Srirangapankajam

May 11, 2008

PESUM ARANGAN-26

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:51 pm

அரங்கன் ஒவ்வொரு செயலையும் எவ்வாறு நேர்த்தியாக செய்வது என்பதை நன்கறிந்தவன் மட்டுமல்ல அதனை யார் மூலமாக செய்வது, எப்போது செய்வது என்பதனையும் முழுதுமறிந்தவன். ஸ்ரீரங்கத்தில் இப்போதுள்ள இராஜகோபுரம் ஒரு காலத்தில் மொட்டை கோபுரமாக வெகுகாலமாகயிருந்தது. அரங்கன், 44வது பட்டம் அஹோபிலமடத்து அழகியசிங்க ஜீயரின் கனவில் தோன்றி, கட்டுமாறு பணித்தான். ஜீயருக்கோ தள்ளாத வயது!. ஆயினும் அவன் ஒன்றை பணித்தப் பின் மறுப்பது இயலுமா? தலைக்கட்டுவது அவனன்றோ? எத்தனையோ தடைகளை இந்த கிழவர் ஜீயர் தகர்த்தெறிந்து அற்புதமாக நாட்டினார் 13 நிலைகள், 13 கலசஙகளுடன், 235 அடி உயரத்தில் ஒரு உலகப் பிரசித்திப் பெற்ற இராஜகோபுரத்தை! இந்த இராஜகோபுரம் கட்டும் வரை அவரது சுறுசுறுப்பு நாம் எவரிடமும் காணவியலாது. அடிக்கடி அடியேன் அந்த வழியே போகும்போதெல்லாம் அவர் லிப்டில் கம்பீரமாக மேலும் கீழும் அலைந்ததைக் கண்டிருக்கின்றேன்! எங்கிருந்து அவருக்கு இந்த தெம்பும் பலமும் வந்தது? பல கோடி செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு யார் இவருக்கு திடமளித்தார்கள்? இந்த இராஜகோபுரப் பணி முடியும் வரை அவர் நன்கு திடமாயிருந்து, பல பிரச்சனைகளை சமாளித்து, சம்ப்ரோக்ஷணத்தையும் கண்டு களித்து, பின் சில வருடங்களிலேயே அவனடியடைந்தார். அவன் ஒன்றை நினைத்தப் பின்பு தடுப்பதென்பது முடியுமோ? அவன் ஒன்றை தடுப்பது என்று முடிவெடுத்தபின் முடிப்பதென்பது சாத்தியமோ?

இந்த மொட்டை கோபுரம் ஏன் கடந்த பல நுர்ற்றாண்டுகளாக அப்படியேயிருந்துள்ளது?

பல இராஜாக்கள், பற்பல நிர்வாகம் மாறிய போதும் இதனை ஏன் கட்ட முயற்சிக்கவில்லை?

இந்த ஜீயரே, சற்று இளமையாகயிருந்தபோது கட்டளையிடாத அரங்கன்
வயோதிக பருவத்தில் அவருக்கு ஆணையிட்டது ஏன்?

இந்த கேள்விக்கெல்லாம் பதில் அவனேயறிவான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! எப்போது, எங்கு, யாரைக் கொண்டு ஒரு செயலை செய்யவேண்டுமோ அதனைத் திட்டமிட்டு தன்னருளாலே தானே நடத்திக்கொள்வான் இவன்! இவன் “சுயமேவகார்யயிதி” தன் கார்யத்தினைத் தானே நடத்திக்கொண்டு விடுவான். காய் நகர்ததி கார்யம் சாதிப்பதில் இவனுக்கு நிகர் இவன்தான்! வீபடணன் இவனை இலங்கைக்குக் கொண்டு போகும் ஆசையில்தானே அயோத்தியிலிருந்து ஆசை ஆசையாய் தூக்கி வந்தான். உபயகாவேரியின் மத்தியில் ஸ்ரீரங்கம் வந்தமர்ந்ததும் என்னவாச்சு? அவனை சமாதானப்படுத்தி இலங்கைக்கு அனுப்பிவிட்டான்!

”ஆமாறறியும் பிரானே! அணியரங்கத்தே கிடந்தாய் –
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்! இருவாட்சிப்பூச்சூட்டவாராய்”

-மேலும் பேசுவோம்- Posted on 10.5.2008.

Blog at WordPress.com.

%d bloggers like this: