Srirangapankajam

May 5, 2008

PESUM ARANGAN-22

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 7:58 pm

இராமன் ஒருவரையே சதா சிந்தனையில் நிறுத்தி அரசாட்சி செய்தவர் குலசேகர ஆழ்வார் . இவர் இராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான ‘புனர்வசு’ அன்று அவதரித்தவர். இவரது இராமபக்தி அளவற்றது. இராமயணம் கேட்கும் போதெல்லாம் நெகிழ்ந்திருக்கின்றார். சில கட்டங்களில் கொதித்தெழுந்து தன் சேனைகளுடன் இராவணனுடன் யுத்தம் செய்ய, காலக்ஷேபத்தில் மெய்மறந்து, புறப்பட்டிருக்கின்றார். இத்தனைக்கும் இவருக்கு ‘திடவ்ரதன்’ என்று பெயர்.. மாமன்னன்! சோழ, பாண்டிய அரசுகள் மீது படையெடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கின்றார்.

‘இராம” என்னும் நாமம் இவரை மெய்மறக்க செய்திருக்கின்றது. அனைத்தையும் மறந்து, அவன் ஒருவனை மட்டுமே சிந்தையில் நிறுத்துபவர்கள் நெகிழத்தான் செய்வார்கள். இவர்கள் அந்தந்த அனுபவங்களோடு சிந்தையில் கலந்தவர்கள். இவரது அளவற்ற ஈடுபாட்டினால் இவரது பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்றே அழைக்கப்படுகின்றது. இராமன் மீது இவ்வளவு அன்பு கொண்டவர்க்கு இராமன் ஆராதித்த அரங்கன் மீது எவ்வளவு ஆசையிருக்கும்! மற்ற ஆழ்வார்க்கு இல்லாத ‘பெருமாள்’ என்னும் பேரினைப் பெற்றவர் இந்த குலசேகரப்பெருமான்! இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலே அரங்கனை முன்நிறுத்திதான்.

”இருளரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தியணிபணம் ஆயிரங்களார்ந்த –
அரவரச பெருஞ்சோதி அனந்தனென்னும்
அணிவிளங்கும் உயர்வெள்ளையணையை மேவி –
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர் பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் –
கருமணியைக் கோமளத்தைக் கண்டுகொண்டு என்
கண்ணினைகள் என்று கொலோகளிக்கும் நாளே?”

(மிகவும் தெளிந்து விளங்கும் நீரினையுடைய காவிரியானது, தனது அலைகள் என்ற கைகளால் இதமாகத் திருவடிகளைப் பிடித்து விடும்படி தழுவி ஓடும் இடமான திருவரங்கம் என்னும் பெரிய நகரத்தில், இருளானது சிதறி ஓடும்படி, ஓளி வீசும் மாணிக்கக்கற்களை பொருத்தியுள்ள நெற்றியினையும், மிகவும் நேர்த்தியான ஆயிரம் படங்கள் கொண்டு நாகங்களுக்கு அரசன் என்னும் மிகுதியான கம்பீரத்தையுடைய ஆதிசேஷனாகிய அழகுள்ள வெண்மைநிற படுக்கையில் கண்வளர்கின்ற நீல ரத்னக்கல் போன்ற பெரியபெருமாளை, என்னுடைய கண்கள் குளிர்ந்து வணங்கி நான் மகிழ்வுறும் நாளானது எந்நாளோ?)

என்றவாறு அரங்கனை நினைத்து ஏங்குகிறார் அரங்கனை அடைவதற்கு இந்த ஏக்கம் மிக முக்யம். இந்த தாபமிருந்தால் போதும் – அவன் செயல்பட தொடங்கிடுவான்.

உங்கள் அனைவருக்குமே திரு க.ஸ்ரீதரன் அவர்களைத் தெரியும் என்று நினைக்கின்றேன். மிக பிரமாதமான http://www.namperumal.com மற்றும் http://www.namperumal.wordpress.com எனும் வலைத்தளங்களின் சொந்தக்காரர். அரங்கனுக்கு அந்தரங்கமானவர். சமீபத்தில் இவரது இல்லத்திற்கு சென்றிருந்தோம். எல்லா திருப்பதிகளின் பெருமாளை சேவித்த நிறைவு எங்களுக்கு. அந்தளவுக்கு வீடு முழுக்க பெருமாள்தான். சமையலறை, பறைகள் என்று ஒன்றும் பாக்கியில்லை. நீக்கமற நிறைந்திருந்தனர் ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் புடைசூழ அனைத்து பெருமாளும். சிந்தை எங்கும் இங்கு இருப்பவருக்குப் பிறழாது. இவர் சுமார் 4 மாதங்களுக்கு முன் பெருமாள் ஸேவிக்க வந்திருந்தார். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி வாசலிலுள்ள ‘பாதுகை’யை பார்த்து மெய்மறந்திருக்கின்றார். . இங்கு வேலைக் கிடைத்தால் எப்படியிருக்கும்? என்று க்ஷணநேரம் எண்ணியிருக்கின்றார். பிறகு அவரை நம்பெருமாளிடத்து ஸேவை பண்ணி வைக்கும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது. திரும்ப ஊருக்கு விடைபெற்றுச் செல்ல என்னிடம் வந்தார். ”என்னவோ இந்த முறை அரங்கனை மறக்கவே முடியவில்லை! ஊருக்கு போவதற்கே பிடிக்கவில்லை. வேலையை ராஜினாமா செய்துவிட்டுக் கூட வந்துவிடலாம் போலிருக்கின்றது” என்று கண்ணீர் மல்க வருத்துமுடன் அரங்கனைப் பிரிந்து சென்றார். அவ்வளவுதான்! அரங்கன் இதனை செவிமடுத்து கேட்டிருப்பான் போலும்! அவர் செய்துவந்த வேலையில் ஏகப்பட்டத் தடைகள் – வேறு வேலையும், இவருக்கு ஏகமாக பல தகுதிகளிருந்தும், அமையாத சூழ்நிலை – இந்நிலையில் எதில் பாதுகையைப் பார்த்து ஆசைப்பட்டாரோ, அந்த ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியிலிருந்து அவருக்கு கம்ப்யூட்டர் துறைக்குத் தலைவராக பதவியேற்குமாறு அழைப்பு! அரங்கன் என்னமாய் சதுரங்கம் ஆடியிருக்கின்றான் பாருங்கள்!. அவரது ஏக்கத்தினை பயன்படுத்தி இழுத்து வருகின்றான் இந்த அரவரச பெருஞ்சோதீ!

”ஏக்கமுடன் யாராவது அகப்படுவாரா என்று
தாக்கமுடன் காத்திருப்பான் அரங்கன்”

-மேலும் பேசுவோம்- Posted: 03-05-2008

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: