Srirangapankajam

May 2, 2008

PESUM ARANGAN-19

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 1:44 pm

ஒரு மஹாபெரியவர், வேரை மண்ணிற்கு வெளியே விட்டு தழையுடன் கூடிய நுனிபாகத்தை மண்ணில் புதைத்து நட்டு, ஒரு ஓட்டை சட்டியினால் நீர் அனைத்தும் ஒழுக அந்த செடிக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தார். சாக்கியம், சமணம், சைவம் அனைத்தும் தெளிவாக கற்றறிந்த, திருமழிசையைச் சார்ந்த ஒரு யோகியார் வரும் சமயத்தில்.

அந்த யோகிக்கு இவர் செய்யும் இந்த உபயோகமில்லாத வேலையைப் பார்த்து அவரிடமே கேட்டு விட்டார், ஏனிந்த உபயோகமற்ற வேலை? என்று. அந்த பெரியவா; அவரிடம் திருப்பிச் சொன்னார், யோகி செய்து கொண்டிருப்பதும் அதுதானே? என்று. யோகியாருக்கு தெளிவேப் பிறக்காத நிலையில் அவர் செய்யும் வாதங்கள், தலைகீழாக நடப்பட்ட செடிக்கு, ஓட்டைச் சட்டியினால் நீர் ஊற்றுவது போல்தான், என்றார். யோகியார் அந்த க்ஷணமே உண்மை உணர்ந்தார்.

அவர் மூலம் ஆதிமூலத்தினையறிந்தாh;. அந்த பெரியவர் பேயாழ்வார் – யோகியார் திருமழிசையாழ்வார். மூதலாழ்வார்கள் மூவரின் ஆசிகளையும் நேரில் பெற்ற மஹாயோகி இவர். திருமழிசையெனும் தலத்தில் பிரம்பம் புதருக்கு அருகே பிண்டமாக வீசப்பட்டு, பிண்டம் அவனருளால் பிறந்த குழந்தையாக மாறி, திருவாளன் எனும் கூடை முடையும் குறவனாலும் அவனது மனைவியாகிய பங்கயசெல்வியினாலும் வளர்க்கப்பட்டவர் இவ்விருவருக்கும் கணிக்கண்ணன் என்ற மகன் பிறந்து, இவர் திருமழிசையாழ்வாருக்கு தம்பியாகும் பாக்கியம் பெற்றார். ஒரு முறை இவர் அரசனால் நாட்டை விட்டு வெளியேறும் படி நேரிட, திருமழிசையாழ்வார் திருவெக்காவினில் சயனித்துள்ள மணிவண்ணனை,

கணிக்கண்ணன் போகின்றன் – காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன், நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக்கொள்

என்று ஆணையிட, அன்புக்கு ஆட்பட்ட பெருமாளும் நாகபடுக்கையை சுருட்டிக் கொண்டு கிளம்பி விட்டாராம். அரசன் தவற்றையுணர்ந்து மன்னிப்பு
கேட்க மீண்டும் திரும்பினராம் அவர்களனைவரும். இவ்வாறு ஆழ்வார் சொன்ன
சொல் கேட்டதினால் அந்த பெருமாள் சொன்னவண்ணம் செய்த பெருமாள் ஆனார்.

இவருக்கு அமுதன் மேல் ஒரு தனி ஈடுபாடு. அமுதனை சந்திக்க போகும்போது திருப்பெரும்புலியுர் என்னும் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு வேதம் ஓதி யாகம் வளர்த்துக் கொண்டிருந்த அந்தணர்கள் இவரது பெருமையறியாமல் அலட்சியம் செய்தனர். கோவிலுள்ள எம்பெருமான் இவரது வருகையினால் மிக்க ஆனந்தம் கொண்டு இவர் செல்லும் திசைகள் நோக்கி, மாறி மாறித் திரும்பிக் கொண்டிருந்தார். அலட்சியம் செய்தவர்கள் அறியாது செய்த தவற்றிக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டு யாகசாலைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கும் பொறாமைக் கொண்ட சிலர் அவமதிக்க, இவரை அங்கு அழைத்துவந்தவர்கள் அழுது கதற, ஆழ்வார் தன் உள்ளத்தில் உறைந்தவனை வேண்ட, யாகசாலையே அதிர்ந்தது. திருமழிசையின் நெஞ்சம் பிளந்து உள்ளே பாற்கடலில் பள்ளிக்கொண்ட பரமன் சகல பரிவாரங்களுடன் அவர்களுக்குக் காட்சியளித்தார். . யாகத்தின் பயனை இத்திருத்தலத்தில் இவரது வருகையினால் பரமன் அனைவருக்கும் அருளினார்.

Thiru Perum Puliyur

இவர் ஸ்ரீரங்கநாதனைத் தான் உணர்ந்தது போல் வேறு யார் அறிந்து கொள்ள முடியும் என்கிறார்.

பாலில் கிடந்ததுவும் பண்டரங்கம் மேயதுவும்
ஆலில் துயின்றதவும் ஆரறிவார்? ஞாலத்து
ஒரு பொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யான் அறிந்தவாறு

(திருபாற்கடலில் க்ஷீராப்திநாதனாக சயனிததுள்ளவனும், பல காலமாக
திருவரங்க நகரிலே பள்ளி கொண்டவனும், பிரளய காலத்தில் சிறிய ஆலையிலை மேல் அதனினும் சிறு குழந்தையாக கிடந்தவனும், இந்த உலகம் முழுவதற்கும் ஒரே மூலப்பொருளாயும் காரணமாகவும் உள்ளவனும், வானோர்களுடைய மூலமாய் உள்ளவனும், முதன்முதலாக உருவாக்கிய நீரில் சயனித்தவனும் ஆகிய பெரியபெருமாளை நான் உணர்ந்து அறிந்து கொண்டது போல், வேறு யார் அறிவார்கள்? )

உண்மைதான்! நன்கு அறிந்ததினால்தான் அரங்கன் இவர் சொன்னபடியெல்லாம் ஆடினார்.

ஆழ்வார் ஆழங்கால் பட்டார் -. அரங்கன் அவருக்கு ஆட்பட்டார்

Advertisements

Blog at WordPress.com.

%d bloggers like this: