Srirangapankajam

May 3, 2008

PESUM ARANGAN-20

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 5:54 pm

திருமழிசையாழ்வார் மிக அற்புதமாக ஸ்ரீரங்கநாதனின் கிருபையை ”ஆட்பார்த்துழி தருவாய்’ என்று ஒரு பாசுரத்தில் வர்ணிக்கின்றார். நமக்கு அடிமைப்படுவோர் யாராவது உண்டா? என்று தாபத்துடன் தேடுகின்றராம் அரங்கன்!. உண்மைதான்! இதோ இப்போது சித்திரைத் திருநாள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஏறி காலையும் மாலையும் நான்கு தெருக்களிலும், ஆஸ்தான மண்டபத்திற்கும் அலைகின்றார் அரங்கன்! நாளை காலை சித்திரைத் தேரையொட்டி ஏகமாக கிராமத்து ஜனங்கள்.

இந்த பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் மத்தியில் அட்டகாசமாக அரங்கன் வருவதே தனி அழகு! மேககூட்டத்திற்கிடையில் வரும் பூரணச்சந்திரனைப் போல் ஆர்ப்பரித்து வருகின்றார். ஆஸ்தானம் திரும்பும் போது ஒரே குதிதான்! வையாளி நடையென்பர். அதுவும் குறுக்கெயும் நெடுக்கையும் குதியாய் குதித்து திரும்புவார். இதனைக் கோணவையாளி என்பர். தம் மக்களைக் கண்ட மகிழ்ச்சி மணவாளனுக்கு! அப்போதெல்லாம் இவரின் இந்த பாசுரத்தினை அநுசந்திக்க வேண்டும்! ஆழ்வார் எவ்வளவு பொருத்தமாக பாடியிருக்கின்றார். அரங்கன் அலையும் போதெல்லாம் ‘ஆட்பார்த்துழிதருவாய்’ ஞாபகம் வரவேண்டும். உற்சவங்களில்லாத நாட்கள் ஸ்ரீரங்கத்தில் வெகு சொற்பமான நாட்களே! பெரும்பாலான நாட்களெல்லாம் அரங்கன் அலைந்து அலைந்து அடியவரை ஆட்கொண்ட வண்ணம்தான்!. ‘அடியவர் உய்யவே அரங்கன் இங்கு பள்ளி கொண்டுள்ளார்’ என்று ஸ்ரீரங்கமஹாத்மியம் சொல்கிறது.

ஆட்பார்த்துழி தருவாய் கண்டு கொளென்றும் – நின்
தாட்பார்த்துழி தருவேன் தன்மையை – கேட்பார்க்கு
அரும் பொருளாய் நின்ற அரங்கனே – உன்னை
விரும்புவதே விள்ளேன்மனம்.

( உன்னை மனதாலும், தியானத்தினாலும் அறிய முற்படுவோர்களுக்கு அறிய முடியாமல் இருக்கின்ற பரம்பொருளான பெரியபெருமாளே! நமக்கு அடிமைப் படுவோர் யாராவது உண்டா? என்று தேடிப்பார்த்து அருள் செய்பவனே! உன்னுடைய திருவடியினை நான் என்றும் பெறவேண்டும் என்று எப்போதும் ஆசையுடன் திரிகின்ற இந்த எண்ணத்தினை எனக்குள் என்றும் இருக்குமாறு நீ அருள் புரிய வேண்டும். உன்னையே நினைத்து ஆசைப்பட்டிருக்கும் நினைவை நான் எப்போதும் என் நெஞ்சில் கொண்டுள்ளேன். நான் உன்னை விட்டாலும் என் மனது உன்னை விடாது.)

திருநாட்களில் அரங்கன் உலாவரும் போது அந்த வாகனங்களைக் கவனித்து இருக்கின்றீர்களா? அரங்கன் சில வாகனங்களை அடக்கி ஓட்டி வருவார். சில வாகனங்களில் அபயஹஸ்தத்தோடு ஸேவைபுரிந்த வண்ணம் வருவார்.

ஸிம்ஹ வாகனம், யாளி வாகனம், ஹம்ஸ வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அவற்றை கழுத்தில் பாசம் கொண்டு கட்டி (பாசம் என்றால் ஸ்ரீரங்கம் கோவிலில் கயிறு என்று அர்த்தம் – இதற்கு பரிபாஷை என்று பெயர் ஒன்றையொன்று இந்த கயிறானது இணைப்பதால், இதற்கு நம் கோவில் வழக்கில் ‘பாசம்’ என்று பெயர்.) கம்பீரமாக அமர்ந்து வருவார். இந்த வாகனங்களில் சில பார்ப்பதற்கு மிகப் பெரியதாகவோ, அல்லது, கோரைப்பற்களுடன் பயங்கரமானதாகவோயிருக்கும். ஏன் இதற்கு மட்டும் பாசம் போட்டு அடக்குகின்றான், அரங்கன்? வெகுநாட்களாக என் மனதிலுள்ள இந்த கேள்விக்கு இந்த ஆழ்வார் பதில் சொல்வது போலுள்ளது!. மீண்டும் ஒருமுறை இந்த பாசுரத்தின் அர்த்ததை கவனிப்போம்!

”உன்னுடைய திருவடியினை நான் என்றும் பெறவேண்டும் என்று எப்போதும் ஆசையுடன் திரிகின்ற இந்த எண்ணத்தினை எனக்குள் என்றும் இருக்குமாறு நீ அருள் புரிய வேண்டும். உன்னையே நினைத்து ஆசைப்பட்டிருக்கும் நினைவை நான் எப்போதும் என் நெஞ்சில் கொண்டுள்ளேன். நான் உன்னை விட்டாலும் என் மனது உன்னை விடாது.”

நான் என் மனதில் பட்டதை சொல்லிவிடுகின்றேன்! இந்த வாகனங்களை இந்திரியங்களின் இச்சைக்குட்பட்ட நம் மனதிற்கு ஈடாகக் கொள்வோம். இதனையடக்கி இறையருள் பெற நாம் என்றும் அரங்கனை தியானிக்க வேண்டும். அவன் வந்து நம் நெஞ்சில் அமர்ந்தால் நம் மனம் அவனருளால் பண்பட்டு சீராக ஓடும்! சரி.. மற்ற வாகனங்கள்! கவனியுங்களேன்! அனைத்துமே ஏதாவதொரு வகையில் அரங்கனின் அன்பைப் பெற்றதாகயிருக்கும் அல்லது துன்பமே விளைவிக்காததாகயிருக்கும்! நீங்கள் இப்போது கேட்கலாம் ஹம்ஸத்தினை ஏன் பாசம் போட்டு கட்டியிருக்கின்றார்கள்? என்று! ஹம்ஸத்தினைப் போன்று ‘நாம்தான் அழகு” என்று கர்வம் கொண்டு அலட்டிக் கொள்ளாதே! என்று உணர்த்துகின்றாரோ என்னவோ?

” மனம் ஒரு குரங்கு – அரங்கன் அமர்ந்தால் அது மிக ஒழுங்கு”

-மேலும் பேசுவோம்- Posted: 02-05-2008

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: