Srirangapankajam

May 6, 2008

PESUM ARANGAN-23

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 9:57 pm
ராஜா குலசேகரருக்கு அரங்கனோடும் அவன்தம் அடியாரோடும் என்று பித்தாகி பிணைந்து நிற்போம் என்று மிக ஆசை.    வைணவ குழாமோடு
கூத்தாட ஆசை.    அரச பொறுப்பு குறுக்கே நின்றது.     அமைச்சர்கள், திருமாலடியார்கள் அனைவரையும் அரண்மனைக்கே வரச்செய்து,  ராஜாவை எங்கும் மெய்மறந்து போகவிடாதபடி காத்தனர்.  . வைணவ கூட்டம் நாளாக நாளாக அங்கு கடலானது.       அரசர் பொறுப்புகளனைத்தையும் மறந்தவராய்,
வைணவ சத்சங்கத்தில் கலந்தவராய்,    பாகவத கோஷ்டியில் சதா பங்கேற்றவராய் இருந்தார்.   ஸ்ரீராமநவமி உற்சவம் அங்கு வந்தது.   அரசரின் இராமபக்திக்குக் கேட்க வேணுமா?   நகைகளாக சொரிந்தனர் அவரது ஆராதன மூh;த்திக்கு!     சமயம் பார்த்து இந்த வைணவக்கூட்டத்தை அரசரிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்தனர், அமைச்சர்கள்.    சில திருவாபரணத்தை ஒளித்து வைத்து அடியார்களின் மீது இட்டனர் பழியை!.  சூது அறியா மாமன்னனும் திருடு போனது பற்றிக்கூட கவலைப்படவில்லை.   அடியார்கள் மீது ஏற்பட்ட பழியினால் மனம் உக்கி மிகவே வருந்தினார்.
.
அந்த அரசின் பழக்கப்படி குற்றம் சாற்றப்பட்டவர்கள் மிக்க விழப்பாம்பு இருக்கும் குடத்தில் கைவிட்டு சத்தியம் செய்ய வேண்டும்.   சத்தியம் தவறாதவர்களை பாம்பு தீண்டாது.     இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழப்பாம்புள்ள குடமும் கொண்டுவரப்பட்டது.    யாரும் எதிர்பாராவண்ணம் திருமாலடியார்களின் சார்பினில் தானே குடத்தினுள் கைவிட்டான் அரசன்.
அடியார்கள் அபகரித்தால்தானே சீண்டுவதற்கு!    அமைச்சர்கள் திருமாலடியார்களை அரண்மனையை விட்டு வெளியேற்ற தாங்கள் செய்த சூழ்ச்சியினை ஓப்புக்கொண்டனர்.   அரச வாழ்வினில் அவருக்கு கசப்பு, வெறுப்பு ஏற்பட்டது.   மகனை மன்னனாக்கினார் . தன் மீது மிக்க பாசம் கொண்ட மகளுடன் பற்றற்றோர்  வாழும் தென்னரங்கம் நோக்கி பயணத்தினைத் தொடர்ந்தார்  முடிதுறந்த ‘குடப்பாம்பில் கையிட்ட” குலசேகர ஆழ்வார்.

இதில் அமைச்சரின் சூழ்ச்சியெல்லாம் அரங்கனின் சித்தமே.    இவர் அரங்கனுக்காக ஏங்கினார்.  . அவன் அதற்கேற்ற சூழ்நிலை ஏற்படுத்தி
அவராக எல்லாம் துறக்கும்படியாக செய்து அவனருகே இழுத்துக்கொண்டார். இந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் அரங்கன் கில்லாடி!  ஆழ்வாராதிகள் தொடங்கி பூர்வாச்சாரியர்கள் ஏன் இன்று வரை யாரை எப்படியெப்படி இழுத்துக் கொள்ள வேண்டுமோ அவர்களை அவர்களாகவே வரும்படி செய்வான் இந்த மாயவன்!    யாராவது ”தான்தான்” ; என்று அகங்காரம் கொண்டால் அவர்களாகவே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்ளும்படியும் செய்வான்!.

”மாவினைவாய் பிளந்து கந்தமாலை வேலை
வண்ணனை என் கண்ணனை – வன்குன்றமேந்தி
ஆவினை அன்றுய்யக் கொண்ட ஆயரேற்றை
அமரர்கள் தந்த தலைவனை அந்தமிழினின்பப்
பாவினை – அவ்வடமொழியைப் பற்றற்றார்கள்
பயிலரஙகத்தரவணையில் பள்ளிக்கொள்ளும் –
கோவினை நாவுற வழுத்தி என்தன்கைகள்
கொய்மலர்துய்ய என்று கொலோகூப்பும் நாளே?”

(குதிரை வடிவம் கொண்டு வந்த கேசி என்னும் அசுரனின் வாயினைக் கிழித்து அவன் இறந்தான் என்று மகிழ்வுற்ற அடியார்களிடம் அன்பு உடையவனை, கடலினைப் போன்று நிறம் கொண்டவனை, என்னுடைய கண்ணபிரானை, இந்திரன் கோபம் கொண்டு பெருமழை பெய்வித்தபோது,
மிகவும் வலிமைக் கொண்ட கோவர்த்தன மலையைக் குடைபோல் தாங்கி,
ஆதிரைகளைக் காத்தருளிய இடையர்களின் தலைவனை, வானோர்களின் தலைவனை, அழகான சுவையுள்ள தமிழ் மொழியில் அமைந்துள்ள இனிமையான பாட்டுக்களைப்போன்று இனிமையானவனை, வடமொழியிலுள்ள ஸ்ரீராமாயணம் போன்ற இனியவனை, இந்த உலக பந்தங்கள் அனைத்தும் துறந்துவிட்டவர்கள் வசிக்கும் திருவரங்கத்தில் ஆதிசேஷன் மீது கண் வளர்கின்ற பெரியபெருமாளை என்னுடைய நாக்கானது தழும்பு ஏற்படும்படியாக துதித்து, எனது கைகளால் பறிக்கப்பட்ட அழகிய மலர்களைத் தூவி வணங்கும் நாள் எதுவோ?)

”பற்றற்றார்கள் பயிலரங்கத்தரவணையில்” என்ற வரியில் அதிக நாட்டமுடன் பாடியிருப்பார் ஆழ்வார் –  அதனை அரங்கேற்றம் செய்திருப்பார் அரங்கன்!

கோவையில் ஒரு புகழ்பெற்ற ஆடிட்டர்  ஸ்ரீ இராமச்சந்திரன் என்று திருநாமம். இன்று அங்குள்ள சிறப்பான பல ஆடிட்டர்கள் இவரின் ஜூனியர்கள்தாம். செல்வசெழிப்புடனும் மிக்க கீர்த்தியுடனும் கோவையில் பணிபுரிந்து வந்தார். ஏதோ ஒரு மிக சங்கடமான சூழ்நிலை.  தான் தேடிய செல்வம் அனைத்தையும் தன் உறவினர்களிடம் பகிர்நதளித்தார்.    உடுக்க மூன்று உடைகள், தான் எளிமையாக வாழத்தேவையான வசதிகளை மட்டும் கொண்டு தன் துணைவியாரோடு ஸ்ரீரங்கம் வந்துவிட்டார்.     இங்கு வந்த சில நாட்களில் இராமனுஜக்கூடம் என்னும் பாகவதர்களை அரவணைத்துப் போஷிக்கும் ஒரு இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பினைத் தந்தார் அரங்கன்.   அதிலேயே ஒரு சின்ன அறையில் மிக்க எளிமையோடு வாழ்கின்றனர் இத்தம்பதியினர். . நெகமம் சாரிட்டி என்ற ஒரு ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிக்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பு   அதிலும் ஒரு முக்கிய பொறுப்பையளித்தார் அரங்கன்.  இப்போது இவருக்கு மூச்சுவிட நேரமில்லை. சதா கைங்கர்யம்தான்.   எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பல கைங்கர்யங்களை செய்து வருகின்றார் இவர்!    எந்த காரியத்தினை எடுத்துக்கொண்டாலும் ஏனோதானோ என்று இவரின் செயலிருக்காது.  எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அவ்வளவு சிறப்புடன், ஒரு தன்னலமற்ற ஈடுபாடுடன் செயலாற்றுவார் இவர்!  ஆடிட்டராக பணியாற்றியபோது கிடைத்தறியாத ஒரு மன நிம்மதியை திருவரங்கனின் கைங்கர்யத்தினால் அடைந்து அவனடியே சரண் என்று வாழ்கின்றார்!

இவருக்கு ஏற்பட்ட சங்கடமும் இவரை ஸ்ரீரங்கத்திற்கு வரவழைப்பதற்காக அரங்கன் செய்த ஒரு வியாஜ்யமே!  முடிவு இவன் சித்தமே!

 
அரங்கன், ஆடாதாரை ஆட்டி வைத்து தானுமாடும் பெருமாள்!”
 
           -மேலும் பேசுவோம்- Posted:  03-05-2008
 
Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: