Srirangapankajam

May 21, 2008

PESUM ARANGAN-32

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:51 pm

ஸ்ரீமத் பகவத் கீதையில், கண்ணன்,

அபி சேத் ஸூதுராசாரோ பஜதே மாம் அனன்யபாக்
ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோஹி ஸ:
க்ஷப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச்சாந்திம் நிகச்சதி
கௌந்தேய ப்ரதிஜானீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி.

மிக்க கெட்ட நடத்தையுள்ள மனிதன் கூட ஸர்வேஸ்வரனான என்னையே கதியென்று என்னை பஜிக்க (பூஜிக்க) ஆரம்பித்தானேயாகில், அவனை நல்ல ஆசாரமுள்ள ஸாதுவென்ற உணரவேண்டும். ஏனெனில் நல்ல காரியத்தைச் செய்ய அவன் எத்தனித்துவிட்டான். வெகுசீக்கிரத்தில் தர்மாத்மாவாக ஆகி, நித்யமான மோக்ஷ சுகத்தையடைகிறான். ”ஹே! அர்ஜூனா! ஸர்வேஸ்வரனான என்னை பஜிப்பவன் ஒரு நாளும் கெட்டுவிட மாட்டான் என்பதை நீ பிரதிக்ஞைச் செய்! என்று அர்ஜூனனைப் பார்த்து ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சொல்கின்றார்.

இங்கு பகவான் தான் பிரதிக்ஞை செய்தால் ஒரு சமயம் பிரதிக்ஞையை விட்டு விடுமோ என்றஞ்சி, தன் பக்தன் பிரதிக்ஞை செய்தால் ஸத்யமாகத் தான் செய்துதானே ஆகவேண்டும் என்று திட ஸங்கல்பத்தினால்
அர்ஜூனனைச் செய்யச் சொல்கிறாh;.

பக்தனுடைய வாக்கைக் காப்பாற்ற தன்னை பூஜிப்பவர்களை, தன் நாமாவினை அர்ப்பணிப்போடு ஜபம் செய்கிறவர்களை, நாம சங்கீர்த்தனம் செய்பவர்களை காப்பாற்றியேத் தீருவான். எத்தனைத் தப்பு செய்தாலும், அவன் செய்தத் தப்பை உணருவானேயாகின், உணர்ந்து வருந்துவானேயாகின், மெய்வருந்தி கலங்குவானேயாகின், கலங்கி கதறுவானேயாகின் — இவன் பதறி வருவான்! பாசமுடன் நெருங்குவான்! மாசற்றவனாய் மாற்றுவான்! தன் அன்புக்கு, அருளுக்கு இலக்காக்குவான்!

அரங்கன், அன்று கீதையில் சொன்ன வாக்கை, தொண்டரடிப்பொடிகளின் வாழ்வில் நிகழ்த்திக் காட்டினார். அன்பே அரங்கன் ஆனாதல் ஒருபடி மேலே போய் தன் பக்தனைத் திருத்திப் பணிக்கொள்ள, தானே தாசி வீட்டின் கதவையும் தட்டுகின்றான். தன் பொன்வட்டிலையும் கொடுக்கின்றான்!.

இங்கு அரங்கனின் அன்பினை உணர்த்தும் இன்னொரு வைபவம். திருச்சியினருகே ஜீயர்புரம் என்றொரு ஊர். காவிரி கரையோரம் அமைந்த கவின்மிகு கிராமம். அந்த ஊரில் ஒரு வயதான அம்மையார் தன் பேரனுடன் வசித்துவருகின்றாள். பேரனின் பெயர் ரங்கன்! இருவருமே அரங்கனின் மேல் அளவற்ற பக்தி கொண்டவர்கள். ஒரு சமயம் முடிவெட்டிக் கொள்ள காவிரிக்கரையோரமாக ரங்கன் செல்கிறான். காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. முடிவெட்டிக்கொண்டு முழ்கிய அவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான். ரங்காவென்று கதறுகின்றான். அவனை ஸ்ரீரங்கத்தில், அம்மாமண்டபத்தில் கரை சேர்க்கின்றார் அரங்கன். அவன் இவர் கிருபையை நினைத்து அரங்கனது சன்னிதானம் சென்று கண்ணீர் மல்க தரிசிக்கின்றான். இங்கு பேரன் வந்து சேராத அம்மையார் ”ரங்கா!ரங்கா!”வென்று கரையோரமாகப் பேரனுக்கு பசிக்கப்போகிறதே என்று பழையசோறும் மாவடுவும் வைத்துக் கொண்டு, கூப்பிட்டுக்கொண்டேயிருந்தாள். ஒரளவுக்கு மேல் பொறுக்கமாட்டாத அரங்கன் சவரம் செய்த முகத்துடன், ஈர உடையுடன், அம்மையாரிடத்து பிரசன்னமானர். உடை மாற்றியவுடன், தான் கொண்டு பழையசோற்றையும், மாவடுவினையும் அம்மையார், அவனுக்கு தன் கையாலேயே ஊட்டிவிடுகின்றார். வெள்ளம் வடிந்து அம்மையாரின் அசலான பேரன் வரும் வரையில் அரங்கன் அம்மையாருடனேயே அவளுடைய பேரன் ரூபத்திலிருந்து அம்மையாருக்கு பேருதவியாக இருக்கின்றான். அசல்பேரன் வந்து பாட்டியென விளித்ததும் இவன் மறைகின்றான். உண்மையுணர்ந்த இருவரும் மெய்யுருகுகின்றனர்.

இது நடந்த கதை! இன்று வரை இந்த சம்பவத்தினையுணர்த்தும் வகையில் பங்குனி பிரும்மோற்சவமன்று அரங்கன் ஜீயர்புரம் வரை வருகின்றார். இங்கு காவிரிக்கரையோரம் ஒரு தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருக்கும்! அதற்கு ‘அம்மையார் தண்ணீர் பந்தல்’ என்று பெயர். இங்கு இன்றும் தயிர்சாதமும் மாவடுவும் பெருமாளுக்கு நிவேதனமாகின்றது!

அரங்கன் என்றுமே பக்தர்தம் மெய்யன்புக்கு அடிமை!

-மேலும் பேசுவோம்- Posted on 20.5.2008.

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: