Srirangapankajam

May 20, 2008

PESUM ARANGAN-31

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:50 pm

ஆழ்வார்களில் பெரியாழ்வாருக்குயடுத்து நந்தவன கைங்கர்யம் செய்து, பூமாலைகளைக் கட்டி அரங்கனுக்கு சூட்டியழகுப் பார்த்தவர் விப்ரநாராயணன்யெனும் மண்டங்குடியில் அவதரித்த ஒரு சோழிய அந்தணர். பெரியாழ்வார்க்கு வேதஞானம் அவனளித்தது. இவர் முறையாக பயின்று சதுர்மறையுமறிந்த உத்தமர். புஷ்ப கைங்கர்யமே இந்த புவியுலகில் பிறந்ததின் பயனென்று சிரத்தையுடன் நந்தவனத்தினை அழகுற பராமரித்து செய்து வந்தார். இவரது நந்தவனம் நந்தகுமரன் ஆனந்தமாக வசிக்கும் நந்தவனமாக அனைவரின் மனத்தையும் பறித்தது. இவரின் தேஜஸ் பலரை மயக்கியது. தேவதேவியெனும் அழகு தேவதைத் தாசியும் இவ்வைராக்யசீலரை மயக்கத் திட்டமிட்டு, சில காலங்கள் அவரிடத்தே கஷ்டபட்டு, தன் திட்டத்தில் வெற்றியும் பெற்றாள்!. கடுந்தவம் செய்த ரிஷிகளே பலர் இதில் வீழ்ந்தபோது இவர் எம்மட்டும்? அவளே கதியானார். மதியிழந்தார்! கைங்கர்யம் மறந்தார்! தான் கொண்ட பொருளுமிழந்தார். பொருளில்லாத இவரை ஒருநாள் வெளித்தள்ளினாள் தேவதேவி!. தன்னை மறந்த, தான் செய்துவந்த கைங்கர்யத்தை மறந்த, விப்ரநாராயணனை அரங்கன் மறக்கவில்லை. தன்னிடமிருந்த பொன்வட்டில் ஒன்றினையெடுத்தான். தாசியின் கதவைத் தட்டினான். விப்ரநாராயணன் கொடுக்கச்சொன்னார் என்று அவளிடம் தன் பொன்வட்டிலைக் கொடுத்தான். நீ யார்? என தாசி வினவ, தான் அழகிய மணவாளன் என்றும், அவரின் தூதன் என்றுமுரைத்தான். விப்ரநாராயணரிடத்து தாசி வரச் சொன்னாள் எனக்கூறி மறைந்தான். காமுற்றிருந்த இவரும், பொன்வட்டில் கண்டு இன்புற்றிருந்த, தேவதேவியுடன் சுகித்திருந்தார்.

அடுத்த நாள், அரங்கனது பொன்வட்டில் காணாமல் திக்கித்துப் போயினர் கோவிலார்கள். சோழமண்டலமே அதிர்ந்தது. தாசியின் வீட்டில் பொன்வட்டில் கண்டதை அரசனிடம் தெரிவித்தாள் அவளின் சேடி!. இருவரும் அரசனின் இரும்புபிடிக்குள்! விப்ரநாராயணரைக் காவலில் வைத்து இரவு கண்ணயர்தான் அரசன். அவனது கனவில் அரங்கன்! ”விப்ரநாராயணன் சார்பில் பொன்வட்டில் யாமே தந்தோம்! அவன் குற்றமற்றவன் – விடுவித்துவிடு’ என்றான். வியர்த்தான் அரசன். விப்ரநாராயணரிடத்து பணிந்து போற்றி அவருக்கு எல்லா மரியாதைகளும் செய்து அவரது நந்தவனத்தில் கொண்டுவிட்டான். சொல்லித் திருந்துபவர்களை விட, பட்டுத் திருந்தியவர்களின் மனம் நன்கு பக்குவப்படும்.
இவர் பட்டுத் திருந்தியவர்! இவர் பிறவியெடுத்ததின் பயனை, அரங்கன் அவருக்கு உணரவைத்தான்.

”உபதேசத்தாலே மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும்”
என்கிறார் பிள்ளைலோகசார்யர் ஸ்ரீவசனபூஷணத்தில்.

அவனது அருளையுணர்ந்த விப்ரநாராயணர், உருண்டு, புரண்டு
அழுது அரங்கனிடத்துக் கதறினார். இனி எவராலுமே கெடுக்க முடியாத, வைராக்ய சீலரானர். திருமாலை எனும் 45 பாசுரங்கள் மற்றும் திருபள்ளியெழுச்சி எனும் 10 பாசுரங்கள் அரங்கன் மீது பாடினார். அரங்கனைத் தவிர வேறு எவரையும் இவர் பாடவில்லை. இவரைப் பொறுத்த மட்டில் திருவரங்கத்துக்கு ஈடு பரமபதம் கூட கிடையாது. இவரது திருமாலை அறியாதார் திருமாலை அறியார்; என்று ஒரு சொல் வழக்குக் கூட உண்டு. அவரது நந்தவனம் மீண்டும் பூத்துக்குலுங்கியது. அவரது தொண்டு தொடர்ந்தது. அரங்கனது தொண்டர்களுக்கும் தொண்டுகளுக்கும் இவர் அடிமையாகயிருக்க விரும்பினார். அதனால் இவர் தொண்டரடிப்பொடி என அழைக்கப்பெற்றார்.

காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற
ஆவலிப்புடைமைக் கண்டாய் அரங்கமா நகருள்ளானே!

(திருவரங்கப் பெரியபெருமாளே! பிரளயம் ஏற்பட்ட காலத்தில் இந்த உலகினைக் காப்பதற்காக அதனை உன் வயிற்றினுள் விழுங்கி வைத்திருந்து, பின்னா; ஆபத்து நீங்கிய பின் மீண்டும் உலகத்தினை வெளிக்கொண்டு வந்தவனே! உன்னுடைய திருநாமத்தினையறிந்தவர்கள் என்ற ஒரே காரணத்தினால் உண்டான கர்வத்தின் விளைவாக – எங்களுடைய ஐந்து புலன்களையும், எந்தவிதக் கட்டுபாடுமின்றி அலையவிட்டு, அப்படி அலையவிட்டதால் ஏற்பட்ட பாவங்களை நாங்கள் உனது திருநாமத்தின் சக்தியினால், உதறித்தள்ளி, அதனால் வெற்றிமுழக்கம் செய்து யமனுடைய தூதர்களின் தலைகள் மீதே கால்களை பதித்து நடக்கின்றோம்)

இதில் தாம் புலன்களால் செய்த பாவங்களை நினைக்கின்றார். அவனது திருநாமத்தைச் சொன்ன சக்தியினால்,
நாம பக்தியினால் பாவங்களைப் போக்கும் வழியையும் சொல்லித் தருகின்றார்.

-மேலும் பேசுவோம்- Posted on 19.5.2008

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: