதர்களே! பெரியபெருமாளை அல்லாது ஒரு பரம்பொருள் சரணடைவதற்கு என்று வேறு யாரும் உண்டோ? உங்களுக்கு ஒரு ஆபத்துக் காலம் வரும்போது அல்லாமல் மற்ற நேரங்களில் இவனைத்தவிர வேறு எந்த கடவுளும் இல்லை என்று உணராமல் உள்ளீர்கள். மிகவும் மேலான வேதப்பொருட்களை நீங்கள் அறியவில்லை. அவனைத் தவிர சரண் அடைவதற்கு வேறு பரம்பொருள்
யாரும் இல்லை எனவே இதனையுணர்ந்து பசுக்கூட்டங்களை மேய்த்த என்னுடைய கண்ணபிரானாகிய பெரியபெருமாளின் இரண்டு திருவடிகளையும் நீங்கள் சரணம் என்று அடைவீர்களாக!.

நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோரருள் தன்னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பிமீர்காள்! கெருடவாகனனும் நிற்க
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே!

பல்வேறு இடங்களிலும் பலவித குணங்களுக்கான (தாமஸ, ரஜோ) தேவதைகளை உண்டாக்கினான். அவனையே அடைந்து நல்லகதி அடைய விருப்பம் உள்ளவர்கள், தாங்கள் எண்ணிய நிலையினை அடைவதற்காக தன்னுடைய ஈடு இணையற்ற ‘தயை’ என்னும் குணத்தினால் திருவரங்கம் என்பதைக் காண்பித்தான். பெரியபெருமாளைத் தவிர மற்ற விஷயங்களில் எதன் மூலமாவது எதையாவது அடைந்து,
அதனால் நிறைவு பெற்று விட்டதாக நினைக்கும் மனிதர்களே! நான் சொல்வதைக் கேட்கிறீர்களர்? பெரிய திருவடியாம் கருடவாகனத்தைக் கொண்டுள்ள எம்பெருமாள் உங்கள் அருகில் நிற்கும்போது, நீங்கள் மூதேவியின் அருகில் சென்று அவள் தரும் செல்வத்தினை எதிர்பார்த்து நிற்கின்றீர்களே!

மேலே கண்ட இரண்டு பாசுரங்களிலும் பரம்பொருள் அரங்கனேயென்றும், ஈடு இணையற்ற கருணையுடையவன் என்கிறார். பெரியபெருமாளை நாம் மறப்போமாகின், இழப்போமாகின், வாழ்வில் அனைத்தையுமே இழந்தவராவோம்.!

ஆழ்வார் கூறியது போல் அரங்கனும் அவனது தயையினால், தன்னடியார் எவரையும் இழக்க விரும்பமாட்டான். வாஞ்சையுடன் தன்னருகில்தான் வைத்துக் கொள்வான். ஏதேனும் தவறு செய்தாலும், மடியினைக் கன்று முட்டி வலித்தாலும் கன்றுக்கு பால் சொரியும் பசு போல, அவன் அன்போடு திருத்தவே பார்ப்பான்!

அந்த அர்ச்சகர் ஸ்ரீரங்கநாதரிடத்து கைங்கர்யம் பண்ணுகின்றவர். ஒரு நாள் மதியம் பூஜையின்போது சுற்றுக்கோவில்களில் நிவேதனம் செய்யப்போனவர், சேரகுலவல்லி ஸந்நிதி, துலுக்க நாச்சியார் ஸந்நிதி என வரிசையாக நிவேதனம் முடித்து, மூலஸ்தானம் திரும்புகையில் ஒரு விபரீத எண்ணம் உண்டாயிற்று. சாதாரண மானுடர்களான எங்களில் சிலருக்குதான் காமம் மிகுந்து ஒருவருக்கு மேல் பெண்டிர்தொடர்பு
கொள்வர்! உனக்கு எதற்கு இவ்வளவு நாச்சிமார்கள்? மூலஸ்தானத்தில் உபயநாச்சிமார்கள், தனிக்கோவில் நாயகி ஸ்ரீரெங்கநாயகி, சேரகுலவல்லி, கமலவல்லி, துலுக்கநாச்சியார், ஆண்டாள்…? என்ற சிந்தனையுடன் அன்றைய மதியம் பூஜையை முடித்து விட்டார்.

இரவு பணிமுடிந்து தனது வீடு திரும்பி கண்ணயர்ந்தார். அவரது கனவில் அரங்கன் அழகிய குருவாயூரப்பனைப் போன்று! அர்ச்சகா; அப்படியே அந்த அரங்கக்
குழந்தையை வாரிஎடுக்கின்றார். தனது வீடு திரும்பி பழங்கள், வெண்ணை, அன்று சமைத்த விசேஷபதார்த்தங்களையெல்லாம் ஊட்டுகின்றார். மயக்கும் புன்சிரிப்புடன் அரங்கன் அனைத்தையும் ஏற்கின்றான். தன் சுற்று வட்டாரத்திலுள்ள நெருங்கியவர்கள் வீட்டிற்கு எல்லாம் அரங்கனை அழைத்துச்செல்கிறார். அரங்கன் தன் இன்முகம் மாறாது அவர்கள்தம் உபசரிப்பையெல்லாம் ஏற்கின்றான். தனது நெருங்கிய நண்பரான வேற்றுமதத்தைச் சார்ந்த நண்பர் ஒருவரது வீட்டிற்கும் அழைத்துச் செல்கின்றார். அவர்
சற்றே பொருட்படுத்தாமல் ஏதோ ஒரு காரியத்திலிருக்கின்றார். இந்த அர்ச்சகர் அந்த நண்பர் மீது கோபித்துக்கொண்டு அந்த அரங்கக்குழந்தையைத் தோளில் சாற்றியவாறு கீழ உத்திர வீதியின் வழியாக வெள்ளைக்கோபுரம் உள்நுழைகின்றார்.

வெள்ளைக்கோபுரம் தாண்டி ‘தவிட்டறைவாசல்” எனும் சிறிய நுழைவு செல்லும்போது ஆதிசேஷன் பிரம்மாண்டமாக சினம்கொண்டு படுமெடுத்து நிற்கின்றது. விஷநாக்குகளால் விஷத்தினை அக்னிபோன்று அந்த அர்ச்சகர் மேல் கக்குகின்றது. அதுயனைத்தும் புஷ்பமாக மாறி இவர் மேல் விழுகின்றது. அந்த அர்ச்சகருக்கு ஒன்றும் புரியவில்லை. அரங்கனைப் பார்த்து கேட்கின்றான், “ஆதிசேஷனுக்கு எதற்காக இத்தனை சினம்?” என்று!. அரங்கன் நமட்டுசிரிப்புடன் என்னை மதியாதயொருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றாய் அல்லவா? அதுதான் இதன் சினத்திற்கு காரணம் – நான் மட்டும் உன் தோளிலில்லாமலிருந்தால் நீ தொலைந்தாய்! பஸ்பந்தான்! சரி! விடு! நீ கவலைப்படாதே! அது தானாகவே சரியாகிவிடும்! நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போ! என்கிறார்.

அர்ச்சகரும் நாழிகேட்டான் வாசல் உள் நுழைந்து சேனை முதல்வர் சந்நிதி எதிரேயுள்ள நான்குகால் மண்டபத்தின் வழியே உள்ளே செல்லும் போது அரங்கன் அந்த நாலுகால் மண்டபத்தில் சற்றே நிற்கும்படி சொல்கிறான் – அர்ச்சகர் நின்றார்.

எப்படியிருந்தது? என்று வினவினான் அரங்கன். அர்ச்சகருக்கு நா தழுதழுத்தது. வார்த்தைகள் வரவில்லை. அரங்கன் அன்பே உருவான ஒரு குழந்தையாக அவரிடம் விளையாடியதை எண்ணி ஆனந்தகண்ணீர் உருண்டோடியது. அப்போது அரங்கன் சொல்கிறான், ”ஏ பட்டரே! உம்மிடம் எப்படி நான் குழந்தையாக விளையாடினேனோ அதே போன்றுதான் ‘சுரதாணி’ என்ற இந்த துலுக்க நாச்சியாரோடும் விளையாடிக்
கொண்டிருந்தேன்! கோவிலார்கள் என் விக்ரஹத்தை யாசித்துப் பெற்ற பின்பு, என்னை விட்டு பிரியமுடியாமல் நான் வருவதற்கு முன்பே அந்த துலுக்கநாச்சியார் இங்கு வந்து சேர்ந்தாள். இப்போது நீ நின்று கொண்டிருக்கின்றாயே இதே நாலுகால் மண்டபத்தில்தான் இவள் என் பிரிவை தாங்கமாட்டாமல், ஒரு தாயின்
பரிவோடு, குழந்தையை இழந்த தாயின் உயிர்தவிப்போடு, இதே இடத்தில் தன்னுயிரை இழந்தாள்! இதேப் போன்றுதான் ஒவ்வொருவரும் ஒரு தாயின் பரிவோடும், சகோதரி போன்ற வாஞ்சையுடனும், சுத்தமான அன்போடும் என்னைச் சேர்ந்தனரேத் தவிர நீ மதியம் நினைத்தாயே! காமம்! அது கொண்டு என்னைச் சேரவில்லை. காமம், குரோதம் இத்தியாதிகளெல்லாம் உங்களுக்குதான்! புரிந்ததா? என்றார். தூக்கத்திலேயே வியர்த்தது அந்த அர்ச்சகருக்கு! கனவு கலைந்தது! அதன் பிறகு தூக்கமா வரும் அவருக்கு? பொழுது எப்போது விடியும் எனக் காத்திருந்தார். அவனது திருவடியைப் பிடித்துக் கொண்டு வருந்தி கண்ணீர் சிந்தினார். தன்னைத் தவறாக நினைத்த அந்த அர்ச்சகனை அன்போடு திருத்தினான் அரங்கன்! அந்த மதிகெட்ட அர்ச்சகன் யாரென்று உங்களால் யூகிக்க முடிகின்றதா? ஆம்! நானேதான்!.

உள்ளத்தேயுறையும்மாலை உள்ளுவானுணர்வொன்றில்லா
கள்ளத்தே நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதியென்று
வெள்கிப்போய் என்னுள்ளேநான் விலவறச் சிரித்திட்டேனே.

(எப்போதும் உள்ளத்தில் வாசம் செய்கின்ற பெரியபெருமாளை அறிந்து கொள்வதற்கான உயர்ந்த அறிவு எதுவும் இல்லாத கள்ளனாகிய நான், உனக்கு அடிமைத்தனம் செய்வதற்கு உரிய வேடம் அனைத்தையும் தரித்துக்கொண்டுள்ளேன். சிந்திப்பவர்களின் சிந்தனை முழுவதும் நீ அறிவாய் என்று அறிந்துகொண்டு, நான் வெட்கப்பட்டு உன்னை விட்டு விலகிச் சென்று, என்னுடைய போலித்தன்மையினை நினைத்து விலா எலும்பு முறிந்து போகும்படி சிரித்தேன்!)

-மேலும் பேசுவோம்- Posted on 21.5.2008.

From: Rajadesikan Srinivasan
Date: May 22, 2008 4:27 PM
Subject: Pesum Arangan
To: Murali Battar Rangaraja

Adiyen Swami…

அரங்கனின் வாத்சல்யதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
சிலிர்க்க வைத்த அனுபவம்.

மேலும் அர்ச்சைக்கும் அர்ச்சகனுக்கும் நடுவில் சர்ச்சையேது?

எண்ணத்தில் தவறு என்று நீர் சொன்னலும், எண்ணிய பொருள் நம்பெருமாள் ஆனதால் திண்ணமாக சொல்கிறேன்..தேவரீர்பால் தேவனுக்கு உள்ள காருண்யமே கனவின் உட்பொருள்.

நீர் முன்னமே கூறியது போல்,
அரங்கனே கூறவில்லயா?

“என்னடியார் அது செய்யார்.. செய்தாரேல், நன்று செய்தார்…
!”

தாஸன்
,

இராஜாதேசிகன்


S.RajaDesikan
Ph: 99400 18540

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: