Srirangapankajam

May 1, 2008

PESUM ARANGAN-18

Filed under: PESUM ARANGAN — srirangapankajam @ 2:37 pm
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வாரைத் தொடர்ந்து பேயாழ்வார், எம்பெருமான் விண்ணகரம், திருவெக்கா, வேங்கடம், திருவேளுக்கை, திருக்குடந்தை, திருவரங்கம் ஆகிய திருப்பதிகளில் மிகவும் எளியவனாய்,  பெருங்கருணையுடையவனாய் அருளுகின்றான், என்கிறார்.
 
 திருக்கோவிலுரிலுள்ள இடைக்கழியில் பொய்கையாழ்வார் தாம் வீற்றிருந்த கோலத்தை தியாகம் செய்து பூதத்தாழ்வாருடன் சேர்ந்து அமர்கின்றார்.  பேயாழ்வார் வந்தவுடன் பொய்கையாழ்வார் வீற்றிருந்த மற்றும் அமர்ந்த கோலத்தையும், பூதத்தாழ்வார் அமாந்த நிலையினையும் தியாகம் செய்து, பேயாழ்வாருடன் நின்ற கோலத்தில்,   ஒருவர் புறவிளக்கையும், மற்றொருவர் அகவிளக்கையும் ஏற்றி இறைவனைப் போற்றுகின்றனர்.  முதலாழ்வார்கள் இவர்கள் மூவர்க்கிடையேயும் நெடுமாலும் நெருக்கி நிற்கிறான்.  இம்மூவரும் தன்னலமில்லாது தியாக உணர்வோடு திரிவிக்ரமனைத் தியானிக்க,  அவனும் இம்மூவரோடு சேர்ந்து நால்வர் ஆனார். 
 
எங்கு தன்னலமிலலாத தியாகம் உள்ளதோ அங்கு இறைவன் உள்ளான்.
 
ஸ்ரீவில்லிபுத்தூரில் கண்ணையன் என்றவொரு சாத்தாத ஸ்ரீவைஷ்ணவன்.  தாஸநம்பியாக சுமார்  70 வருடங்களுக்கு முன் அங்கு கைங்கர்யம் பார்த்து வந்தார்.  இந்த ஸ்வாமி ஆண்டாளுக்கு அடிமையாகி, கைங்கர்யத்தில் வெகு சிரத்தையுடனிருந்தார்.   இவருக்கு நாடகக் கலை மீதும் மோகம்.  சிறந்த நாடக நடிகராகி வெகுவாக அந்த காலத்தில் பிரபலமடைந்தார்.  பெரிய செல்வந்தன் ஆனபோதிலும் ஆண்டாளை மறக்கவில்லையிவர்.   தான் சேர்த்து வைத்த சொத்துக்களையெல்லாம் ஆண்டாளின் திருவாபரணத்திற்கே செலவிட்டு மிக மிக நேர்த்தியான பல திருவாபரணங்களை ஆண்டாளுக்குச் சூட்டி அழகு பார்த்தார்.  அங்குள்ள தங்கக்குடம் இவர் செய்ததுதான்.   ஆண்டாளின் மார்பினில் சாற்றியிருக்கும் பதக்கம் ஒன்று இன்று விலைமதிக்க முடியாதது.  இவ்வளவு செய்தும் திருவாபரணங்கள், தங்கக்குடம் எதிலும் இவருடைய இனிஷியலைக் கூட நாம் பார்க்கவியலாது.   கைங்கர்யம் சிரத்தையாகப் பார்த்து பிரசித்துப் பெற்று தாம் பெற்றச் செல்வங்களனைத்தையும் ஆண்டாளுக்கே அர்ப்பணித்து,  கைங்கர்யம் செய்தே உயிர் நீத்த தன்னலமில்லாத,  இறைநலம் மட்டுமே கொண்ட ஒப்பிலா மஹான் இவர்!
.
 
                                  -மேலும் பேசுவோம்- -Posted on 28th April’ 2008-
 

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: