Srirangapankajam

May 8, 2008

PESUM ARANGAN-24

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 11:25 pm

தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனை – திருமாதுவாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய் –
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள்தாம்
ஈட்டம் கண்டிடக்கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே!

(நம்முடைய முயற்சியினால் தேடி அடைவதற்கு மிகவும் அருமையானவனும், தன்னை அடைந்தவர்களக்கு மிகுந்த பலனைக் கொடுப்பவனும், தேன் போன்று இனிமையும் குணமும் உள்ளவனும், திருவரங்கத்தில் வாசம் செய்பவனும், பெரியபிராட்டியார் பிரியாமல் இருப்பதற்கு உகந்ததாய், எப்போதும் வாடாத மணம் பொருந்திய மாலையினைக் கொண்டுள்ள திருமார்பினையுடைய பெரியபெருமாளை – பல்லாண்டு பாடி, அவன் மிகுதியான அன்பு கொண்ட மனதினையுடையவராய், அதனால் ஆடுவதில் ஈடுபட்டு, அந்த ஆட்டத்தினால் சோர்வு ஏற்பட்டு, அதனை நீக்குவதற்காக அவனை, அவன் நாமங்களைச் சொல்லி அழைத்து மெய்மறந்து நிற்கும் அவனுடைய உண்மையான அடியார்கள் கூட்டத்தினைக் காணும் வாய்ப்பு கிட்டினால், நமது கண்கள் அடைந்த பேறு அதுவே ஆகும்.)

குலசேகராழ்வார் கண்கள் மட்டும் பேறு அடையவில்லை. யாரை எண்ணி எண்ணி அவரும் அவரது மகளான குலசேகரவல்லியும் ஏங்கினார்களோ அவரையே மாப்பிள்ளையாக அடையும் பேறுப்பெற்றார். அரங்கன் மனமுவந்து ஏற்ற அடியாள் இந்த குலசேகரவல்லி!. இந்த அரங்கனின் அடியாள் ஆண்டாளுக்கு முன்னோடி!. ஸ்ரீராமநவமியன்று இவரை மணந்தான் அரங்கன்.! இன்றும் கோயில் ஸ்ரீராமநவமியன்று இருவருக்கும் ஸ்ரீரங்கத்தில் சேர்த்தி! அரையர்கள் பெருமாள் திருமொழி ஸேவிக்க ஜனங்கள் மத்தியில் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று ஏகஆசனத்தில் பக்தர்களுக்கு அனுக்ரஹிப்பார்கள் இருவரும்!  அதிகம் ஆரவாரமில்லாத இந்த அற்புத சேர்த்தி உற்சவம் அர்ச்சுனன் மண்டபத்தில் நடைபெறும்.   சுந்தரபாண்டியன் இந்த சேரகுலவல்லிக்கு பொன்னாலானத் திருமேனியே செய்து வைத்தான். இந்த விக்ரஹம் மிலேச்சர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.   பின்னர் கோவிலார்கள் பஞ்சலோகத்தில் செய்துள்ளார்கள். குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது.   இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!. இவரால் இயற்றப்பட்டதுதான் ‘முகுந்த மாலை” என்னும் அற்புத ஸமஸ்கிருத துதி!.

பல்லாண்டு பாடும் பாகவதர்கள் கூட்டத்தில் பாடுவதையும், ஆடுவதையும், அவர்களோடு மன்னன் என்ற பற்று அறுத்து பாகவதன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகின்றார் குலசேகரப்பெருமாள்!

நேற்று (5.5.2008) எனது அண்ணா திரு. ஆh;.வீ.ஸ்வாமி அவர்களின் சஷ்டியப்தபூர்த்தி.!  கோவையிலிருந்து நண்பர்; திரு. பாக்கியநாதனின் தலைமையில் ஒரு பாகவத கோஷ்டியினர், கடந்த இரண்டு நாட்களாக அவர்களின் நாம சங்கீர்த்தனம்தான்!  நாட்டியம்தான்!   பிரபந்தங்களைத்தான் முழுக்க அற்புத பண்ணோடு பாடினார்கள். இந்த பிரபந்த பஜனையில் இவர்கள் மெய்மறந்து காட்டிய ஈடுபாடு எழுத்தால் விவரிக்க இயலாதது. எங்களனைவரையுமே பேதமைக் கொள்ளச் செய்தது.   திரு.பாக்கியநாதனுக்கு அவர்கள் பெற்றோர்  நாதமுனிகள் திரட்டிய நாலாயிரத்தைப் பாடும் பாக்யம் பெற்றதால் இந்த பெயா; வைத்தார்களோ? அல்லது நல்ல நாதத்துடன் பாடக்கூடிய பாக்கியம் பெற்றதால் இந்த பெயரோ? அல்லது நல்ல சத்சங்கத்தினை (பாகவதர்கள்) பாக்கியமாகக் கொண்டதால் இந்த பெயர் வைத்தார்களோ?  மிகப்பொருத்தமான பெயரிட்டிருக்கிறார்கள்.    நம்மை கட்டி இழுத்து கண்ணனிடத்து பந்தமாக்குகின்றனர்.  . வாழ்க அவர்தம் தொண்டு பல்லாண்டு! பல்லாண்டு!.   அரங்கனிடத்து இவர்களுக்கு வற்றாத குரல்வளமும், குன்றாத திடமும்,  சலியாத மனமும்,  என்றும் தர மனதார பிரார்த்திக்கின்றேன்!.

-மேலும் பேசுவோம்-      Posted on 6.5.2008.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: