Srirangapankajam

May 10, 2008

PESUM ARANGAN-25

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:30 pm

ஒரு ஸ்ரீவைஷ்வணின் குணம் எவ்வாறு இருக்கும்;? நம் கண்ணத்தில் ஒருவர் பலமாக அறைந்தார் என்றால் ஐயோ! அடித்தவனது கை வலித்திருக்குமே!
என்று துக்கிப்பானாம். கண் பார்வை பறிபோக காரணமாயிருந்த அந்த நாலூரானும் நற்கதி பெற வேண்டினாரே கூரேசர்!. இதுதான் ஸ்ரீவைஷ்ணவம்!. இது ஆணவமில்லாத ஒரு அர்ப்பணிப்பு! பணிவு! அமைதி! தவம்!.

தனக்கு கருட வாஹனராய், உபயநாச்சிமார் ஸஹிதமாய், சங்கு சக்கரதாரியாய் ஸேவை சாதித்த பெருமாளை காட்சி தந்த சில நிமிடங்கள் பரவசப்பட்டு பூரித்து நின்றார் இப்பெரியவர். சில நிமிடங்கள் கூட இந்நிலை நீடித்திருக்காது! பெருமாளின் இந்த திவ்ய மங்கள சொரூபத்தினைப் பார்த்து ஏதாவது கண் திருஷ்டி ஏற்பட்டால் என்ன செய்வது? ஏதேனும் தீங்கு இதனால் நேர்ந்து விடுமோ? என்று அதீதமாக ஒரு தாயின் பரிவுடன் நோக்குகின்றார். ஸர்வேஸ்வரனுக்கு, ஸர்வவல்லமைப் படைத்தவனுக்கு இதெல்லாம் ஏற்படுமா? என்றெல்லாம் சிந்திக்கவில்லை அவர்! தான் ஏறி அமர்ந்த பட்டத்து யானையின் மணிகள் இரண்டை பிடுங்குகின்றார்!!

”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம் – மல்லாண்ட திண்தோள்
மணிவண்ணா! – உன் சேவடி செவ்வி திருக்காப்பு!”

என்று பகவானுக்கு பொங்கும் பரிவுடன், பனித்த கண்களுடன், இரம்மியமான குரலுடன், காப்பு பாடலை, பல்லாண்டை தாளம் போட்டு பாடத் தொடங்கி விட்டார். பகவானுக்கு பல்லாண்டு பாடிய தாயின் பரிவினால், பெரிய ஆழ்வாராக, பெரியாழ்வாராக, சதா எப்போதும் விஷ்ணுவினைச் சித்தத்தில் கொண்ட, விஷ்ணுச்சித்தர், மாறினார். . எம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் நிலைத்திருக்க வேண்டுமென்று பல்லாண்டு பாடியதால் ”பெரியாழ்வார்’ என வழங்கும் பேறுபெற்றார் என்கிறது உபதேச ரத்ன மாலை.!

எந்த குருவினையும் அண்டாமல் இவருக்கு வடபத்ரசாயியே, பெரியபெருமாளே நாவினில் வந்தமர்ந்து நிர்ஹேதுக பகவத் கிருபையினாலே சகல வேதத்தின் ஸாரத்தையும், இதிகாசங்களையும் மேற்கோள்கள் காட்டி,

ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் முத்த்ருத்ய புஜமுச்யதே !
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் !!

என்று இதிஹாசங்கள் சத்யமாகக் கூறிய ஆதிமூலம் ‘கேசவனே’ என்று ஸ்தாபித்து, அவன் ஒருவனையே உபாயமாக பற்ற வேண்டும்! என்று
உறுதியாகக் கூறினார். அரசவையின் தோரணத்தில் கிழியாக வைக்கப்பட்ட தனம் தாங்கிய பொற்கிழி அவரிடத்து அவர் கருத்துக்கு ஆமோதித்து தாழ்ந்தது. ஆழ்வாரும் விரைந்து கிழியறுத்தார். இம்மாதிரி யாரையுமே அண்டாமல், வேத, இதிகாச, சாஸ்திரஞானமடைந்ததினால் இவா; ‘பெரியாழ்வார்’ ஆனார்.

”சீமாலிகனவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய் –
சாமாறு அவனை நீயெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் –
ஆமாறறியும் பிரானே! அணியரங்கத்தே கிடந்தாய் –
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்! இருவாட்சிப்பூச்சூட்டவாராய்”

(மாலிகன் என்னும் பெயருடைய அசுரர்களின் தலைவன் என்று விளங்கியவனோடு நீ தோழமைக் கொள்ளும்படியான சாமர்த்தியம் உடையவனே! பின்னர் அந்த மாலிகனை அழிக்கும் வழியினை நீ யோசனை செய்து சக்கரத்தினால் அவனது தலையினைத் துண்டித்தவனே!
”இதனை எவ்வாறு செய்வது” என்று ஒவ்வொரு செயலுக்கும் அதனைச் செய்யும் வித்தையினை அறிந்துள்ள பெருமாளே! அழகுள்ள திருவரங்கப் பெரியகோவிலில் கண்வளர்கின்றவனே! உன் மீது அன்புள்ள என்னுடைய துக்கத்தினைப் போக்கினவனே! இருவாட்சிப் பூவினை சூட்டிக்கொள்ள நீ வரவேண்டும்!)

இதில் ‘ஆமாறு அறியும்” – ஒவ்வொரு செயலையும் எவ்வாறு நேர்த்தியாகச் செய்வது என்னும் முறையறிந்தவர்; என்று அரங்கனின் குணத்தினைச் சரியாக குறிப்பிடுகின்றார். . எந்த ஒரு காரியத்தினையும் நாம் அவனையே தஞ்சமெனப் புகுந்து முறையிட்டால் போதும். தலையிட்டு சரியான பாதையில் நடத்தித் தரவேண்டியப் பொறுப்பு அவனுடையதாகிறது!.

-மேலும் பேசுவோம்- Posted on 8.5.2008.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: